Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 92)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
ஜீவனுக்கு ப்ரபத்தியை விதிப்பது பொருந்தாது என்ற கருத்துக்குக் கண்டனம்
மூலம் – இவ்விடத்திலே சிலர் “ஸ்வதந்த்ரனைக் குறித்தன்றோ ஒன்றை விதிப்பது? அத்யந்த பரதந்த்ரனாக அத்யாத்ம சாஸ்த்ரங்களிலும், மூல மந்த்ராதிகளிலும் சிக்ஷிதனான அதிகாரியைக் குறித்து ‘வ்ரஜ’ என்று ஒரு கர்த்தவ்யத்தை விதிக்கும்படி என்?” என்று சொல்லுவார்கள். இது பாரதந்த்ர்யத்தைப் பராமர்சியாமல் சொன்னபடி. எங்ஙனே என்னில், “கர்த்தா சாஸ்த்ரார்த்தவத்வாத்”, “பராத் து தத் ச்ருதே:” என்று வேதாந்தத்தில் அறுதியிட்டபடியே இவனுக்கு பகவததீந கர்த்ருத்வமுண்டாகையாலே, இவனைப் பற்ற விதிக்கக் குறையில்லை. அசித்துக்கள் சப்தாதிகளை ஈச்வரன் உண்டாக்கச் சுமக்கிறாப்போலே இவ்வளவு ஸ்வாதந்த்ர்யத்தை எடுத்துச் சுமக்கையும் இவனுக்கு பகவத் பாரதந்த்ர்ய காஷ்டையிருந்தபடி. இவனுக்கு ஒரு வழியாலும் கர்த்ருத்வம் இல்லையென்னில், ப்ரக்ருதி அவித்யாதிகளுக்குக் கர்த்ருத்வம் சொல்லுகிற ஸித்தாந்த துல்யமாம். கர்த்ருத்வம் ஸ்வாதீனமென்னில், ஸர்வாத்ம நியந்தா ஒருவன் என்கிற அர்த்தம் கிடையாமையாலே நிரீச்வர ஸித்தாந்தப்படியாம். ஈச்வராதீனமாக வரும் கர்த்ருத்வம் தானும் ஜ்ஞாத்ருத்வ மாத்ரமென்னில், புருஷார்த்த ஸம்பாதந ருசியும் ததுபாய ப்ரவ்ருத்தியும் தவிரப் ப்ரஸங்கிக்கும். ஜ்ஞாநமும், அதின் அவஸ்தா விசேஷமான இச்சையுமேயுள்ளன; வேறொரு வ்யாபாரமில்லையென்னிலும், த்ருஷ்ட அத்ருஷ்டார்த்தங்களான ஓர் உபாயங்களையும் ஸ்வயம் ப்ரயோஜனமான கைங்கர்யங்களையும் அநுஷ்டிக்க விரகில்லை. ஆகையால் ஜ்ஞாந சிகீர்ஷா ப்ரயத்னங்கள் மூன்றும் ஆத்மாவுக்கு உண்டு.
– ஒரு சிலர், “முற்றிலுமாகச் சுதந்திரமாக உள்ள ஒருவனைக் குறித்து மட்டுமே எந்த ஒரு செயலையும் செய்வது குறித்து விதிக்க இயலும். மூல மந்த்ரம் மற்றும் ஆத்மாவைக் குறித்து உரைக்கும் சாஸ்த்ரங்கள் ஆகிய அனைத்திலும், பகவானுக்கு அடிமையாக உள்ளவனாகவே ஜீவாத்மா கூறப்படுகிறான். இப்படி உள்ளபோது, சுதந்திரம் அற்றவனாக உள்ள ஜீவாத்மாவைக் குறித்து ‘வ்ரஜ’ என்பது போன்ற செயலைச் செய்வதை விதிப்பது எவ்விதம் பொருந்தும்?”, என்று கூறுவார்கள். இந்தக் கருத்தானது பகவானுக்கு வசப்பட்டிருத்தல் என்றால் என்ன என்பதை அறியாமல் உரைப்பதாகும். ப்ரஹ்ம ஸூத்ரம் (2-3-40) - கர்த்தா சாஸ்த்ரார்த்தவத்வாத் – ஜீவாத்மாவுக்கு செயல் புரிதல் உள்ளது – என்றும், ப்ரஹ்ம ஸூத்ரம் (2-3-33) - பராத் து தத் ச்ருதே: - அவனை நம்பியே உள்ளது – என்றும் வேதாந்தங்களில் உறுதியாகக் கூறுவதற்கு ஏற்ப, ஜீவாத்மாவுக்கு பகவான் இட்ட கட்டளைக்கு ஏற்றபடியான செயலாற்றுதல் உள்ளது என்பதால், இவனைக் குறித்து இவ்விதம் விதிப்பதில் எந்தக் குற்றமும் இல்லை. அசித் வஸ்துக்களாக உள்ள ஆகாசம் என்பது ஈச்வரன் உண்டாக்கிய சப்தத்தைத் தனது தன்மையாகக் கொள்வது போன்றே, பகவானால் அளிக்கப்பட்ட இத்தகைய செயலாற்றும் நிலையை ஜீவாத்மா கொண்டுள்ளான். ஜீவாத்மாவுக்கு எந்தவிதத்திலும் செயலாற்றுதல் என்பது இல்லையென்றால், “ப்ரக்ருதி மற்றும் அவித்யை ஆகியவற்றுக்கு மட்டுமே செயலாற்றுதல் உள்ளது” என்று கூறும் ஸாங்க்யம் மற்றும் அத்வைத ஸித்தாந்தம் போன்று ஆகிவிடும். “செயலாற்றுதல் என்பது ஜீவாத்மாவுக்கு சுதந்திரமான செயலாகவே உள்ளது” என்று கூறினால், அனைத்தையும் நியமிக்கும் ஒருவன் உள்ளான் என்னும் கருத்து இல்லாமல் போகும்; இது நிரீச்வர ஸாங்க்யம் என்றாகும். செயலாற்றுதல் என்பது பகவானுக்கு அடங்கியே உள்ளது என்றாலும், அது அறியும் செயலை மட்டுமே செய்கிறது என்று கூறினால், புருஷார்த்தங்களின் மீது எந்தவிதமான ருசியும் இல்லாமல் போகும்; மேலும் புருஷார்த்தங்களைப் பெற வைக்கும் உபாயங்களில் ஈடுபாடி இன்றியும் போகும். ஞானம் மற்றும் அதன் ஒரு நிலையான அதனைப் பெறவேண்டும் என்னும் ஆசை ஆகியவை மட்டுமே ஜீவாத்மாவுக்கு உள்ளன என்று கூறினால், இந்த உலகில் பெறுகின்ற பலன்கள் மற்றும் அந்த உலகில் பெறுகின்ற பலன்கள் ஆகியவற்றுக்கான உபாயம் மற்றும் தானே தனக்குச் செய்து கொள்ளும் செயல்கள் ஆகியவற்றைச் செய்யமாட்டனர். எனவே “அறிவு, செயலில் விருப்பம், செயலைச் செய்யும் முயற்சி” ஆகிய மூன்றுமே ஆத்மாவுக்கு உள்ளது.