Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 103)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
“ஏக” என்பதன் பொருள் சுருக்கம்
சாதனமும் நற்பயனும் நானே யாவன் சாதகனும் என் வயமாய் என்னைப் பற்றும் சாதனமும் சரணநெறி அன்றுனக்குச் சாதனங்கள் இந்நிலைக்கோர் இடையினில்லா வேதனை சேர் வேறங்கம் இதனில் வேண்டா வேறெல்லா நிற்கு நிலை நானே நிற்பன் தூதனுமாம் நாதனுமாம் என்னைப் பற்றிச் சோகம் தீரென உரைத்தான் சூழ்கின்றானே
– “உபாயமாகவும், நல்ல பயனாகவும் நானே நிற்பேன். உபாயத்தைக் கைக்கொள்பவன் எனக்கு வசப்பட்டவனாக நின்று, என்னையே சரணம் அடைவான். உனக்குச் சரணாகதி என்பது பலனை ஏற்படுத்தவல்லது மட்டுமே அல்லாமல் நேர் உபாயம் அல்ல. பக்தி முதலான உபாயங்கள் இத்தகைய சரணாகதிக்கு துணை அல்ல. மிகுந்த சிரமத்துடன் இயற்றவல்ல மற்ற அங்கங்கள் ஏதும் சரணாகதிக்கு அவசியம் இல்லை. மற்ற உபாயங்கள் அனைத்தும் நிற்கின்ற இடத்தில் நின்று நானே பலனை அளிப்பேன். தூது செல்லும்படி எளியவனாகவும், ஸ்வாமியாகவும் உள்ள என்னைச் சரணம் புகுந்து உனது சோகத்தைப் போக்கிக் கொள்வாயாக”, என்று உரைத்த ஸர்வேச்வரன், தானே நம்மை விடாமல் சூழ்ந்து கொள்கிறான்.