Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 102)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
“வ்ரஜ” என்பது விதிக்கப்படுவதில்லை என்பது போன்ற வாதங்களை மறுத்தல்
மூலம் – அவிதேய ஜ்ஞாநத்தை மோக்ஷஸாதநமாகச் சொல்லுவார்க்கு விதி விரோதாதி தோஷங்களும் வரும் என்று ஸாதித்ததிறே. ஆன பின்பு ஸர்வ விதித்யாதி நிஷ்டரான முமுக்ஷுக்களுக்கும் பொதுவாய்ப் பரம்பரயா உபகாரகமான ஜீவ பரமாத்ம ஸம்பந்த ஜ்ஞாநம் சாஸ்த்ரத்தாலே பிறந்தவனுக்கு நம்முடைய ஸ்வாமியாய் நிரதிசய போக்யனான ஸ்ரீய:பதியைப் ப்ராபிக்கைக்கு விரகு எது என்கிற உபாயாகாங்க்ஷை பிறந்தவளவில் இங்கே அவ்வோ அதிகாரி விசேஷ அநுரூபமாக விதிக்கப்படுகிற ஜ்ஞாநாந்தரங்கள் பக்தி ப்ரபத்திகள். அவற்றில் ப்ரபத்தியாவது “யத் ஸம்ரக்ஷ்யதயா அர்ப்யதே” இத்யாதிகளிற்படியே ஸபரிகரமான ஸ்வரக்ஷாபர ஸமர்ப்பணம். இது ஸம்பந்த அநுஸந்தாந கர்ப்பமாக வேண்டுமென்கைக்காக, ஸம்பந்த ஜ்ஞாநம் ப்ரபத்தியென்று சொன்னார்களத்தனை. இப்பரந்யாஸ ரூப ப்ரபத்தியின் ஸ்வரூப பரிகர அதிகாராதிகளை முன்பே பரக்கச் சொன்னோம்.
– விதிக்கப்படவேண்டாத ஞானம் என்பது மோக்ஷத்திற்கு ஸாதனம் என்று சிலர் கூறலாம்; இவ்விதம் கூறினால், விதிமுறைகளுக்கு விரோதம் போன்ற தோஷங்கள் வரலாம் என்று ஸ்ரீபாஷ்யத்தில் கூறப்பட்டது. இவ்விதம் கொள்ளும்போது, முமுக்ஷுக்கள் எந்த வித்யையைக் கைக்கொண்டாலும், ஜீவாத்மா மற்றும் பரமாத்மா ஆகியோருக்கு இடையே உள்ள ஸம்பந்தத்தைக் குறித்த ஞானம் என்பதே மறைமுகமாக உதவுவதாக உள்ளது. இத்தகைய ஞானத்தை முமுக்ஷு ஒருவன் தகுந்த சாஸ்த்ரம் மூலம் அறிந்த பின்னர், “நம்முடைய ஸ்வாமியும், எல்லையற்ற இனிமை உள்ளவனும் ஆகிய மஹாலக்ஷ்மியின் நாயகனை அடைவதற்கான வழி எது?” என்று அறிவதற்கான ஆசை உண்டாகிறது. இவ்விதமான அதிகாரிக்குத் தகுந்தபடி விதிக்கப்படுவது என்னவென்றால், ஞானம் என்னும் வடிவத்தைக் கொள்கின்ற பக்தி மற்றும் ப்ரபத்தி ஆகும். இவற்றில் ப்ரபத்தி என்பது, அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (52-36) - யத் ஸம்ரக்ஷ்யதயா அர்ப்யதே – யாரிடம் இந்த ஜீவாத்மாவைக் காப்பாற்றும் பொறுப்பை அளிக்கவேண்டும் – என்றுள்ள வாக்கியங்களின்படி, தன்னைக் காக்கும் அனைத்து பொறுப்புகளையும் அவனிடம் அளிப்பதே ஆகும். இத்தகைய ப்ரபத்தி என்பது ஜீவாத்மா மற்றும் பரமாத்மா ஆகியோருக்கு இடையே உள்ள ஸம்பந்தத்தைக் குறித்த ஞானத்துடன் கைக்கொள்ளப்பட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே இத்தகைய ஞானம் என்பதே ப்ரபத்தி என்று கூறினார்கள். தன்னுடைய பாரத்தை அவனிடம் ஸமர்ப்பணம் செய்வதாகிய ப்ரபத்தியின் ஸ்வரூபம், அங்கங்கள் மற்றும் அதிகாரிகள் குறித்து முன்பே விரிவாக உரைத்தோம்.