Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 129)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“ஸர்வபாப” என்பதால் வெளிப்படுபவை

மூலம் – “ஸுதுஷ்கரேண சோசேத்ய:” என்கிற ச்லோகத்திற் சொன்ன யோஜநையில் “ஸர்வபாபேப்ய:” என்றது அதிகாரியுடைய அபேக்ஷைக்கு ஈடாகப் ப்ராப்தி விரோதிகளையும் உபாய விரோதிகளையும் ப்ரதிகூல அநுபவ ஹேதுக்களையும் ஸங்க்ரஹிக்கிறது. இங்கு ப்ராப்தி விரோதியாவது “ஸாபராதனான இவன் நம்மை அநுபவிக்கக் கடவனல்லன்” என்கிற பகவத் ஸங்கல்பம். உபாய விரோதியாவது “நம்மை இவன் தெளிந்து வசீகரிக்கக் கடவனல்லன்” என்கிற ஸங்கல்பம். ப்ரதிகூல அநுபவ ஹேதுவாவது, அவ்வோ ப்ரதிகூல கர்மாநுஷ்டாநங்களாலே வந்த அவ்வோ பல ப்ரதாந ஸங்கல்பம். முமுக்ஷுவைப் பற்ற ஸர்வநிக்ரஹங்களும் நிவ்ருத்தங்களானால் நிக்ரஹ கார்யங்களாம். பின்பு காரணாபாவத்தாலே கார்யமான ப்ரதிகூலங்களில் ஒன்றும் வாராது. இது “அநாவ்ருத்தி: சப்தாத்” என்கிற ஸூத்ரத்திலே விவக்ஷிதம். இந்த நிஷ்கர்ஷங்களெல்லாம் பாஷ்யத்திலே ஸத்ஸம்ப்ரதாயத்தோடே கூடச் சிரபரிசயம் பண்ணின மஹாப்ராஜ்ஞருக்கு நிலமாயிருக்கும்.

– தாத்பர்ய சந்த்ரிகையில், கீதை (18-66)க்கான விளக்கத்தில் கூறப்பட்ட “ஸுதுஷ்கரேண சோசேத்ய: - தன்னால் செய்ய இயலாது என்று யார் ஒருவன் உள்ளானோ, அவனுக்கு அந்த உபாயத்தின் இடத்தில் நானே நிற்பேன்” என்ற கருத்தின்படி, “ஸர்வபாபேப்யோ:” என்பதில் “அடையப்படும் இலக்கான பகவானை அடையவிடாமல் தடுக்கும் விரோதிகள், உபாயத்தைக் கைக்கொள்ள விடாமல் தடுக்கும் விரோதிகள் மற்றும் பகவானுக்கு விருப்பம் இல்லாதவற்றில் ஈடுபடும் காரணங்கள்” ஆகிய அனைத்துமே அதிகாரியின் விருப்பம் என்பதில் சேர்க்கப்படுகிறது. இங்கு “பகவானை அடையவிடாமல் தடுக்கும் விரோதி” என்பது, “பல குற்றங்களைச் செய்த இவன் நம்மை அடைந்து அனுபவிக்கும் தகுதி கொண்டவன் அல்லன்” என்று பகவான் எண்ணுதலே ஆகும்; “உபாயத்தைக் கைக்கொள்ள விடாமல் தடுக்கும் விரோதி” என்பது, “இவன் நம்மைக் குறித்து முற்றிலுமாக உணர்ந்து நம்மை வசீகரிக்க வல்லவன் அல்லன்” என பகவான் எண்ணுதலே ஆகும்; “பகவானுக்கு விருப்பம் இல்லாதவற்றில் ஈடுபடும் காரணங்கள்” என்பவை, “நமக்கு விருப்பம் இல்லாதவற்றை செய்ததால் உண்டாகும் பலன்களை இவன் அனுபவிக்கக்கடவான்” என்று பகவான் எண்ணுதல் ஆகும். ஆனால் முமுக்ஷுவைப் பொறுத்தவரை அனைத்து தண்டனைகளும் ரத்து செய்யப்பட்டால், அந்த தண்டனைகளின் விளைவுகளும் நீங்குகின்றன. அதன் பின்னர், அத்தகைய காரணங்கள் விலகியதால், அவற்றின் விளைவுகளாக உள்ள “பகவானுக்கு விருப்பம் அற்றவற்றைச் செய்தல்” என்பவை நேராது. இக்கருத்தானது, ப்ரஹ்மஸூத்ரம் (4-4-22) - அநாவ்ருத்தி: சப்தாத் – மோக்ஷம் பெற்றவன் திரும்புதல் இல்லை – என்பதால் உணர்த்தப்படுகிறது. இவ்விதமான கருத்துக்கள் அனைத்தும், ஸ்ரீபாஷ்யத்தை நீண்டகாலமாக மிகவும் சிரமத்துடன் தகுந்த முறையில் கற்று வருபவர்களுக்கு, அறியக்கூடிய விஷயமாக இருக்கும்.