Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 109)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“பாபேப்ய:” என்னும் பன்மை மற்றும் “ஸர்வ” என்னும் சொல் ஆகியவற்றின் விளக்கம்

மூலம் – இப்படி புண்யபாப ரூபமான பந்த காரணத்தைப் பாப சப்தத்தாலே சொல்லி, பஹுவசநத்தாலே புண்யபாபங்களினுடைய ஆநந்த்யத்தை விவக்ஷிக்கிறது. இனி ஸர்வ சப்தத்தாலே விசேஷிக்கிறதென் என்னில், ப்ராப்தி விரோதியான கர்மத்துக்குக் காரணமாயும் கார்யமாயும் வருகிற அவித்யையையும், விபரீத வாஸநையையும், விபரீத ருசியையும், “ஸ்தூல ஸூக்ஷ்ம ரூப ப்ரக்ருதி” ஸம்பந்தத்தையும் பாப ராசியிலே சேர்க்கைக்காக.

– இவ்விதமாக ஸம்ஸார பந்தம் உண்டாவதற்குக் காரணமாக உள்ள புண்ணியம் மற்றும் பாபம் ஆகிய இரண்டுமே “பாபம்” என்னும் சொல்லால் உரைக்கப்பட்டு, “பாபேப்ய:” என்ற பன்மை மூலம் புண்ணியம் மற்றும் பாபம் ஆகியவற்றின் எண்ணற்ற நிலை கூறப்படுகிறது. பகவானை அடைவதற்குத் தடையாக உள்ள கர்மங்களுக்குக் காரணமாகவும் மற்றும் அத்தகைய கர்மங்களின் கார்யமாகவும் உள்ள அவித்யை, விபரீதமான வாசனைகள், விபரீதமான ருசிகள், ஸ்தூலமாகவும் ஸூக்ஷ்மமாகவும் உள்ள சரீரத்தை விடுவதை முடிய ஜீவாத்மாவைப் பற்றியபடி உள்ள இந்த உலகின் ஸம்பந்தம் போன்ற பலவும் “ஸர்வ” என்னும் சொல் மூலமாக பாபங்களின் கூட்டத்தில் சேர்க்கப்பட்டன.