Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 106)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
“அஹம்” என்பதன் விளக்கம்
மூலம் – இவ் “அஹம்” என்கிற பதத்தில் ஸஹஜ காருண்யாதிகள் பேரணியாக, ப்ரபத்தியடியாக வந்த ப்ரஸாத விசேஷம் இளவணியாய், நிரங்குசமான ஸ்வாதந்த்ர்யம் ஸர்வவிரோதி நிராகரணார்த்தமாக முன்னே நிற்கிறது. அது எங்ஙனேயென்னில், ஸஹஜ காருண்யம் அல்ப வ்யாஜத்தைக் கொண்டு அநந்த அபராதங்களை அநாதரிக்கும்படியான ப்ரஸாதத்தை உண்டாக்குகிறது. இப் ப்ரஸாத விசேஷம், காருண்ய உபச்லிஷ்டமாய்க் கொண்டு, நிரங்குச ஸ்வாதந்த்ர்யத்தை ஆச்ரிதருடைய ஸர்வவிரோதி நிராகரணத்துக்கு உறுப்பாக்குகிறது. இப்படி ஸர்வ பாப விமோசநத்துக்கு அபேக்ஷிதமான ஸர்வாகாரத்தாலும் விசிஷ்டனான ஈச்வரனுடைய நிரபேக்ஷ கர்த்ருத்வ தத்பரமான “அஹம்” சப்தத்திலே அவதாரணம் பலிதம்.
– இங்குள்ள “அஹம் – நான்” என்னும் சொல்லானது, பகவானுடைய இயல்பான கருணையை மூலகாரணமாகக் கொண்டபடி, ப்ரபத்தி மூலமாக ஏற்படுகின்ற சிறப்பான அனுக்ரஹத்தை நடுவில் உண்டாகக்கூடிய துணையாகக் கொண்டு, எந்தவிதமான தடையும் இன்றி உள்ளதான பகவானுடைய சுதந்திரம் என்பது அனைத்துவிதமான பாபங்களையும் நீக்குவதற்கு, தான் முன்னே நிற்பதை உணர்த்துவதாகவும் கொள்ளலாம். இது எப்படி? பகவானுக்கு இயல்பாகவே உள்ள கருணை என்பது, அவனை அண்டியவர்களிடம் மிகவும் சிறிய அளவில் இருக்கின்ற ஏதேனும் ஒரு காரணத்தைக் கைக்கொண்டு, அவர்களுடைய எல்லையற்ற அபராதங்களை அவன் தள்ளும்படியான அனுக்ரஹத்தை உண்டாக்குகிறது. இத்தகைய அனுக்ரஹமானது அவனுடைய கருணையுடன் சேர்ந்ததாக நின்று, அவனுடைய தடையற்ற சுதந்திரத்தை, அவனை அண்டியவர்கள் அவனை அடையத் தடையாக உள்ள அனைத்துவிதமான விரோதிகளையும் நீக்குவதற்கு அடிப்படையாக உள்ளது. இவ்விதம் “அஹம்” என்னும் சொல்லானது, அனைத்து பாபங்களிலிருந்தும் விடுவிப்பதற்கு அவசியமாக உள்ள அனைத்து அம்சங்களுடனும் கூடியுள்ள ஈச்வரனுடைய “எதனையும் எதிர்பாராமல் செயல் புரிதல்” என்னும் தன்மையை வெளிப்படுத்துவதால், இந்தச் சொல்லில் “நானே (அதாவது நான் மட்டுமே”) என்னும் ஏவகாரம் மறைமுகமாக வெளிப்படுகிறது.