Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 104)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

சரம ச்லோகத்தின் இரண்டாம் வரியின் விஷயம்

மூலம் – இப்படிப் பூர்வார்த்தத்தாலே ஓர் அதிகாரி விசேஷத்துக்கு த்வயத்தில் பூர்வகண்டத்திலே அநுஸந்தேயமாய் ஸர்வதர்மங்களுக்குமுள்ள ப்ரபாவத்தையும் அவற்றுக்கு இல்லாத ஸ்வ அஸாதாரண ப்ரபாவத்தையும் உடைத்தான ஸக்ருத் கர்த்தவ்ய உபாய விசேஷத்தை அதிகார நைரபேக்ஷ்யாதி விவரண பூர்வகமாக விதித்து, உத்தரார்த்தத்தாலே த்வயத்தில் உத்தரகண்டத்தில் பலத்தை நம: சப்த ஸம்க்ஷிப்த அநிஷ்ட நிவ்ருத்தி விவரணமுகத்தாலே அருளிச் செய்தான். இங்கு பூர்வார்த்தத்தாலே அதிகாரி க்ருத்யத்தை அருளிச்செய்தான்; உத்தரார்த்தத்தாலே சரண்யனாய் ஸ்வீக்ருத பரனான தன் க்ருத்யத்தை அருளிச்செய்து, க்ருதக்ருத்யனான இவனைத் தேற்றுகிறான்.

– இவ்விதமாக சரம ச்லோகத்தில் உள்ள முதல் பகுதி மூலமாக, குறிப்பிட்ட அதிகாரிக்கு, த்வய மந்த்ரத்தின் முற்பகுதியில் கூறப்பட்டதும், மற்ற அனைத்து தர்மங்களில் உள்ள பெருமைகள் அனைத்தையும் தன்னுள் அடக்கியது மட்டும் அல்லாமல் அவற்றுக்கு இல்லாத பல பெருமைகளைக் கொண்டதும், தனக்கென்று வேறு எந்தவிதமான அங்கங்களையும் எதிர்பாராமல் உள்ளதும், ஒருமுறை மட்டுமே செய்யத்தக்கதும் ஆகிய ப்ரபத்தியை விதித்தான். சரம ச்லோகத்தின் இரண்டாவது பகுதியில், த்வய மந்த்ரத்தின் இரண்டாவது பகுதியில் உள்ள “நம:” என்பதன் மூலம் சுருக்கமாகக் கூறப்பட்டதான இந்த ப்ரபத்தியின் பலனை, அதிகாரிக்கு விருப்பம் அல்லாதவற்றை விலக்குகிறது என்பதன் மூலமாக விரிவாக அருளிச்செய்தான். மேலும், சரம ச்லோகத்தின் முதல் பகுதி மூலமாக அதிகாரி செய்யவேண்டியதை உரைத்தான்; இரண்டாம் பகுதி மூலமாக சரணம் அடையத்தக்கவனாக இருந்து, தன்னைச் சரணம் அடைந்தவனுடைய பாரத்தை ஏற்றுக் கொண்ட க்ருஷ்ணன், தான் செய்யவேண்டியதை உரைத்து, செய்யவேண்டியதைச் செய்தவனாகிய அர்ஜுனனைத் தேற்றுகிறான்.