Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 132)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

கைவல்யம் மூலம் பாபங்கள் விலகுவதில்லை

மூலம் – “ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்ற இவ்வளவால் “மாமேவைஷ்யஸி” என்று சொன்ன பகவத் ப்ராப்தி ஸித்திக்குமோ? ஸர்வபாப நிவ்ருத்தி உண்டாயே பகவத் ப்ராப்தியன்றிக்கே ஸ்வாத்ம மாத்ர அநுபவரூபமான கைவல்யம் பெறுவாருமில்லையோ? பகவத் ப்ராப்தியிற்காட்டில் வேறுபட்ட கைவல்யம், “இஹ லௌகிகர்மைச்வர்யம் ஸ்வர்காத்யம் பாரலௌகிகம் | கைவல்யம் பகவந்தம் ச மந்த்ர: அயம் ஸாதயிஷ்யதி” என்று நாரதாதிகளாலே சொல்லப்பட்டதிறே. ஆளவந்தாரும் “ஐச்வர்யாக்ஷர யாதாத்ம்ய பகவச்சரணார்திநாம்” என்றும், “ஸம்ஸ்ருத்யக்ஷர வைஷ்ணவாத்வஸு” என்றும் அருளிச்செய்தார். கத்யத்திலும் “ஸர்வகாமாம்ச்ச ஸாக்ஷராந்” என்கிற வாக்யமும் உபாத்தமாயிற்று. ஸ்ரீகீதாபாஷ்யாதிகளிலும் இவ் அர்த்தம் ப்ரபஞ்சிதம். ஆகையால் “ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்ற ஸர்வபாப நிவ்ருத்தி, கைவல்யத்துக்கும் பகவத் ப்ராப்திக்கும் பொதுவன்றோ?” என்கை மந்த சோத்யம். எங்ஙனே என்னில், ஸர்வபாபங்களும் கழிந்தால் ஸ்வத:ப்ராப்தமான பகவதநுபவத்தை இழந்து கிடக்கைக்குக் காரணமில்லாமையாலே அப்போது பகவதநுபவ ரஹிதமான ஆத்ம மாத்ர அநுபவம் கடியாது. ஆகையால் அவ் அவஸ்தையில் ஐச்வர்யமும் ஜராமரணாதி துக்கங்களும் வருகைக்கு ஈடான கர்மங்கள் கழிந்து, பரிபூர்ண பகவதநுபவத்துக்குப் ப்ரதிபந்தகமான கர்மம் கழியாதே கிடக்கிறவளவிலே, “யம் லப்த்வா சாபரம் லாபம் மந்யதே நாதிகம் தத:” என்னும்படியிருப்பது ஒரு ஸ்வாத்மாநுபவ ஆநந்தவிசேஷம். “ஆத்மார்த்த சேத் த்ரய: அப்யேதே தத் கைவல்யஸ்ய ஸாதகா:” என்று சொல்லுகிறபடியே தனக்கு சக்யமாயிருப்பதோர் உபாய விசேஷத்தாலே ஸித்தித்த இவ் அநுபவத்தை, அசிதநுபவத்தோடும் பகவதநுபவத்தோடும் துவக்கில்லாதபடியாலே, கைவல்யமென்று பேரிட்டார்கள்.

– கீதை (18-66) - ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – அனைத்து பாபங்களையும் விலக்கி – என்பதற்கு ஏற்ப, அனைத்து பாபங்களும் விலகின நிலையில், “மாமேவைஷ்யஸி – நீ என்னையே அடைவாய்” என்று பகவான் உரைத்தபடியே “பகவானை அடைதல்” என்பது ஏற்படுமோ? அனைத்து பாபங்களும் நீங்கிய பின்னர், “பகவானை அடைதல்” என்பது அல்லாமல், “தனது ஆத்மஸ்வரூபத்தை மட்டுமே அனுபவித்தல்” என்ற வடிவில் உள்ளதான கைவல்யத்தையும் சிலர் அடைகிறார்கள் அல்லவோ? “பகவானை அடைதல்” என்பதைக் காட்டிலும் வேறுபட்டதான கைவல்யமானது, நாரதீயகல்பத்தில் - இஹ லௌகிகமைச்வர்யம் ஸ்வர்காத்யம் பாரலௌகிகம் | கைவல்யம் பகவந்தம் ச மந்த்ர: அயம் ஸாதயிஷ்யதி – இந்த மந்த்ரமானது (திருமந்த்ரம்) இம்மையில் செல்வத்தையும், மறுமையில் ஸ்வர்கத்தையும் அளிக்கிறது; மேலும் கைவல்யம் மற்றும் பகவத் அனுபவத்தையும் அளிக்கிறது – என்று நாரதமஹரிஷி போன்றவர்கள் கூறினார்கள் அல்லவோ? ஆளவந்தாரும், கீதார்த்த ஸங்க்ரஹத்தில் (12) – ஐச்வர்ய அக்ஷர யாதாத்ம்ய பகவச் சரணார்திநாம் – ஐச்வர்யம், ஆத்ம அனுபவம், பகவத் திருவடிகளின் அனுபவம் – என்றும், சதுச்ச்லோகி (3) - ஸம்ஸ்ருத்யக்ஷர வைஷ்ணவாத்வஸு – ஆத்ம அனுபவம் மற்றும் பகவத் அனுபவம் – என்றும் அருளிச்செய்தார். கத்யத்தில் - ஸர்வகாமாம்ச்ச ஸ அக்ஷராந் – அனைத்து விருப்பங்களையும், கைவல்யத்தையும் விட்டு – என்ற வாக்கியமானது எடுத்துக் கூறப்பட்டது. இந்தக் கருத்தானது ஸ்ரீகீதாபாஷ்யம் போன்றவற்றிலும் விரிவாகக் கூறப்பட்டது. எனவே “அனைத்து பாபங்களும் விலகுதல்” என்பது கைவல்யம் மற்றும் பகவானை அடைதல் ஆகிய இரண்டிற்கும் பொதுவானதே ஆகும் அல்லவோ என்று கேட்பது மந்தமான புத்தி கொண்ட கேள்வியாகும். எப்படி? அனைத்து பாபங்களும் நீங்கிய பின்னர், தானாகவே கிட்டவல்லதாகிய பகவத் அனுபவத்தைப் பெறாமல் இருப்பதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை; ஆகவே அந்த நிலையில் பகவத் அனுபவத்தைத் தவிர்ந்துள்ளதான ஆத்ம அனுபவம் மட்டும் கிட்டுதல் என்பது ஏற்படாது. எனவே அத்தகைய சூழலில், ஐச்வர்யம் மற்றும் வயோதிக மரண துக்கங்கள் உண்டாவதற்குக் காரணமாக உள்ள கர்மங்கள் அனைத்தும் கழியப் பெற்று, பரிபூர்ணமான பகவத் அனுபவம் உண்டாவதற்குத் தடையாக உள்ள ஏதேனும் ஒரு கர்மம் கழியாமல் உள்ளபோது, கீதை (6-22) - யம் லப்த்வா சாபரம் லாபம் மந்யதே நாதிகம் தத: - ஆத்ம அனுபவம் என்னும் நிலையில் உள்ள ஒருவன் அதிலிருந்து ஓய்ந்தாலும், ஆத்மாவை மட்டுமே விரும்புபவனாக - என்பதற்கு ஏற்ப ஆத்மாவை அனுபவிப்பதால் ஒரு ஆனந்தம் உண்டாகிறது. கீதார்த்த ஸங்க்ரஹம் (27) - ஆத்மார்த்த சேத் த்ரய: அப்யேதே தத் கைவல்யஸ்ய ஸாதகா: - ஜீவாத்ம அனுபவம் என்னும் கைவல்யத்தை கர்மயோகம், ஞானயோகம் மற்றும் பக்தியோகம் ஆகிய மூன்றும் அளிக்கவல்லவை – என்று கூறுவதற்கு ஏற்ப, தனது சக்திக்கு ஏற்றதொரு உபாயம் மூலம் கிட்டிய இந்த ஆத்ம அனுபவமானது, “அசித் பொருள்களை அனுபவித்தல், பகவத் அனுபவம் பெறுதல்” ஆகிய இரண்டினோடும் சேராமல் உள்ளதால், இதற்கு “கைவல்யம்” என்று பெயரிட்டனர்.