Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 123)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

பாபங்களிலிருந்து விடுவிப்பேன் என்பதன் கருத்து

மூலம் – இங்கு பாபங்களினின்றும் விடுவிக்கையாவது, அநாதியான விபரீதாநுஷ்டாநத்தாலே பிறந்த நிக்ரஹாபிப்ராயத்தை ஈச்வரன்தான் விடுகை. இந் நிக்ரஹ நிவ்ருத்தியாலே நிக்ரஹ கார்யங்களான அவித்யாதிகளெல்லாம் நிவ்ருத்திகளாம். ஈச்வரனுடைய நிக்ரஹ நிவ்ருத்தியாவது, ”மத் ப்ரஸாதாத்” என்கிற அபிப்ராய விசேஷம். ஜீவனுக்கு அவித்யாதிகளுடைய நிவ்ருத்தியாவது, ஜ்ஞாந விகாஸாதிகள்.

– இங்கு பகவான் “பாபங்களிலிருந்து விடுவிப்பேன்” என்று கூறுவதன் கருத்து என்ன? எல்லையற்ற காலமாகச் சேதநன் ஒருவன், தொடர்ந்து சாஸ்த்ரங்களை மீறியபடியே உள்ளதால், அவனுக்குத் தண்டனை அளிக்கவேண்டும் என்னும் எண்ணம் பகவானுக்கு உண்டாகிறது; ஆனால் அத்தகைய எண்ணத்தை ஈச்வரன் மாற்றிக் கொள்வதே “பாபங்களிலிருந்து விடுவிப்பேன்” என்று கூறுவதன் கருத்து ஆகும். இத்தகைய “தண்டனை விலகுதல்” என்பதன் விளைவாக, தண்டனைகள் மூலம் உண்டாவதாகிய அவித்யை போன்ற அனைத்தும் விலகுகின்றன. ஈச்வரனுடைய “தண்டிப்பதலிருந்து விலகுதல்” என்பது, கீதை (18-56) – மத் ப்ரஸாதாத் – எனது அருளால் – என்பதாகிறது. ஜீவாத்மாவின் அவித்யை போன்றவை விலகுதல் என்பது, அவனுக்கு ஞானம் மீண்டும் மலர்தலே ஆகும்.