Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 110)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

சரணாகதி கத்யத்தின் சூர்ணை மூலமாக “ஸர்வபாப” என்பதை விளக்குதல்

மூலம் – இப்படி “ஸர்வபாபேப்ய:” என்கிற விரோதி வர்கத்தையெல்லாம் “மநோ வாக் காயை:” என்று தொடங்கி மூன்று சூர்ணிகையாலே சப்தமாகவும் ஆர்த்தமாகவும் அருளிச்செய்தார். “க்ஷபயித்வா அதிகாராந் ஸ்வாந் சச்வத் காலேந பூயஸா | வேதஸோ யத்ர மோதந்தே சங்கரா: ஸு புரந்தரா:” என்றும், “யாவததிகாரம் அவஸ்தித: ஆதிகாரிகாணாம்” என்றும் சொல்லுகிறபடியே சிலர்க்கு அதிகார அவஸாநத்திலே மோக்ஷமாயிருந்தது. அதிகாரிகளல்லாதார்க்கும் “அநாரப்த கார்யே ஏவ து பூர்வே ததவதே:” என்கிறபடியே ப்ராரப்த கர்ம போக அவஸாநத்திலேயாயிருந்தது. இப்படியிருக்க, இவ்விடத்தில் ஆரப்த கார்யத்தை க்ஷமிக்கையாவதென்னென்னில், பல ப்ரதாந ப்ரவ்ருத்தமான கர்மத்திலும் ஜந்மாந்தர திவஸாந்தர ஸ்தித்யாதிகளுக்கு ஆரம்பகமான அம்சமும் இஸ் ஸ்வதந்த்ர ப்ரபத்தி நிஷ்டனுக்கு அநிஷ்டமாய், அத்தையும் பற்ற இவன் சோகிக்கில் அவ்வம்சத்தையும் ஈச்வரன் க்ஷமிக்கும். அப்போதே மோக்ஷம் பெற்றன்றி தரிக்கமாட்டாத ஆர்த்தி அதிசமுடையார்க்கு, அக்ஷ்க்ஷணத்திலே ப்ராரப்த கார்யமான கர்மத்தை நிச்சேஷமாக க்ஷமிக்கும். ஆகையால் ஆரப்த கார்யத்தை க்ஷமிக்க வேண்டுமென்று அபேக்ஷிக்கக் குறையில்லை.

– இவ்விதம் “ஸர்வபாபேப்ய:” என்பதன் மூலம் கூறப்பட்டதான “பகவானை அண்டவிடாமல் தடுக்கும் விரோதிகள்” அனைத்தையும் எம்பெருமானார் சரணாகதி கத்யத்தில் (சூர்ணை 11) – மநோ வாக் காயை: - மனம், வாக்கு, சரீரம் – என்று தொடங்குகின்ற மூன்று சூர்ணைகளில் விரிவாக அருளிச்செய்தார். லக்ஷ்மீ தந்த்ரத்தில் (17) - ஏகாந்திநோ மாஹாபாகா யத்ர பச்யந்தி நௌ ஸதா க்ஷபயித்வாதிகாராந் ஸ்வாந் சச்வத்காலேந பூயஸா - நாராயணனை மட்டுமே வழிபட்டபடி உள்ள அவர்கள், இந்த இடத்தில் எப்போதும் எங்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு, தாங்கள் செய்த ப்ரபத்திக்கான பலன்களை அனுபவித்தபடி உள்ளனர் – என்றும், (18) - வேதஸோ யத்ர மோதந்தே சங்கரா: ஸ புரந்தரா: ஸூரயோ நித்ய ஸம்ஸித்தா: ஸர்வதா ஸர்வ தர்சிந: - அங்கு நான்முகன், சங்கரன், புரந்தரர்கள் (இந்த்ரன்கள் - ஒவ்வொரு கல்பத்திலும் இந்த்ரன் மாறுபாடுவதால், இதுவரை இருந்த இந்த்ரன்கள், இப்போது உள்ள இந்த்ரன்), தேவர்கள், எப்போதும் ஸித்தி பெற்ற ரிஷிகள் என்று பலரும் எப்போதும் உயர்ந்த விஷ்ணுவின் ரூபத்தைத் தரிசித்தபடி உள்ளனர் – என்றும் கூறுவதற்கு ஏற்ப, ஒரு சில அதிகாரங்களில் பகவானால் நியமிக்கப்பட்டவர்களுக்கு, அந்த அதிகாரத்தின் முடிவில் மட்டுமே மோக்ஷம் ஏற்படும். இவ்விதமான அதிகாரிகள் அல்லாதவர்களுக்கு, ப்ரஹ்ம ஸூத்ரம் (4-1-15) - அநாரப்த கார்யே ஏவ து பூர்வே ததவதே: - இதுவரை பலன் அளிக்கத் தொடங்காத புண்ணிய பாபங்கள் மட்டுமே அழிகின்றன; காலதாமதம் கூறப்படுவதால் ஆகும் – என்பதற்கு ஏற்ப, பலன் அளிக்கத் தொடங்கிய கர்மங்களை அனுபவித்த பின்னரே மோக்ஷம் உண்டாகும். இவ்விதம் உள்ளபோது இங்கு, “பலன் அளிக்கத் தொடங்கிய கர்மங்களையும் பகவான் பொறுக்கிறான்”, என்று கூறுவதன் கருத்து என்ன? ப்ரபந்நன் ஒருவன் தன்னுடைய பலன் அளிக்கத் தொடங்கிவிட்ட கர்மங்களில், அடுத்த பிறவி அல்லது அடுத்த நாளின் இருப்பு போன்றவற்றை அளிக்கவல்ல கர்ம பலன்கள் குறித்து விருப்பம் இன்றி துன்பம் அடைவானாகில், அத்தகைய கர்மங்களைப் பகவான் அப்போதே அழிக்கிறான். அந்த நொடியிலேயே மோக்ஷம் பெற்றால் அல்லாமல் உயிர் தரிக்கமாட்டாதவர்களான மிகுந்த துடிப்பு கொண்ட ப்ரபந்நர்களுக்கு, பலன் அளிக்கத் தொடங்கிவிட்ட கர்மங்களை, அந்த நொடியிலேயே அழிக்கிறான். ஆகவே பலன் அளிக்கத் தொடங்கிய கர்மங்களைப் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்று விரும்புவதில் குறையில்லை.