Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 91)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

ப்ரபத்தியை ஒருமுறையே இயற்றவேண்டும்

மூலம் – “ஸக்ருத் க்ருத: சாஸ்த்ரார்த்த:” என்கிற நிர்ணயத்துக்கு உபாஸநத்திற் போலே இங்கு ஆவ்ருத்தி வேண்டும்படி அபவாதமில்லை. இவ்வர்த்தம் “ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய” இத்யாதி வசநத்தாலும் ஸுப்ரதிஷ்டிதம். இப்படி மஹோதாரனான ஸர்வசக்தி பக்கலிலே பரந்யாஸம் பண்ணுமவனுக்கு ஸ்வாபிப்ராய விசேஷணமொழிய, பலவிளம்பத்துக்கு ஹேதுவில்லை. ஆகையாலே இந் ந்யாஸவித்யைக்குப் ப்ராரப்த நிவர்த்தகத்வம் விசேஷமாகிறது.

– “சாஸ்த்ரம் விதிப்பதை ஒருமுறை செய்தாலே போதுமானது” என்னும் விதிமுறை உள்ளது. ஆனால் உபாஸனமானது அடிக்கடி செய்யப்படவேண்டும் என்பதால், இந்த விதிமுறை உபாஸனத்திற்குப் பொருந்தாது. ஆனால் ப்ரபத்திக்கு உபாஸனம் போன்ற விதிவிலக்கு இருப்பதில்லை. இந்தக் கருத்தானது, இராமாயணம் யுத்தகாண்டம் (18-33) - ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய – ஒருமுறை ப்ரபத்தி செய்தவனாக இருந்தாலும் – என்னும் வாக்கியத்தால் உறுதியாகிறது. மிகுந்த தாராளமானவனும், அனைத்து சக்திகளும் கொண்டவனுமாகிய பகவானிடம் தன்னுடைய பாரங்கள் அனைத்தையும் ஒப்படைத்து ப்ரபத்தி செய்த ஒருவனுக்கு, அவனுடைய விருப்பம் காரணமாக அல்லாமல், வேறு எந்தக் காரணத்தாலும் பலன் கிடைக்கத் தாமதம் உண்டாவதில்லை. ஆகவே ப்ரபத்தியானது பலன் அளிக்கத் தொடங்கிய கர்மங்களையும் கூட விலக்கவல்ல சிறப்பு உள்ளது.