Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 95)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
ஜீவனுக்கு ப்ரபத்தியை விதிப்பது பொருந்தாது என்ற கருத்துக்குக் கண்டனம்
மூலம் – இப்படியிருக்கையால் ஆத்மாவுக்கு கர்த்ருத்வமில்லை என்கிற வாக்யங்களுக்கும் கர்த்ருத்வமுண்டென்கிற வாக்யங்களுக்கும் விஷய வ்யவஸ்தை உண்டாகையாலே விரோதமில்லை. அது எங்ஙனேயென்னில், கர்த்ருத்வமில்லை என்கிற வாக்யங்கள் ஈச்வராதீனமாயும், ததாயத்த ப்ரக்ருதி அதீனமாயும் வரும் கர்த்ருத்வத்தை நிரபேக்ஷமென்று நினைக்கலாகாதென்கிறன. கர்த்ருத்வம் உண்டு என்கிற வாக்யங்கள், ஈச்ரவேச்சாதிகளடியாகவே வந்த ஜ்ஞாநத்துக்கும் தத்விசேஷங்களான சிகீர்ஷா ப்ரயத்னங்களுக்கும் இவனே ஆச்ரயமென்னும் இடத்தைச் சொல்லுகின்றன. இந் நிஷ்கர்ஷ ப்ரகாரத்தை, “சரீர வாங்மநஸோபிர்யத்” என்று தொடங்கி, கீதாசார்யன் தானே அறுதியிட்டான். அவ்விடத்தில், “தேவம் சைவாத்ர பஞ்சமம்” என்று புருஷோத்தமனைச் சொல்லுகிறது. இவன் ஜீவனை ஒரு கார்யத்தில் ப்ரவர்த்திப்பிக்கும்போது இக்கார்யத்தைப் பற்றக் காரயிதாவென்று சொல்லப்படும்; தானே ப்ரவர்த்திக்கும் பல ப்ரதாநாதிகளிலும் ஸ்ருஷ்ட்யாதிகளிலும் கர்த்தாவென்று சொல்லப்படும்; ஒன்றிலே ப்ரவ்ருத்தனான சேதநனை விலக்காதவளவில் உபேக்ஷகன்; அப்போது இசைந்திருக்கையாலே அநுமந்தா; இளந்தலை சுமக்குமவனுக்குப் ப்ரபலன் பெருந்தலை சுமக்குமாப்போலே கூடப் ப்ரவர்த்திக்கையாலே ஸஹகாரி. ஸ்ருஷ்ட்யாதிகளில் தேவ மநுஷ்யாதி வைஷம்யம், ஜீவ கர்மவிசேஷ உபாதிகமாகையாலே “சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச: | தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்தயகர்த்தாரம் அவ்யயம்” என்று ஈச்வரனுக்குக் கர்த்ருத்வ நிஷேதம் பண்ணுகிறது.
– இவ்விதம் உள்ளபோது, சாஸ்த்ரங்களில் ஆத்மாவுக்குக் கர்த்ருத்வம் (செயல் புரிதல்) இல்லை என்றும், ஆத்மாவுக்குக் கர்த்ருத்வம் உண்டு என்றும் கூறப்படும் வாக்கியங்களுக்கு முரண்பாடு இல்லை; காரணம், எப்போது கர்த்ருத்வம் இல்லை மற்றும் எப்போது உண்டு என்று பிரித்துக் கூறும் வரையறை உள்ளதால் ஆகும். அது எப்படி? ஜீவனுக்குக் கர்த்ருத்வம் இல்லை என்று கூறும் வாக்கியங்கள், “ஜீவாத்மாவின் கர்த்ருத்வம் என்பது ஈச்வரனுக்கு அடங்கியே வருகிறது என்பதாலும், ஈச்வரனுக்கு அடங்கிய ப்ரக்ருதிக்கு அடங்கியே வருகிறது என்பதாலும், ஈச்வரனை எதிர்பார்த்து நிற்காமல் சுதந்திரமான கர்த்ருத்வம் ஜீவனுக்கு இல்லை”, என்பதையே கூறுகின்றன. ஜீவனுக்குக் கர்த்ருத்வம் உண்டு என்று கூறும் வாக்கியங்கள், “ஈச்வரனுடைய ஸங்கல்பம் காரணமாகவே உண்டாகும் ஞானம் மற்றும் அத்தகைய ஞானத்தின் விளைவுகளாக உள்ள இச்சை மற்றும் முயற்சிகள் ஆகியவற்றுக்கு இருப்பிடமாக ஜீவாத்மா உள்ளான்”, என்பதையே கூறுகின்றன. இதனை கீதாசார்யன் கீதையில் (18-15) - சரீர வாங்மநஸோபிர்யத் – சரீரம், வாக்கு, மனம் என்றுள்ள ச்லோகம் தொடங்கி உரைத்தான். கீதை (18-14) - தேவம் சைவாத்ர பஞ்சமம் – ஐந்தாவது தெய்வம் – என்பது புருஷோத்தமனையே குறிப்பதாகும். ஈச்வரன், ஜீவனை ஒரு செயலில் ஈடுபடுத்தும்போது, அந்தக் கார்யத்தைப் பொறுத்தவரை, காரயிதா எனப்படுகிறான். ஈச்வரன், தானே செயல்படுவதாக உள்ளதான பலன்களை அளித்தல் மற்றும் ஸ்ருஷ்டி முதலானவற்றில், கர்த்தா எனப்படுகிறான். சேதநன் ஒரு செயலில் ஈடுபடும்போது அவனை அந்தச் செயலிலிருந்து ஈச்வரன் விலக்காதபோது, உபேக்ஷகன் எனப்படுகிறான். அந்தச் செயலைச் செய்ய அனுமதிக்கும்போது அநுமந்தா எனப்படுகிறான். அதிகமான சுமையைச் சுமக்கும் சக்தி அற்றவனுக்கு, பெரும் சுமையைச் சுமக்கும் சக்தி கொண்டவன் உதவுவது போன்று ஜீவனுடன் சேர்ந்து நின்று செயலில் ஈடுபடும்போது ஸஹகாரி எனப்படுகிறான். ஸ்ருஷ்டியில் உண்டாகின்ற “தேவர்கள், மனிதர்கள்” முதலான வேறுபாடுகள் ஜீவாத்மாவின் கர்மம் காரணமாகவே உண்டாகின்றன. ஆகவே கீதை (4-13) - சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச: | தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்தயகர்த்தாரம் அவ்யயம் – குணங்கள் மற்றும் கர்மங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டன. இவ்விதம் அத்தகைய ஸ்ருஷ்டி முதலானவற்றை நான் செய்தாலும், நான் அவற்றின் கர்த்தா அல்லன் என்று அறிவாயாக – என்று கூறுவதன் காரணமாக, ஈச்வரனுக்குக் கர்த்ருத்வம் இல்லை என்று தள்ளப்படுகிறது.