Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 114)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
அறிந்து செய்யும் பாபங்களுக்கு ப்ராயச்சித்தம் செய்யவில்லை என்றால் மோக்ஷம் தடையாகாது, சிறிய தண்டனைகள் கிட்டும்
மூலம் – ப்ரக்ருதி விசேஷ ஸ்வபாவத்தாலே அபராதங்கள் புத்திபூர்வகமாக வந்தாலும், புந:ப்ரபத்தி பண்ணாதார் பக்கலிலும் “தேவம் சார்ங்கதரம் விஷ்ணும் யே ப்ரபந்நா: பராயணம் | ந தேஷாம் யம ஸாலோக்ய ந ச தே நரகௌகஸ:”, “யஸ்மிந் கஸ்மிந் குலே ஜாதா யத்ர குத்ர நிவாஸிந: | வாஸுதேவரதா நித்யம் யமலோகம் ந யாந்தி தே” இத்யாதிகளிற்படியே நரகாதிகள் வாராதபடி பண்ணி, ராஜபுத்ராத்யபராதத்திற்போலே லகு ப்ரத்யவாயத்தாலே கண்ணழிக்கிறதுவும் க்ஷமாவிசேஷம். பாபங்களுக்கு த்ருஷ்ட ப்ரத்யவாயங்களும் நரகாதி ப்ரத்யவாயங்களும் உண்டாயிருக்க, நரகாதிகள் இவனுக்கில்லையென்று விசேஷ வசநங்கள் சொன்னால், த்ருஷ்ட ப்ரத்யவாயங்களுக்கு பாதகரில்லை. வசந விரோதத்தில் ந்யாயம் ப்ரவர்த்தியாது.
– ப்ரபந்நன் ஒருவன் இந்த உலகத்தின் தொடர்பு காரணமாக சில தவறுகளை அறிந்துகொண்டே செய்து, அதற்கான ப்ராயச்சித்த ப்ரபத்தியைச் செய்யாமல் விட்டாலும், வாமநபுராணம் (94-43) - தேவ சார்ங்கதரம் விஷ்ணும் ப்ரபந்நா: பராயணம் ந தேஷாம் யமஸாலோக்யம் ந ச தே நரகௌகஸ: - சார்ங்கம் என்னும் வில்லை உடைய ஸ்ரீமந்நாராயணனே தாங்கள் பெற வேண்டிய உயர்ந்த புருஷார்த்தம் என்று கருதி, அவனது திருவடிகளில் ப்ரபத்தி செய்தவர்கள், யமலோகம் செல்வதில்லை; அவர்களுக்கு நரக இருப்பும் இல்லை- என்றும், யஸ்மிந் கஸ்மிந் குலே ஜாதா யத்ர குத்ர நிவாஸிந: வஸுதேவ ரதா நித்யம் யமலோகம் ந யாந்தி தே – எந்தக் குலத்தில் பிறந்தாலும், எங்கு வாழ்ந்தாலும் எம்பெருமானிடம் எப்போதும் ஈடுபட்டபடி உள்ளவர்கள் யமலோகம் புகுவதில்லை – என்றும் கூறுவதற்கு ஏற்ப, அவர்களுக்கு நரகம் போன்ற துன்பங்கள் வராதபடி செய்கிறான்; மேலும், இப்படிப்பட்ட ப்ரபந்நனுக்கு அரசகுமாரன் போன்று குறைவான தண்டனையே அளிக்கப்பட்டு, அந்தக் குற்றங்களை நீக்குகிறான்; இது போன்று செய்தலும் ஈச்வரனுடைய பொறுமையே காரணம் என்பதை அறியவேண்டும். ஆனால், பாபங்களுக்கு இந்த உலகில் உள்ளபோது தண்டனைகளும், மேல் உலகிற்குச் செல்லும்போது நரகங்களும் கிட்டுவதாகவே சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. இவ்விதம் உள்ளபோது, ப்ரபந்நனுக்கு நரகங்கள் போன்றவை இல்லை என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றன; இதன் மூலமாக அவனுக்கு இந்த உலகில் தண்டனைகள் உண்டு என்பது தள்ளப்படவில்லை. ப்ரமாணங்களுடன் எந்தவிதமான வசந ந்யாயமும் முரண்பட முயலாது.