Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 93)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
ஜீவனுக்கு ப்ரபத்தியை விதிப்பது பொருந்தாது என்ற கருத்துக்குக் கண்டனம்
மூலம் – இதில் சிகீர்ஷா ப்ரயத்நங்கள் ஜ்ஞாநத்தினுடைய அவஸ்தா விசேஷங்களென்னுமிடத்தை, வேதார்த்தஸங்க்ரஹத்தில் அருளிச்செய்த லாகவ யுக்தியாலே கண்டு கொள்வது. க்ரியாச்ரயத்வ ரூபமான கர்த்ருத்வம் சேதநாசேதந ஸாதாரணம். ப்ரயத்நாச்ரயத்வ ரூபமான கர்த்ருத்வம் சேதநைகாந்தம். ப்ரயத்நமாவது சரீராதி ப்ரேரண ஹேதுவான புத்தி விசேஷம். ஜ்ஞாநமாத்ரத்துக்கு ஆச்ரயமானபோதும், போக மாத்ரத்துக்கு ஆச்ரயமானபோதும், க்ரியாச்ரயத்வமாத்ரமான ஸாமாந்ய கர்த்ருத்வமே உள்ளது. ஒன்றைத் தன் புத்தியாலே உத்பாதிக்கும்போது ப்ரயத்நாச்ரயத்வ ரூபமான கர்த்ருத்வம். இப்படிப்பட்ட கர்த்ருத்வம், கைங்கர்ய மாத்ரத்திலே என்கையும் உசிதமன்று. அங்கும், பகவத் ப்ரீதியென்று ஒரு ப்ரயோஜநத்தை உத்தேசித்து உபாய அநுஷ்டாநம் பண்ணினானாயிறேயிருப்பது? ஆனபின்பு, கர்த்ருத்வத்தில் பந்த ஹேதுவான ஆகாரமே த்யாஜ்யம். அது எது என்னில், ஈச்வரன் கொடுத்த ஜ்ஞாநசக்த்யாதிகளையும், கரணகளேபராதிகளையும் கொண்டு, அவன் ப்ரேரகனுமாய்ப் பலியுமாய்க் கொண்டு, ஸஹகாரிக்கப் ப்ரவர்த்திக்கிற தன்னை, இதுக்கு விபரீதமாக அநுஸந்திக்கையும், இவ் வநுஸந்தாநத்தில் திருத்தமுண்டேயாகிலும், இதிலே ப்ரயோஜநாந்தரத்தை இடுக்கி அநுஷ்டிக்கையும் பந்தகம். பக்தி ப்ரபத்திகள் தாமும், ப்ரயோஜநாந்தர பரனுக்கு பந்தகமாயிறே இருப்பன? ஆகையால், ஸ்வாபாவிக கைங்கர்யார்த்தியாய், அநந்ய ப்ரயோஜநனாயிருக்குமவனுக்கும் பல தசையில் கர்த்ருத்வம் போலே, உபாய தசையில் கர்த்ருத்வமும் விருத்தமன்று.
– இந்த மூன்றில், “செயலில் விருப்பம், செயலைச் செய்யும் முயற்சி” ஆகிய இரண்டும் ஞானத்தின் நிலைமாறுதல்கள் (அல்லது ஞானத்தில் நிலைகள்) மட்டுமே ஆகும் என்பதை எம்பெருமானார் தனது வேதார்த்த ஸங்க்ரஹத்தில் அருளிச்செய்தமை காணலாம். செயல்களுக்கு இருப்பிடமாக இருத்தல் (அல்லது செய்பவனாக இருத்தல்) என்ற வடிவத்தில் உள்ள கர்த்ருத்வம் (செயலாற்றுதல் அல்லது செயல் புரிதல்) என்பது, சேதநங்களுக்கும் அசேதநங்களுக்கும் சாதாரணமாகவே இருக்கக்கூடிய ஒன்றாகும். ஆனால் ஒரு செயலில் முனைதல் (அல்லது முயற்சி) என்பது, சேதநங்களுக்கு மட்டுமே உள்ளதாகும். முயற்சி என்பது, சரீரத்தை ஒரு செயலுக்குப் பயன்படுத்தக் காரணமாக உள்ள புத்தியாகும். ஞானத்திற்கு மட்டுமே இருப்பிடமாக இருத்தல், இன்பத்திற்கு மட்டுமே இருப்பிடமாக இருத்தல் என்னும் நிலைகளில், “இருப்பிடமாக இருத்தல்” என்னும் செயல் மட்டுமே உள்ளது; இது சாதாரணமாக அனைவருக்கும் (சேதந, அசேதநங்கள்) உள்ளதாகும். ஆனால், தன்னுடைய புத்தியால் ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது மட்டுமே, அவனிடம் முயற்சியின் இருப்பிடமாக உள்ள கர்த்ருத்வம் காணப்படுகிறது. இத்தகைய செயலாற்றுதல் என்பது, கைங்கர்யத்தில் மட்டுமே உள்ளது என்று கூறுவதும் சரியல்ல; காரணம் இவ்விதம் கொண்டால், “பகவானுடைய மகிழ்ச்சி” என்னும் ஒரு பயனைக் கருத்தில் கொண்டே இத்தகைய உபாயத்தைக் கைக்கொள்கிறான் என்றாகிவிடும் அல்லவோ? ஆகவே எந்தவிதமான செயல் புரிதலிலும், ஸம்ஸார பந்தம் உண்டாக்கக் காரணமான அம்சங்கள் கைவிட வேண்டியவையே ஆகும். அத்தகைய செயலாற்றுதல்கள் எவை (அல்லது கைவிடத்தக்க அம்சங்கள் எவை)? ஈச்வரன் தனக்கு அளித்த ஞானம் மற்றும் சக்தி முதலியவைகள், சரீரம் மற்றும் இந்த்ரியங்கள் முதலியவைகள் ஆகியவற்றைக் கொண்டு ஒரு சேதநன், ஒரு செயலில் இறங்குகிறான். அப்போது அந்தச் சேதநனை ஏவுபவனாகவும், தாங்குபவனாகவும், அந்தச் செயல் மூலம் கிட்டவல்ல பயனை அனுபவிப்பனாகவும் இருந்தபடி ஈச்வரன், அந்தச் சேதநனில் செயல்பாட்டில் உதவுகிறான். ஆனால் அந்தச் சேதநன் இதனை உணராதபடி, முரணாக எண்ணினாலோ (அதாவது தானே அந்தச் செயலிச் செய்வதாக எண்ணுதல்), அல்லது இந்த விஷயத்தில் மெய்யான ஞானம் இருந்தாலும் (இவற்றை ஈச்வரனே செய்கிறான் என்னும் ஞானம்) வேறு ஒரு பயனுக்காகச் செய்தாலோ, அந்த எண்ணங்களே ஸம்ஸார பந்தத்தை உண்டாக்கிவிடும். மோக்ஷம் அல்லாத பயனுக்காகக் கைக்கொள்ளும் பக்தியும், ப்ரபத்தியும் கூட ஒருவனுக்கு பந்தத்தை உண்டாக்கிவிடும். ஆகவே தனக்கு இயற்கையாகவே அமைந்துள்ளதான பகவத் கைங்கர்யத்தை மட்டுமே வேண்டி நின்று, மற்ற எந்தவிதமான பயனையும் எதிர்பாராமல் உள்ள ஒருவனுக்கு, மோக்ஷ பலன் பெற்ற நிலையில் கைங்கர்யம் உள்ளது போன்று, மோக்ஷத்திற்கான உபாய நிலையில் உள்ளபோது, பகவானுக்கு அடங்கி நடத்தல் என்னும் செயலால் விரோதம் இல்லை.