Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 120)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

தன்னினைவில் விலக்கின்றித் தன்னை நண்ணார் நினைவனைத்தும் தான் விளைத்தும் விலக்கு நாதன் எந்நினைவை இப்பவத்தில் இன்று மாற்றி இணையடிக்கீழ் அடைக்கலமென்று எம்மை வைத்து முன்னினைவால் யாம் முயன்ற வினையால் வந்த முனிவயர்ந்து முத்தி தர முன்னே தோன்றி நன்னினைவால் நாமிசையும் காலம் இன்றோ நாளையோவென்று நகை செய்கின்றானே

– தனது ஸங்கல்பத்திற்கு எந்தவிதமான தடையும் இல்லாத ஸர்வேச்வரன், தன்னை வந்தடையாதவர்களுக்கு அனைத்து ஆசைகளையும் உண்டாக்குகிறான்; அவர்கள் அவற்றை அடையவிடாமல் தடுக்கவும் செய்கிறான். ஆனால் இன்று அவன் என்னுடைய ஸம்ஸார ஆசைகள் அனைத்தையும் விலக்கி, என்னைக் காக்கப்பட வேண்டிய பொருளாக ஏற்றுக் கொண்டு, தனது இரண்டு திருவடிகளின் கீழ் வைத்துக் கொள்கிறான். ப்ரபத்திக்கு முன்பு எனக்குள்ள அஹங்காரம் முதலானவற்றால் நான் செய்த பல தவறுகளால் தனக்கு உண்டான கோபம் அனைத்தையும் மறந்து, மோக்ஷம் அளிக்கும் பொருட்டு பலவவிதங்களில் அவதரிக்கிறான். இவ்விதம் அவன் வந்தபோதும் எனக்கு நல்ல ஞானம் உண்டாகி நான் பரமபதம் செல்லத் தயாராகும் நாள் இன்றோ அல்லது நாளையோ என்று பரிகாசம் செய்யும்விதமாகக் கேட்கிறான்.