Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 113)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
ப்ரபந்நனுடைய குற்றங்கள் ஈச்வரனுக்கு இனிமை என்று கூறுவதன் கருத்து
மூலம் – ப்ரியதமை உடம்பில் அழுக்கும், வத்ஸத்தினுடைய வழும்பும் போலே ப்ரபந்நனுடைய தோஷமென்கிற வார்த்தையும், துஷ்டரும் சரணாகதரானால் ஈச்வரன் கைவிடாதே திருத்துமென்றபடி. இங்ஙனன்றிக்கே புத்திபூர்வ உத்தராகமும் ஈச்வரனுக்கு போக்யமென்று விவக்ஷிதமானால், ப்ரபந்நனுக்கு இதுவே யதாசக்தி ஸம்பாத்யமாம்.
– ஒரு சிலர், “ஒருவனுக்குத் தனது ப்ரியமான மனைவியின் உடலில் உள்ள அழுக்கும், பசுவிற்குத் தனது கன்றின் மீது உள்ள அழுக்கும் எவ்விதம் இனிமையாக உள்ளதோ அதே போன்று, ஈச்வரனுக்கு ப்ரபந்நனுடைய தோஷங்கள் இனிமையாகவே உள்ளன”, என்று கூறுகிறார்கள். இத்தகைய கருத்தானது, துஷ்டர்கள் கூட ப்ரபத்தி செய்தால் ஈச்வரன் அவர்களிக் கைவிடாமல் திருத்தி ஏற்றுக்கொள்வான் என்பதே ஆகும். இவ்விதம் கொள்ளாமல், “ப்ரபந்நன் ஒருவன் அறிந்துகொண்டே செய்யும் பாபங்கள் கூட ஈச்வரனுக்கு இனிமையாகவே இருக்கும்”, என்று கொண்டால், ப்ரபந்நன் தன்னால் இயன்றவரைப் பாபங்களைச் செய்தபடி இருக்கலாம் என்றாகிவிடும்.