Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 115)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

அறிந்தே செய்யும் பாபங்களுக்கு ப்ராயச்சித்தம் செய்யாத சில ப்ரபந்நர்களுக்குத் தண்டனை இல்லை என்பதன் கருத்து

மூலம் – ஸாபராதருமாய் அநுதாபமுமின்றிக்கே புந: ப்ரபத்தியும் பண்ணாதேயிருப்பார் சில ப்ரபந்நர்க்கு உபக்லேசங்களாகச் சொன்ன காணத்வாதி த்ருஷ்ட ப்ரத்யவாயங்கள் காணாதிரா நின்றோமென்கை மந்தசோத்யம். அவர்களுக்கும் அபராதாதி தாரதம்யத்துக்கு நாநாப்ரகார தாபத்ரய அநுபவம், உபயுக்த ஜ்ஞாநமாந்த்யம், இங்குள்ள பகவதநுபவ ரஸ ஸங்கோச விச்சேதங்கள், பகவத் பாகவத கைங்கர்ய ரஸ விச்சேதம், பகவதபசார பாகவதாபசாராதிகள், சிஷ்டகர்ஹாபஹிஷ்காராதிகள், ஸுக்ருத விசேஷ நாசம், ஸாத்த்விகாநாதரம், மநோரத பங்க க்லேசம் என்றிப்புடைகளில் ஏதேனுமோர் உபக்லேச ரூபமான ப்ரத்யவாயம் காணலாம். அக்ருத்யகரண க்ருத்யாகரணாதி ரூபங்களான நாநாவித பாபங்களுக்கு இப்படி நாநாவித த்ருஷ்ட ப்ரத்யவாய கரத்வமும் ச்ருதிகளிலும் மந்வாதி தர்மசாஸ்த்ரங்களிலும் இதிஹாஸ புராண பகவச்சாஸ்த்ராதிகளிலும் ப்ரஸித்தம். ஆகையால் காணத்வாதி உபக்லேச விசேஷ உதாஹரணமும் உபலக்ஷணமென்னுமிடம் வாக்யோபக்ரமத்தில் ஸமுதாய நிர்தேசாதிகளாலே ஸித்தம்.

– ஒரு சில ப்ரபந்நர்கள் மிகுந்த அபராதங்களைச் செய்பவர்களாக, அதனைக் குறித்து எந்தவிதமான வருத்தமும் அடையாதவர்களாக, அதற்காக எந்தவிதமான ப்ராயச்சித்த ப்ரபத்தியும் செய்யாமல் உள்ளபோதிலும், அவர்களுக்கு சாஸ்த்ரங்கள் கூறும் தண்டனைகளாக உள்ள கண்கள் குருடாகுதல் முதலான எதுவும் நேராமல் உள்ளனரே என்னும் கேள்வியானது மந்தமான ஒன்றாகும். அவர்களுக்கும் பாபங்களுக்கு ஏற்றபடியாக வாழ்க்கையில் பலவிதமான துன்பங்கள், பகவத் கைங்கர்யத்திற்குத் தேவையான ஞானம் குறைதல், பகவானை அனுபவிப்பதில் குறைவு உண்டாகுதல் அல்லது அனுபவம் ஏற்படாமல் விலகுதல், பகவானுக்கும் பாகவதருக்கும் கைங்கர்யம் செய்யும் ஈடுபாடு நீங்குதல், பகவத் மற்றும் பாகவத அபசாரங்கள் உண்டாகுதல், உயர்ந்தவர்களால் பழித்துத் தள்ளப்படுதல், நன்மையானவற்றின் அழிவு, நல்லவர்களால் தள்ளப்படுதல், விருப்பங்கள் நிறைவேறாமல் இருத்தல் என்பதான விதங்களில் தண்டனை ஏற்படவே செய்யும். செய்யக்கூடாதவற்றைச் செய்தல், செய்யவேண்டியதைச் செய்யாமல் இருத்தல் முதலான வடிவங்களில் உள்ளதான பலவிதமான பாபங்களுக்கு, இவ்விதமாகப் பலவிதமான தண்டனைகள் உள்ளதை ச்ருதிகளிலும், மநுதர்மம் போன்ற தர்ம சாஸ்த்ரங்களிலும், இதிகாசங்களிலும், புராணங்களிலும், பாஞ்சராத்ர ஆகமங்களிலும் காணலாம். ஆகவே ச்ருதிகளில், “கண்கள் குருடாகுதல்” முதலான தண்டனைகள் குறித்துக் கூறப்படும் வாக்கியங்களுக்கு முன்பாகவே “இவர்களுக்கு தண்டனைகள் உண்டாகும்” என்று பொதுவாகக் கூறுவதால், “கண்கள் குருடாகுதல்” முதலான தண்டனைகளும் இங்கு எடுக்கப்பட்டன என்றே கொள்ளவேண்டும்,