Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 122)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்பதன் மூலம் ப்ரபத்தியில் விருப்பம் ஏற்படுத்துவதே நோக்கமாகும் என்பதற்கு மறுப்பு

மூலம் – சில பாபங்களை “ந க்ஷமாமி” என்கையும், இங்கே “ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்கையும் விருத்தமன்றோ? ஆகையால் இது உபச்சந்தநமாமத்தனையன்றோ என்னில், இவை இரண்டும் பிந்ந விஷயமாகையாலே விரோதமில்லை. “ந க்ஷமாமி” என்றது, “பத்மபத்ர சதேநாபி ந க்ஷமாமி வஸுந்தரே | உபசார சதேநாபி ந க்ஷமாமி வஸுந்தரே” என்றாப்போலே சொல்லுகிற போலியான ப்ராயச்சித்தாந்தரங்களால் க்ஷமியேனென்றபடி. இங்கு ஸர்வபாப ப்ராயச்சித்தமாய் இருப்பதோர் உபாயவிசேஷத்தாலே எல்லாவற்றையும் க்ஷமிப்பேனென்கிறது. “யதி வா வரண: ஸ்வயம்” என்றிறே அபிப்ராயமிருப்பது? இப்படி வ்யவஸ்தித விஷயமாக வசநங்கள் தாமே காட்டுகையாலே விரோதமில்லாமையால் இது உபச்சந்தந மாத்ரமன்று. இங்ஙனல்லாதபோது பக்தி ப்ரபத்தி ரூப மோக்ஷோபாயங்களை விதிக்கிற சாஸ்த்ரங்களெல்லாம் அத்யந்த வ்யாகுலங்களாம்.

– ஒரு சிலர், “வராஹ புராணத்தில் ந க்ஷமாமி – நான் பொறுக்கமாட்டேன் – என்று பகவான் கூறுவதும், இங்கு ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – அனைத்து பாபங்களிலிருந்தும் விடுவிப்பேன் – என்று கூறுவதும் முரணாக உள்ளது அல்லவோ? ஆகவே இங்கு கூறப்பட்ட ‘ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி’ என்பது மனதிற்கு ஆறுதல் அளிப்பதற்காகக் கூறப்பட்டது என்றே ஆகிறது அல்லவோ?”, எனலாம். ஆனால் பகவானுடைய இந்த இரண்டு கூற்றுகளும் வெவ்வேறு விஷயங்களின் அடிப்படையில் உள்ளதால் இங்கு விரோதம் இல்லை. “ந க்ஷமாமி – நான் பொறுக்கமாட்டேன்” என்று கூறியது, “பத்மபத்ர சதேநாபி ந க்ஷமாமி வஸுந்தரே உபசார சதேநாபி ந க்ஷமாமி வஸுந்தரே – எந்த ஒரு விஷ்ணுபக்தன் இரத்தத்தை அறியாமல் தொடுகிறானோ அவன், நூற்றுக்கணக்கான தாமரைகளை கொண்டு என்னை அர்ச்சனை செய்தாலும் நான் பொறுக்கமாட்டேன், எனக்கு அவன் நூற்றுக்கணக்கான உபசாரங்கள் செய்தாலும் நான் பொறுக்கமாட்டேன்” என்பதால் கூறப்பட்டதான “போலியான ப்ராயச்சித்தங்கள் மூலம் நான் மன்னிக்கமாட்டேன்” என்பதாகும். ஆனால் இங்கு, “அனைத்துவிதமான பாபங்களையும் போக்கவல்ல ப்ராயச்சித்தமாக உள்ளதான ஒரு உபாயத்தின் சிறப்பு காரணமாகப் பொறுத்துக்கொள்வேன்” என்று கருத்து. இராமாயணம் யுத்தகாண்டம் (18-34) - யதி வா வரண: ஸ்வயம் – இராமன் சுக்ரீவனிடம், “இராவணன், விபீஷணன் என யாராக இருந்தாலும் இங்கு அழைத்து வா. நான் மன்னிக்கிறேன்”, என்று கூறுவதற்கு ஏற்ப அல்லவோ பகவானின் திருவுள்ளம் உள்ளது? இவ்விதம் வேறுபட்ட விஷயங்கள் குறித்து இது போன்ற வாக்கியங்கள் உள்ளதை அந்த வாக்கியங்களே காண்பிப்பதால், இங்கு முரண்பாடு ஏதும் இல்லை; ஆகவே இங்கு கூறப்பட்ட “ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்பது மனதிற்கு ஆறுதல் அளிப்பதற்காகக் கூறப்பட்டது அல்ல. இவ்விதம் கொள்ளவில்லை என்றால், பக்தி மற்றும் ப்ரபத்தி ரூபத்தில் உள்ள மோக்ஷ உபாயங்களை விதிக்கின்ற சாஸ்த்ரங்கள் அனைத்தும் எந்தவிதமான ப்ரமாணத் தன்மையும் அற்றவை என்றாகும்.