Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 94)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
ஜீவனுக்கு ப்ரபத்தியை விதிப்பது பொருந்தாது என்ற கருத்துக்குக் கண்டனம்
மூலம் – பல தசையில் விவித விசித்ர கைங்கர்ய கர்த்ருத்வம் கேவலம் ஈச்வரேச்சா வைசித்ரியோடே பொருந்தின ஸ்வேச்சையாலேயாயிருக்கும். ஸம்ஸார தசையில் உள்ள கர்த்ருத்வமெல்லாம், கர்மானுரூபமாக ஈச்வரன் பரிணமிப்பித்த ஸத்த்வ ரஜஸ் தமஸ்ஸுக்களை உபாதியாகக் கொண்டு பஹுவிதமாயிருக்கும். இதில் ரஜஸ்ஸாலும் தமஸ்ஸாலும் ப்ரயோஜநாந்தர ஸங்க ஹேதுவான ஸத்த்வத்தாலும் வரும் கர்த்ருத்வம், பந்தகம். பகவத் ப்ராப்தியிலே ஸங்கத்தைப் புணர்க்கும் ப்ரக்ருஷ்ட ஸத்த்வ விசேஷமடியாக வரும் கர்த்ருத்வம், மோக்ஷ காரணம். இக் குணத்ரயத்தோடு துவக்கற்றிருக்கும் முக்ததசையில், கர்த்ருத்வம்.
– பலனாகிய மோக்ஷ நிலையில் பலவிதமானதும், அனைத்தைக் காட்டிலும் வேறுபட்டதும் ஆகிய கைங்கர்யங்களைச் செய்வதில் ஒருவனுக்கு உள்ள கர்த்ருத்வம் என்பது, ஸர்வேச்வரனுடைய பலவிதமான விருப்பங்களுக்கு ஏற்ப உள்ளதான தனது விருப்பத்தின் மூலம் உண்டாவதாகும். ஸம்ஸார நிலையில் உள்ள சேதநனுக்கு உள்ள கர்த்ருத்வம் அனைத்தும் அவனுடைய கர்மங்களுக்கு ஏற்ப ஈச்வரனால் உண்டாக்கப்பட்ட ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பலவிதமாக இருக்கும். இவற்றில் ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவற்றாலும், மற்ற பயன்களில் பற்றுதல் உண்டாக்கவல்ல ஸத்வம் ஆகியவற்றால் உண்டாகும் கர்த்ருத்வம் என்பது பந்தத்தை உண்டாக்குவதாகும். பகவானை அடையவேண்டும் என்னும் எண்ணத்தை அதிகரிக்கின்றதான உயர்ந்த ஸத்வம் மூலம் உண்டாகும் கர்த்ருத்வம் என்பது மோக்ஷ காரணமாகும். முக்தி நிலையில் உள்ள கர்த்ருத்வம் என்பது, இந்த மூன்று குணங்களின் ஸம்பந்தம் இல்லாமல் இருக்கும்.