Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 112)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

சரணாகதி கத்யத்தின் சூர்ணை மூலமாக “ஸர்வபாப” என்பதை விளக்குதல்

மூலம் – ஸர்வேச்வரன்றான் மோக்ஷம் தர நினைக்கும்போது பாதகங்களும் விலக்காகாவென்னும் வார்த்தையும், “புத்தி பூர்வ உத்தராகத்தில் நிக்ரஹமும் வாராது. ப்ராயச்சித்தமும் வேண்டா” என்றபடியன்று; ப்ரஸாதத்தாலே அவன் ப்ரஸந்நனானால் மோக்ஷம் அவச்யம் பாவிக்குமென்றபடி. இதுக்கு இப்படி ஈச்வரன் புந:ப்ரபத்தியாகிற ப்ராயச்சித்தத்திலே மூட்டுகிறதுவும் க்ஷமாபலம்.

– ஒரு சிலர், “ஸர்வேச்வரன் தானாகவே முன்வந்து ஒருவனுக்கு மோக்ஷம் அளிக்கத் தீர்மானித்தால், அந்த மனிதனுடைய பாபங்கள் அதனைத் தடுக்காது” என்று கூறுகிறார்கள். இந்தக் கருத்தானது, “அந்த மனிதன், தெரிந்து கொண்டே செய்யும் பாபங்கள் மூலம் பகவானுக்குக் கோபம் உண்டாகாது. ஆகவே அவற்றுக்கு ப்ராயச்சித்தம் செய்யவேண்டியதில்லை”, என்ற கருத்தாக இருக்கமுடியாது. ஸர்வேச்வரன் தன்னுடைய கருணையால் மகிழ்ந்து மோக்ஷம் அளிக்கிறான் என்றால், அத்தகைய மோக்ஷம் நிச்சயமாகக் கிட்டும் என்பதே அவர்கள் கருத்தாகும்; ஆனால், அத்தகைய பாபங்களுக்கு மீண்டும் ப்ரபத்தி என்னும் ப்ராயச்சித்தம் அவசியம் இல்லை என்பது அவர்கள் கருத்தல்ல. அத்தகைய ப்ராயச்சித்தம் செய்யும்படியாக ஈச்வரன் அந்த மனிதனைத் தூண்டுவதும், ஈச்வரனுடைய பொறுமையே காரணம் என்பதை அறியவேண்டும்.