Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 107)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
“த்வா” என்பதன் விளக்கம்
மூலம் – “த்வா” என்றது “ந த்வேவாஹம் முதலான உபதேச பரம்பரையாலே சிதசிதீச்வர தத்வ த்ரய விவேகம் பிறந்து, ஐச்வர்யாதி புருஷாத்தங்களினுடைய அல்பத்வ அஸ்திரத்வாதி தோஷங்களைத் தெளிந்து மத்ப்ராப்தி ரூபமான பரமபுருஷார்த்தத்தைப் பெறவேண்டுமென்று அபிநிவிஷ்டனாய் இதுக்கு உபதிஷ்டமான துஷ்கர உபாயாந்தரத்தில் துவக்கற்றுப் ப்ராப்யனாய் ஸர்வவிரோதி நிராகாரண க்ஷமனான என் பக்கலிலே பரந்யாஸம் பண்ணிக் க்ருதக்ருத்யனாய்க் கோலின பல லாபத்தை பற்ற இனி ஒரு கர்த்தவ்யாந்தரத்தில் ப்ராப்தியில்லாத உன்னை” என்றபடி.
– “த்வா – உன்னை” என்பதன் கருத்து என்ன? கீதை (2-12) - ந த்வேவாஹம் – ஸர்வேச்வரனாகிய நான் – என்பது போன்ற எனது உபதேசங்கள் மூலமாக “சித், அசித் மற்றும் ஈச்வரன்” ஆகிய மூன்று தத்துவங்களைக் குறித்த விவேகம் அடைந்தவனாகவும்; ஐச்வர்யம் முதலான பலன்களுடைய அற்பமான தன்மை மற்றும் நிலையற்ற தன்மை ஆகிய தோஷங்களை அறிந்தவனாகவும்; பகவானாகிய என்னை அடைதல் என்னும் மிகவும் உயர்ந்த பலனைப் பெற விரும்பியவனாகவும்; அதற்காக விதிக்கப்பட்ட பலவிதமான உபாயங்கள் அனைத்தையும் விலக்கியவனாகவும்; உன்னால் அடையத்தக்கவனும், உனது விரோதிகள் அனைத்தையும் நீக்கவல்லவனும், அனைத்தையும் பொறுப்பவனும் ஆகிய என்னிடம் உனது பாரங்கள் அனைத்தையும் ஒப்படைத்தவனாகவும்; இதன் மூலம் செய்யவேண்டிய அனைத்தையும் செய்து முடித்தவனாகவும்; இந்தப் பலனுக்காக இனி வேறு எந்த உபாயத்தையும் பற்றவேண்டாதவனாகவும் உள்ள உன்னை என்று கருத்து.