Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 108)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
“ஸர்வபாப” என்பதன் விளக்கம் - முமுக்ஷுவுக்கு புண்ணியமும் பாபமே என்றாதல்
மூலம் – இப்படி பந்த மோக்ஷ சக்தனான மோக்ஷ ப்ரதனையும், அசக்தனாய் அவன் பக்கலிலே ந்யஸ்தபரனான முமுக்ஷுவையும் சொல்லி, மேல் “ஸர்வ பாபேப்ய:” என்று பந்தங்களைச் சொல்லுகிறது. பாபமாவது, சாஸ்த்ரவிதேத்யமான அநர்த ஸாதநம்; அநர்த்தமாவது ப்ரதிகூல ப்ராப்தியும் அநுகூல நிவ்ருத்தியும். இங்கு பாபசப்தம் முமுக்ஷுவைப் பற்ற அநிஷ்ட பலங்களான ஸாம்ஸாரிக புண்யங்களையும் சொல்லுகிறது. “ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந:” என்கையாலே, ஸ்வர்காதிகளும் முமுக்ஷுவுக்கு நரகமாகையால் இவனுக்கு ஸ்வர்கஹேதுவோடு நரகஹேதுவோடு வாசியில்லை. ஆகையாலிறே முமுக்ஷுவுக்குப் பாபங்களை விடச் சொல்லுகிறாப்போலே, “த்ரைவர்க்காந் த்யஜேத் தர்மாந்” என்று விதிக்கிறது. “இருவல்வினைகளும் சரித்து” என்கிறபடியே ஸுக்ருத துஷ்க்ருதங்கள் இரண்டும் முமுக்ஷுவுக்கு நிராகாரணீயங்களாகவிறே சொல்லுகின்றன.
– இப்படியாக சேதநனுக்கு ஸம்ஸார பந்தம் மற்றும் மோக்ஷம் ஆகிய இரண்டையும் அளிக்கவல்லவனும், மோக்ஷத்தை அளிப்பவனும் ஆகிய பகவானைக் கூறி (இது “அஹம்” என்னும் சொல்), தன்னிடம் எந்தவிதமான சக்தியும் அற்றவனாக தனது பாரங்கள் அனைத்தையும் பகவானிடம் ஒப்படைத்தவனாக உள்ள முமுக்ஷுவைக் கூறி (இது “த்வா” என்னும் சொல்), அடுத்து ஸம்ஸார பந்தங்களாக உள்ளவை “ஸர்வ பாபேப்ய:” என்பதால் கூறப்படுகின்றன. பாபம் என்றால் தீங்கு ஏற்படுத்தவல்லது என்று சாஸ்த்ரம் மூலம் அறியப்படுவது ஆகும்; தீங்கு என்றால் தீமை உண்டாதல் மற்றும் நன்மை இழத்தல் ஆகும். இங்குள்ள “பாபம்” என்னும் சொல்லானது முமுக்ஷுக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு விருப்பம் இல்லாத பலன்களாகிய புண்ணியத்தையும் சேர்த்தே குறிக்கிறது. மஹாபாரதம் சாந்திபர்வம் (196-6) - ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந: - அவனுடைய இடத்தைப் பார்க்கும்போது மற்றவை நரகங்களே – என்று கூறப்படுவதால், முமுக்ஷுவுக்கு ஸ்வர்கமும் நரகத்தைப் போன்றதே ஆகும்; ஆகவே முமுக்ஷுவுக்கு ஸ்வர்க்கம் மற்றும் நரகம் ஆகியவற்றுக்கு இட்டுச் செல்லக்கூடிய காரணங்களில் வேறுபாடு இல்லை. இந்தக் காரணத்தால்தான் முமுக்ஷுக்களிடம் “பாபங்களை விடவேண்டும்” என்று கூறுவது போன்றே, த்ரைவர்க்காந் த்யஜேத் தர்மாந் – தர்மம், அர்த்தம், காமம் ஆகியவற்றுக்குக் காரணமான தர்மங்களையும் விடவேண்டும் – என்று விதிக்கப்பட்டது. திருவாய்மொழி (1-5-10) - இருவல்வினைகளும் சரித்து – என்பதற்கு ஏற்ப புண்ணியம் மற்றும் பாபம் ஆகிய இரண்டுமே முமுக்ஷுக்களுக்குத் தவிர்க்கப்பட வேண்டியவை என்றே கூறப்படுகின்றன.