Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 128)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

ஒருவருடைய கர்ம பலன்கள் மற்றவரைச் சேர்தல் எப்படி?

மூலம் – ஆரேனும் பண்ணின கர்மங்கள் வேறே சிலர் பக்கலிலே ஸங்க்ரமிக்கையாவது என் என்னில், இக் கர்த்தாவைப் பற்ற ஈச்வரனுக்கு வரும் நிக்ரஹ அநுக்ரஹங்களோடு ஸமாநமாக இவனுடைய சத்ரு மித்ரர்கள் பக்கலிலே நிக்ரஹ அநுக்ரஹங்கள் உதிக்கை. ஆரேனும் அநுஷ்டித்த கர்மங்களுக்கு ஆரேனும் பக்கலிலே நிக்ரஹ அநுக்ரஹங்கள் பிறந்தால் அதிப்ரஸங்கம் வாராதோ என்னில், இதுவும் முமுக்ஷு விஷயத்தில் அநுகூல்ய ப்ரதிகூலர்க்கு உபசார அபசார ரூபமான கர்மமடியாக வருகிறதாகையாலே அதிப்ரஸங்கமில்லை. ஆகையாலிறே உதாஸீநர் பக்கல் ஸுக்ருத துஷ்க்ருதங்கள் இரண்டும் ஸங்க்ரமிக்குமென்னாதொழிகிறது. பல ஸாரூப்ய மாத்ரத்தாலே இங்கு ஸங்க்ரமணோபசாரம். இஸ் ஸுக்ருத துஷ்க்ருத ஸங்க்ராந்தி சொல்லுகிற ச்ருதியாலே ஈச்வரனுக்கு அத்யர்த்த ப்ரியனான ஜ்ஞாநி விஷயத்திற் பண்ணின உபசார அபசாரங்களால் வரும் ப்ரீதி கோபங்களினுடைய தீவ்ர தமத்வம் ஸூசிதமாயிற்று.

– ஆனால் ஒருவர் செய்த கர்மங்களின் பலன்கள், மற்றொருவரிடம் சென்று சேர்தல் என்பது எப்படி? அந்த ப்ரபந்நன் விஷயத்தில் ஈச்வரனுக்கு உண்டாகும் அநுக்ரஹத்தால் புண்ணியமும், நிக்ரஹத்தால் (கோபம் எனலாம்) பாபமும் உண்டாகின்றன. அத்தகைய ப்ரபந்நனிடம் உண்டாவது போன்றே, அவனுடைய சத்ருக்களிடம் ஈச்வரனுடைய நிக்ரஹமும், நண்பர்களிடம் ஈச்வரனுடைய அனுக்ரஹமும் உண்டாகின்றன. ஆனால் ஒருவர் செய்த கர்மங்களின் விளைவாக வேறு ஒருவரிடம் அனுக்ரஹமும் நிக்ரஹமும் ஏற்படுதல் என்பது பொருந்தாது அல்லவோ? முமுக்ஷுவுக்கு நண்பர்கள் விஷயத்தில் உண்டாகும் அனுக்ரஹம் என்பது அவர்கள் அந்த முமுக்ஷுவுக்குச் செய்கின்ற நன்மையால் உண்டாகிறது; முமுக்ஷுவுக்கு விரோதிகள் விஷயத்தில் உண்டாகும் நிக்ரஹம் என்பது அவர்கள் அந்த முமுக்ஷுவுக்குச் செய்கின்ற தீமையால் உண்டாகிறது; ஆகவே இங்கு பொருந்தாமை ஏதும் இல்லை. இந்தக் காரணத்தால்தான், முமுக்ஷுவிடம் நண்பர்களாகவும் பகைவர்களாகவும் இல்லாமல், நடுநிலையுடன் உள்ளவர்களிடம் முமுக்ஷுவின் புண்ணிய பாபங்கள் சென்று சேர்வதில்லை. இங்கு முமுக்ஷுவின் நண்பர்களும் பகைவர்களும் அவனுக்கு நிகரான பலன்களைப் பெறுவதால்தான், இங்கு “சென்று சேர்கிறது” என்று கூறப்படுகிறது. இவ்விதம் புண்ணிய பாப பலன்கள் சென்று சேர்தல் குறித்துக் கூறுகின்ற ச்ருதி வாக்கியங்கள் மூலமாக, “பகவானுக்கு மிகவும் ப்ரியமான உள்ள ஞானியின் விஷயத்தில் செய்யப்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் காரணமாக, பகவானுக்கு உண்டாகும் அளவு கடந்த மகிழ்ச்சி மற்றும் கோபம்” ஆகியவை வெளிப்படுகின்றன.