Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 127)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
பங்கீடு அந்திம காலம் முடிய செய்யப்படாமல் உள்ளது ஏன்?
மூலம் – இவற்றை ஈச்வரன் உபாயாரம்பத்திலே ஸுஹ்ருத்துக்கள் பக்கலிலும், த்விஷத்துக்கள் பக்கலிலும் ஸங்க்ரமிப்பியாதே, அந்திம தசையளவும் பார்த்திருக்க வேண்டுவானென் என்னில் – இவ் ஆச்ரிதர் பக்கல் பண்ணின ஆநுகூல்யத்துக்கு மேல் விபரீதம் செய்யில் இஸ்ஸுக்ருதங்களை ஸங்க்ரமிப்பியா தொழிகைக்காகவும், ஆச்ரிதர் பக்கலில் பண்ணின ப்ராதிகூல்யத்துக்கு மேல் க்ஷமை கொள்ள அவஸரம் கொடுக்கைக்காகவும், இவ் ஆச்ரிதருடைய அந்திம சரீர விச்லேஷத்தளவும் இவர்களுடைய புண்ய பாபங்களை அசல்பிளந்தேறிடா தொழிகிறான். ஸ்வர்காத்யர்த்த ஸுக்ருதம் முமுக்ஷுவுக்குப் பாபமாகையாலே, அது முமுக்ஷுவான ஸ்ஹ்ருத்தின் பக்கல் ஸங்க்ரமியாது.
– ப்ரபந்நன் ஒருவன் ப்ரபத்தியைக் கொண்ட உடனேயே அவனுடைய புண்ணிய பாப பலன்களை, நண்பர்களுக்கும் விரோதிகளுக்கும் பங்கிட்டுக் கொடுக்காமல், ப்ரபந்நனுடைய அந்திம காலம் முடிய ஈச்வரன் ஏன் காத்திருக்கவேண்டும் என்று கேட்கலாம். இதற்கான விடை அளிக்கப்படுகிறது. ப்ரபந்நன் ப்ரபத்தி செய்யும் அந்த நேரத்தில், அவனுடைய நண்பனாக உள்ள ஒருவன், அவனுக்குத் தீமை செய்யக்கூடும்; இதன் விளைவாக, அந்திம காலத்தில் அந்த நண்பனுக்கு இவனுடைய புண்ணிய பலன்கள் செல்லக்கூடாது. இதே போன்று, ப்ரபந்நன் ப்ரபத்தி செய்யும் அந்த நேரத்தில், அவனுடைய பகைவனாக உள்ள ஒருவன், அவனிடம் மன்னிப்புக் கேட்கக்கூடும்; இதன் விளைவாக, அந்திம காலத்தில் அந்தப் பகைவனுக்கு இவனுடைய பாப பலன்கள் செல்லக்கூடாது. ஆகவே, ப்ரபந்நன் தனது சரீரத்தை விடும் காலம் முடிய, அவனுடைய புண்ணிய பாபங்களை நண்பர்களுக்கும் விரோதிகளுக்கும் பிரித்துக் கொடுக்காமல் ஈச்வரன் காத்திருக்கிறான். ப்ரபத்திக்கு முன்பாகக் செய்த கர்மங்கள், ஸ்வர்க்கம் முதலானவற்றை அளிக்கவல்லவை என்றாலும், அவை முமுக்ஷு ஒருவனுக்குப் பாபமே ஆகும்; ஆகவே அந்த ப்ரபந்நனுடைய நண்பன் ஒருவன் முமுக்ஷு என்னும்போது, அந்தப் பலன்கள் அவனைச் சேராது.