Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 125)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

ப்ரபந்நனுக்குக் கர்மங்கள் ஒட்டாமல் போவதும், நீங்குவதும்

மூலம் – பகவத் ப்ரீதி மாத்ரமே பலமாக அநுஷ்டித்த கேவல கைங்கர்ய ரூப ஸுக்ருதங்கள் அப்போதே தத்தபலங்களாகையாலே, அவற்றுக்கு அச்லேஷம் சொல்ல வேண்டா. லோக ஸங்க்ரஹார்த்த விதியாலே அநுஷ்டிக்குமவையும் தனக்கு அப்படியே பகவதாஜ்ஞா ஸித்தங்களாகையாலே, அவையும் இவனுக்குக் கேவல கைங்கர்யங்களாய் தத்தபலங்கள். இவற்றில் அநவதாநத்தாலே ஸாத்விக த்யாக ரஹிதமாக அநுஷ்டிதங்கள் உண்டாகில், அவையுமெல்லாம் “தாந்யேவ பாவோபஹதாநி கல்க:” என்கிறபடியே பாபதுல்யங்களாய் மோக்ஷயிஷ்யாமிக்கு விஷயமாம். பலாந்தரார்த்தமாகப் பண்ணின ப்ரபத்த்யந்தரங்களும் தத்தபலங்களாய்ப் போம். பூர்வப்ரபத்திக்குக் கோரின பலத்தைப் பற்றப் புந: ப்ரபத்தி பண்ணுகை மஹாவிச்வாஸத்தோடே கூட அநுஷ்டித்த பூர்வ ப்ரபத்தி ப்ரதிபந்தநத்தாலே கூடாது. அநேக ப்ரபத்திகள் கூட ஏக பல ஸாதநனமென்று நினைத்து அநுஷ்டித்தாலும், உபாயாந்தரச்சாயையாம். வித்யா மஹாத்ம்யத்தாலே இக்கர்மங்களுக்கு விநாசமாவது, ஈச்வரன் இவற்றுக்குப் ப்ராப்தமான பலப்ரதாந அபிஸந்தியை விடுகை. அச்லேஷமாவது, இவ் ஆச்ரிதர் திறத்தில் இக்கர்ம பல ப்ரதாந அபிஸந்தி உதியாதொழிகை.

– மற்ற எந்த ஒரு பயனையும் எதிர்பாராமல், பகவானுடைய மகிழ்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு ப்ரபந்நன் செய்யும் கைங்கர்யங்கள் என்னும் புண்ணியச் செயல்கள் அனைத்தும், அப்போதே பலனை அளித்து விலகுபவை என்பதால், அவற்றில் மீதம் எதுவும் இருப்பதில்லை. மற்ற எந்த ஒரு பயனையும் எதிர்பாராமல், இந்த லோகத்தில் உள்ளவர்களைத் திருத்தும்விதமாக ப்ரபந்நன் செய்யும் செயல்கள் அனைத்தும் பகவானுடைய ஆணைக்கு உட்பட்டவையாக உள்ளதால், அவையும் இவன் செய்யும் கைங்கர்யங்கள் என்றாகி, அப்போதே பலனை அளித்து விலகுகின்றன. இவற்றில் ஒரு சில கைங்கர்யங்களை ப்ரபந்நன் தனது கவனக் குறைவு காரணமாக, “நான் செய்கிறேன், என்னுடையது” என்னும் எண்ணத்துடன் செய்துவிட்டான் என்றால் அவை, மஹாபாரதம் ஆதிபர்வம் (1-301) - தாந்யேவ பாவோபஹதாநி கல்க: - தானம் போன்றவை தனக்காகச் செய்யப்படும்வரை பாபம் ஆகாது – என்று கூறுவதற்கு ஏற்ப, பாபங்களுக்கு நிகராகவே கருத்தப்பட்டு “மோக்ஷயிஷ்யாமி” என்னும் பகவானுடைய வாக்கிற்கு இலக்காக விலகும். மோக்ஷத்திற்காகச் செய்யும் ப்ரபத்திக்குப் பின்னர், மற்ற பலன்களை எதிர்பார்த்து செய்யப்படும் ப்ரபத்தியானது, அதற்கான பலனை அளித்த பின்னர் மறையும். ஒரு பலனை எண்ணியபடி ப்ரபத்தி செய்த பின்னர், அந்த ப்ரபத்தியைத் தான் மஹாவிச்வாஸத்துடன் செய்ததாக உணர்ந்த பின்னர், அதே பலனுக்கான ப்ரபத்தியை மீண்டும் செய்தல் கூடாது. ஒரு ப்ரபத்தியைச் செய்த பின்னர், அதற்கான துணை என்று எண்ணியபடி மேலும் சில ப்ரபத்திகளைச் செய்தல் என்பது, மற்ற உபாயங்களைக் கைக்கொள்ளுதல் என்றே ஆகிறது. வித்யையின் மேன்மை காரணமாக இந்தக் கர்மங்களின் அழிவு என்பது, ஈச்வரன் தனது திருவுள்ளத்தில் “இவற்றுக்கான பலனை அளிப்போம்” என்று எண்ணுதலால் ஆகும். இந்தக் கர்மங்களின் பலன்கள் அழியாமல் மீதம் இருத்தல் என்பது, ஈச்வரன் தனது திருவுள்ளத்தில் “இவற்றுக்கான பலனை அளிப்போம்” என்று எண்ணாமல் உள்ளதால் ஆகும்.