Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 130)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
தடைகள் விலகுதல் மற்றும் விருப்பம் நிறைவேறுதல்
மூலம் – இப்படி “ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்று கார்யகாரண ரூப ஸமஸ்த ப்ரதிபந்த ப்ரவாஹ நிவ்ருத்தியைச் சொல்ல, ஸ்வத:ப்ராப்தமான பரிபூர்ண பகவதநுபவ ஆவிர்பாவம் சொல்லிற்றாயிற்று. “யதா ந க்ரியதே ஜ்யோத்ஸ்நா மலப்ரக்ஷாளநாந்மணே: | தோஷ ப்ரஹாணாந் ந ஜ்ஞானம் ஆத்மன: க்ரியதே ததா || யதோதபாந கரணாத் க்ரியதே ந ஜலாம்பரம் | ஸதேவ நீயதே வ்யக்திம் அஸத: ஸம்பவ: குத: || ததா ஹேயகுண த்வம்ஸாத் அவபோதாததயோ குணா: | ப்ரகாச்யந்தே ந ஜன்யந்தே நித்யா ஏவாத்மனோ ஹி தே ||” என்று ஸ்ரீசௌநகபகவான் அருளிச்செய்தான். ஜ்ஞாந த்ரவ்யமும், இதினுடைய ஸர்வவிசேஷ விகாஸத்துக்கு ஸ்வரூப யோக்யதா ரூபையான சக்தியும் நித்யங்களாகையாலே அவற்றில் ஆவிர்பாவ சப்தம் முக்யம். ஸர்வவிசேஷ விகாஸமும், துக்க நிவ்ருத்தியாதிகளும், ஸங்கல்பாதிகளும், கைங்கர்யங்களும் ஆகந்துகளாயிருக்க, இவை நிவ்ருத்தி ப்ரதிபந்த ஸ்வரூப உபாதிகங்களாகையாலே மேல் முழுக்க நடக்கும்படி தோற்றுகைக்காக இவற்றில் “ஆவிஸ்ஸ்யுர்மம ஸஹஜ கைங்கர்ய விதய:” இத்யாதிகளாலே ஆவிர்பாவ சப்தம் ப்ரயுக்தமாகிறது. ஸ்வரூப யோக்யத்வத்தாலே கர்போபாதிகமாக பஹுவிதமான ஆநுகூல்ய ப்ராதிகூல்யங்கள் நடந்த பகவத்விபூதியான வஸ்துக்களுக்கு மேலெல்லாம் மோக்ஷதசையில் ஆநுகூல்யமே ஸ்வரூப ப்ராப்தமாகையாலே, அதிலும் ஆவிர்பாவ சப்தத்துக்கு விரோதமில்லை. ஆகையால் “ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்ன இவ் அநுகூல அவஸ்தாந்தரம் ஸித்தமாயிற்று.
– இவ்விதமாக கீதை (18-66) – ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – என்பது, காரண வடிவில் உள்ள தடைகள் (பகவான் தண்டித்தல்) மற்றும் கார்ய வடிவில் உள்ள தடைகள் (அவித்யை போன்றவை) ஆகிய அனைத்தின் நீக்கம் குறித்துக் கூறுவதாக உள்ளது; இதன் மூலம், பகவத் அனுபவம் பரிபூர்ணமாக வெளிப்படுகின்ற நிலையைக் கூறுவதாகக் கருத்து. இதனை பகவான் சௌநகர் ஸ்ரீவிஷ்ணுதர்மம் (104 – 55, 56, 57) - யதா ந க்ரியதே ஜ்யோத்ஸ்நா மலப்ரக்ஷாள நாந்மணே: தோஷப்ரஹாணாந் ந ஜ்ஞாநமாத்மந: க்ரியதே ததா யதோதபாநகாணாத் க்ரியதே ந ஜலாம்பரம் ஸதேவ நீயதே வ்யக்திம் அஸத: ஸம்பவ: குத: ததா ஹேய குணத்வம்ஸாத் அவபோதாதயோ குணா: ப்ரகாச்யந்தே ந ஜ்ஞாயந்தே நித்யா ஏவ ஆத்மாநோ ஹி தே - வைரம் போன்ற கற்களில் உள்ள அழுக்கை நீக்குவதால் அதற்குப் புதிதாக ஒளி உண்டாவதில்லை; இது போன்றே சரீர தொடர்பு காரணமாக ஏற்பட்ட தோஷங்களை நீக்குவதால் ஆத்மாவிற்குப் புதிதாக ஞானம் உண்டாகுவதில்லை; குளம் கிணறு போன்றவற்றை வெட்டும்போது அங்கு புதிதாக நீர் உண்டாவதில்லை, மறைந்திருந்த நீர் மீண்டும் வெளிப்படுகிறது; இது போன்று தாழ்வான குணங்கள் அனைத்தும் மோக்ஷம் அடையும்போது நீங்கிய பின்னர், ஞானம் போன்ற இயல்பான தன்மைகள் ஆத்மாவிடம் வெளிப்படுகின்றன, அவை புதிதாக உண்டாவதில்லை, அவை ஆத்மாவிடம் எப்போதும் உள்ளவை அல்லவோ – என்று அருளிச்செய்தார். ஞானம் என்னும் திரவியம் (அதாவது தர்மபூத ஞானம்) மற்றும் அனைத்தையும் பரவி நிற்கும் அதன் சக்தி ஆகிய இரண்டும் நித்யமாக உள்ளதால், அவற்றைக் குறித்து “இருப்பது வெளிப்படுதல்” என்று கூறுவதே சரியானதாகும். அனைத்து வஸ்துக்களிலும் ஞானம் பரவி நிற்பது, துக்கங்களிலிருந்து விடுதலை, ஸங்கல்பங்கள், கைங்கர்யங்கள் ஆகிய அனைத்துமே புதியதாக வருபவையே ஆகும்; ஆனாலும் அவற்றின் வெளிப்படுதல் என்பது “தடைகள் நீங்குதல்” முதலான உபாதிகளைப் பொறுத்தே அமைகிறது என்பதை உணர்த்தும்விதமாகவும், இந்த உபாதிகள் மறையும்போது இவை அனைத்தும் தாமாகவே வெளிப்படுகின்றன என்பதாலும் இவற்றைக் குறித்து, அஷ்டச்லோகி (3) - ஆவிஸ்ஸ்யுர்மம ஸஹஜ கைங்கர்ய விதய: - எனக்கு இயல்பாகவே அமைந்துள்ள பலவிதமான கைங்கர்யத்தன்மைகள் வெளிப்படட்டும் – என்பது போன்ற வரிகளில் உள்ளது போன்று, “இருப்பது வெளிப்படுதல்” என்று கூறுவதே பொருத்தமாகிறது. ஸம்ஸார நிலையில் உள்ளபோது, இந்த உலகில் பகவானுடைய உடைமைகளாக உள்ள அனைத்து வஸ்துக்களில், பலவிதமான வஸ்துக்கள் நமக்கு ஏற்புடையதாக இல்லாமலும், சில வஸ்துக்கள் மட்டுமே ஏற்புடையதாக உள்ளதாகவும் இருப்பதற்குக் காரணம், “கர்மம்” என்னும் உபாதியே ஆகும். ஆனால் அவை அனைத்தின் இயல்பும் “ஏற்கப்படக்கூடியவை” என்பதாகவே உள்ளதால், மோக்ஷ நிலையில் அவை அனைத்துமே ஏற்புடையதாக ஆகின்றன என்பதால், அந்த நிலையிலும் “இருப்பது வெளிப்படுதல்” என்று கூறுவதில் முரண்பாடில்லை. ஆகவே கீதை (18-66) - ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – என்பதன் மூலம், அனைத்து வஸ்துக்களும் தங்களுக்கு இயல்பாகவே உரியதான ஏற்புடைய தன்மையுடன் வெளிப்படும் நிலையை ஜீவாத்மா அடைகிறான் என்பது உணர்த்தப்படுகிறது.