Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 105)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“அஹம்” என்பதன் விளக்கம்

மூலம் – இவ்விடத்தில் “மோக்ஷயிஷ்யாமி” என்கிற உத்தமனாலே, “நான்” தோற்றா நிற்க, மிகுதியான “அஹம்” என்கிற பதம், அர்த்த ஸ்வபாவத்தாலே ஸர்வபாப விமோசநத்துக்கு உறுப்பான அகடிதகடநா சக்த்யாதிகளை விவக்ஷித்து ஸப்ரயோஜனமாகிறது. “அபராதம் பண்ணினவனை விலங்கிட்டு வைத்த ஸமாதிக தரித்ரனான நான் ஒரு வ்யாஜத்தாலே உல்லஸித காருண்யனாய் அபராதத்தைப் பொறுத்து விடும்போது விலக்கவல்லாரில்லை. வேறொருவனாலே இவனை முக்தனாக்கவுமெண்ணாது” என்று இங்கு தாத்பர்யம். இவ்வர்த்தம் “மோக்ஷதோ பகவாந் விஷ்ணு:”, “பசவ: பாசிதா: பூர்வம் பரமேண ஸ்வலீலயா | தேநைவ மோசநீயாஸ்தே நாந்யைர்மீசயிதும் க்ஷமா:” இத்யாதிகளிலே ப்ரஸித்தம்.

– இந்த இடத்தில் உள்ள “மோக்ஷயிஷ்யாமி – விடுவிப்பேன்” என்ற தன்மை விகுதி மூலம் ”நான்” என்பது வெளிப்படாமல் உள்ளது. ஆகவே தொடர்ந்து “அஹம் – நான்” என்று கூறப்பட்டதால், அனைத்துவிதமான பாபங்களிலிருந்தும் தன்னை அண்டியவனை விடுவிப்பதற்கு அவசியமாக உள்ளதான “யாராலும் செய்ய இயலாத செயல்களைச் செய்தல்” என்பது போன்ற சக்திகளை வெளிப்படுத்தப்படுகிறது. அதாவது, “மிகுந்த அபராதங்களைச் செய்த ஒருவனை ஸம்ஸாரம் என்னும் சிறையில் அகப்படுத்தி, ‘என்னைக் காட்டிலும் உயர்ந்தவரும் இல்லை, சமமானவரும் இல்லை’ என்பவனாக உள்ள நான், அவன் கைக்கொண்ட உபாயம் காரணமாக, ஓங்கி வளர்கின்ற கருணை கொண்டு அவனுடைய அபராதங்களைப் பொறுத்துக் கொண்டு அவனுக்குப் பலன் அளிக்கத் தொடங்கும்போது, அதனை விலக்கவல்லவர்கள் யாரும் இல்லை. நான் அல்லாமல் இவனுக்கு வேறு யாரும் முக்தி அளிக்கவும் இயலாது” என்று கருத்து. இந்தக் கருத்தானது, மோக்ஷதோ பகவாந் விஷ்ணு: - பகவான் விஷ்ணுவே மோக்ஷம் அளிக்கவல்லவன் – என்றும், ஸ்ரீவிஷ்ணுதத்வம் - பசவ: பாசிதா: பூர்வம் பரமேண ஸ்வலீலயா | தேநைவ மோசநீயாஸ்தே நாந்யைர்மீசயிதும் க்ஷமா: - ஸர்வேச்வரனால் அவனுடைய லீலைக்காகவே இங்கு அனைவரும் கர்மம் என்னும் கயிற்றால் கட்டப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க அவனால் மட்டுமே முடியும் அல்லாமல், வேறு யாராலும் அல்ல – என்றும் உள்ள வரிகளில் காணலாம்.