Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 99)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

ஜீவாத்மாவிற்குக் கர்த்ருத்வம் இல்லை என்பதால் தடுக்கப்பட்ட கர்மங்கள் அவனுக்கு ஒட்டாது என்னும் வாதத்திற்கான மறுப்பு

மூலம் – இப்படி பராதீந கர்த்ருத்வம் ப்ராமாணிகமாகையாலே ஆத்மாவுக்குக் கர்த்ருத்வ மில்லாமையாலே ஸ்வரூபம் தெளிந்தவனை நிஷித்த கர்மங்களில் ஒன்றும் லேபியாதென்கிற பக்ஷமும் நிரஸ்தம். முமுக்ஷுவுக்குச் சொன்ன பால்யம் பால க்ருத்யங்களான காமசாராதிகளன்று. ஸ்வமாஹாத்ம்ய அநாவிஷ்காரமாத்ரம் என்னுமிடம் “அநாவிஷ்குர்வந்நந்வயாத்” என்கிற ஸூத்ரத்திலே ஸமர்த்திதம். “அநிஷ்டமிஷ்டம் மிச்ரம் ச”, “யஸ்ய நாஹம்க்ருதோ பாவ:” இத்யாதி வசனங்கள், புத்திபூர்வ உத்தராக விஷயங்களல்லவென்னுமிடம் பஹு சாஸ்த்ர விரோதம் வாராமைக்காக, பாஷ்யாதிகளிலே ஸமர்த்திக்கப்பட்டது. “ஹத்வா அபி” என்றதுவும் தர்மயுத்தாதி விஷயம்.

– “ஜீவாத்மாவின் கர்த்ருத்வம் என்பது பகவானுக்கு வசப்பட்டதாக இருத்தல் என்பது பல ப்ரமாணங்களால் வெளிப்படுவதால், ஜீவாத்மாவுக்கு உண்மையான கர்த்ருத்வம் இல்லை. ஆகவே இவ்விதமாகத் தனது ஸ்வரூபம் குறித்து உள்ளது உள்ளபடி அறிந்தவர்களுக்கு, தடுக்கப்பட்ட கர்மங்களைச் செய்வதால் எந்தவிதமான தோஷமும் உண்டாகாது” என்று சிலர் கூறுவதும் தவறாகும். முமுக்ஷு ஒருவன் குழந்தை போன்று இருக்கவேண்டும் என்று உபநிஷத்துக்கள் கூறுவதன் மூலம், அவர்கள் தங்கள் விருப்பம்ம் போன்று செயலாற்றலாம் என்று கூறப்படவில்லை. குழந்தைகள் போன்று இருத்தல் என்பது, “தன்னைக் குறித்து பெருமையாக அனைவரிடமும் பறைசாற்றக்கூடாது” என்பதையே குறிக்கிறது; இதனையே ப்ரஹ்மஸூத்ரம் (3-4-49) – அநாவிஷ்குர்வந் அந்வயாத் - வெளிப்படுத்தாமல் இருப்பதே, தொடர்பு உள்ளதால் (இப்படி உள்ள பால்யத் தன்மைக்கு வித்யைக்கும்) – என்கிறது. கீதை (18-12) - அநிஷ்டமிஷ்டம் மிச்ரம் ச – விருப்பம் அற்றவை மற்றும் விருப்பமானை ஆகிய இரண்டும் கலந்து – என்றும், கீதை (18-17) - யஸ்ய நாஹம்க்ருதோ பாவ: - “நானே செய்கிறேன்” என்னும் எண்ணம் இன்றி – என்றும் உள்ள வாக்கியங்கள், ப்ரபத்திக்குப் பின்னர் அறிந்து கொண்டே செய்யும் பாபங்களைக் குறிக்கவில்லை என்று கீதாபாஷ்யத்தில் எம்பெருமானார் அருளிச்செய்தார்; இவ்விதம் கொண்டால் மட்டுமே வேறு எந்தச் சாஸ்த்ரங்களுடனும் முரண்பாடு உண்டாகாது. கீதை (18-17) – ஹத்வா அபி – கொன்றாலும் – என்பது தர்மயுத்தத்திற்கு மட்டுமே பொருந்தும்.