Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 124)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
ப்ரபந்நனுக்கு அனைத்து பாபங்களும் நீங்கும் முறை
மூலம் – இவனுக்கு இப்படிப் புண்யபாப ரூபமான ஸம்ஸார காரணம் கழியும் க்ரமம் எது என்னில், உபாய விரோதிகள் முன்பே ஸ்வஹேதுக்களாலே கழிந்ததால், ப்ராரப்தேதரங்களாய்ப் ப்ராப்தி விரோதிகளாகவல்ல பூர்வ புண்யபாபங்கள் உபாயாரம்பத்திலே நிச்சேஷமாகக் கழியும். உத்தரங்களான பாபங்களில், புத்தி பூர்வமல்லாதவையும் தேச கால வைகுண்யாதிகளால் வருமவையும் ஒன்றும் லேபியாது. உபாயத்தில் புத்திபூர்வ உத்தராகங்கள் ஸ்வ அதிகார அநுகுண ப்ராயச்சித்த விசேஷத்தாலேயாதல், சிக்ஷார்த்தமான லகு பலவிசேஷத்தாலேயாதல் தீரும். ப்ரபந்நனுக்குப் ப்ராரப்தத்தில் இசைந்த காலத்துக்குள்ளே விபக்வமாம் கர்மாம்சம் அநுபவத்தாலும், அவாந்தர ப்ராயச்சித்தத்தாலும் நாச்யம். மேலுள்ளதும் உபாய மாஹாத்ம்யத்தாலே கழியும். உபயபாவநா க்ரமத்தாலே வந்த புத்தி பூர்வ உத்தர புண்யங்களில் ப்ரதிபந்தமில்லாதவையும் உபாஸகனுக்கு வித்யா அநுகுண பூர்வோத்தர புண்யங்களும் பலப்ரதாநத்தாலே கழியும். வித்யைக்கு அநுபயுக்த புத்திபூர்வ உத்தர புண்யங்களில், ப்ரதிபத்த பலங்களும், வித்யோபயுக்த பூர்வோத்தர புண்யங்களில் அநுகூல ப்ரதிகூல ப்ரபல கர்மாந்தர பலங்களாலே, நிருத்த அவஸரங்களாய் பலம் கொடுக்கப் பெறாதே மிகுதியாய் நின்றவையும் அந்திமகாலத்திலே கழியும். இவ்வர்த்தம் “இதரஸ்ய அபி ஏவம் அஸம்ச்லேஷ: பாதே து” என்கிற ஸூத்ரத்திலே அபிப்ரேதம்.
– ஒரு ப்ரபந்நனுக்கு இவ்விதமாகப் புண்ணியம் மற்றும் பாபங்கள் கழிகின்ற முறை என்ன? உபாயத்தைக் கைக்கொள்ள இயலாமல் தடுக்கின்ற தடைகள் அனைத்தும் அவைகளுடைய காரணங்களால் கழிவதால் (உதாரணமாக தகுந்த உபதேசம் முதலானவை), உபாயமான ப்ரபத்தியைக் கைக்கொள்வதற்குத் தடையாக உள்ளதும், முன்பே உள்ளதும், பலன் அளிக்கத் தொடங்காதவையாக உள்ளதும் ஆகிய புண்ணிய பாபங்கள் அனைத்தும், உபாயத்தைக் கைக்கொள்ளத் தொடங்கியவுடனேயே, மீதம் ஏதும் இல்லாமல் கழிகின்றன. ப்ரபத்திக்குப் பின்னர் இடம் மற்றும் காலம் ஆகியவை காரணமாகவும், புத்தி அறியாமல் செய்ததாகவும் உள்ள பாபங்கள் எதுவும் ப்ரபந்நனிடம் சேராது. ப்ரபத்திக்குப் பின்னர் புத்தி அறிந்து செய்யப்படும் பாபங்கள் அனைத்தும் அவரவர்களுடைய சக்திக்கு ஏற்ப செய்யப்படும் ப்ராயச்சித்தங்களுடைய சிறப்பு மற்றும் பலன்களை அனுபவித்தல் என்னும் வடிவில் வருவதான சிறிய அளவில் கிடைக்கின்ற தண்டனைகள் மூலமாகக் கழிகின்றன. இந்தச் சரீரம் தீரும்வரை ப்ரபந்நனால் ஏற்றுக் கொள்ளப்பட்டவையும், பலன் அளிக்கத் தொடங்கியவையும் ஆகிய கர்மங்கள் அனைத்தும், அவற்றின் பலன்களை அனுபவிப்பதன் மூலமும், தகுந்த ப்ராயச்சித்தம் மூலமும் அழிகின்றன. பலன் அளிக்கத் தொடங்கிய கர்மங்களும், ப்ரபத்தியின் மேன்மையால் அழிகின்றன. ப்ரபத்தியைக் கைக்கொள்வதற்கு முன்பும் பின்பும், மோக்ஷம் மற்றும் ஸம்ஸாரம் ஆகிய இரண்டைக் குறித்தும், புத்தி அறிந்து செய்த புண்ணிய கர்மங்களால் உண்டாகும் பலன்களில், மோக்ஷத்திற்கு (அல்லது ப்ரபத்திக்கு) தடையாக இல்லாதவையும், உபாஸகனுடைய வித்யைக்குப் பலம் சேர்ப்பவையாக உள்ளவையும், பலன் அளித்தவுடன் மறைகின்றன. ஒரு சில புண்ணியங்கள், உபாஸனைக்குப் பின்னரும் முன்னரும் செய்யப்பட்டவையாக இருந்து, அவை வித்யைக்கு உபயோகமாக இல்லாமலும், இதுவரை பலன்கள் ஏதும் அளிக்காமலும் இருக்கலாம்; ஒரு சில புண்ணியங்கள், உபாஸனைக்குப் பின்னரும் முன்னரும் செய்யப்பட்டவையாக இருந்து, அவை வித்யைக்கு உபயோகமாக உள்ளபோதிலும், உபாஸனையில் உள்ள மற்ற கர்மங்களின் வலிமை காரணமாகத் தாங்கள் பலன் அளிப்பதற்கு ஏற்ற காலம் இல்லாததால், பலன் அளிக்காமல் இருக்கலாம்; இது போன்று மீதம் உள்ள பலன்கள் அனைத்தும் இறுதி நேரத்தில் நீங்கிவிடும். இந்தக் கருத்தானது ப்ரஹ்மஸூத்ரம் (4-1-14) - இதரஸ்ய அபி ஏவம் அஸம்ச்லேஷ: பாதே து - புண்ணியங்களுக்கும் அதே போன்று, சரீரம் நீங்கும் நேரத்தில் – என்பதில் கூறப்பட்டது.