Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 97)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
பிள்ளான் வாக்கியங்களின் கருத்து
மூலம் – இப்படி பக்த்யாதிகள் போலே சரணாகதி தர்மமும் கர்த்தவ்யமாக விதிக்கப்படுகையால், “தன்னால் வரும் நன்மை விலைப்பால் போலே, ஈச்வரனால் வரும் நன்மை முலைப்பால் போலே” என்று பிள்ளான் வார்த்தைக்கு, “பக்தி ப்ரபத்யாதிகளெல்லாம் அவனாலே வருகினவென்று நினைக்கவேண்டும்” என்று தன்னுடைய பராதீந கர்த்ருத்வத்திலே தாத்பர்யம்.
– இவ்விதமாக பக்தி போன்று, சரணாகதி என்னும் தர்மமும் செய்யப்படவேண்டிய ஒன்று என விதிக்கப்படுகிறது. ஆகவே திருக்குருகைப் பிரான் பிள்ளான் கூறியதான “நாமே நமக்கு ஏற்படுத்திக் கொள்ளும் நன்மை என்பது விலைக்கு வாங்கப்படும் பால் போன்றதாகும். ஈச்வரனால் நமக்கு உண்டாகும் நன்மை என்பது தாய்ப்பால் போன்றதாகும்”, என்பதன் மூலம், “பக்தி மற்றும் ப்ரபத்தி போன்ற அனைத்து அவனுடைய கருணையால் உண்டாவதே ஆகும்” என்பதை உணரவேண்டும். மேலும் ஜீவாத்மா ஈச்வரனை நம்பியே உள்ளான் என்பதும் தெளிவாகிறது.