Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 90)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

வ்ரஜ என்னும் சொல்லின் பொருள்

மூலம் – வ்ரஜ என்கிற சப்தமும் ப்ரபத்யே என்கிறவிடத்தில் அறுதியிட்ட ஸபரிகர ஆத்ம நிபேக்ஷத்தையே சொல்லுகிறது. அவ்விடம் அநுஷ்டாதாவினுடைய அநுஸந்தாநமானபடியாலே உத்தமனாயிற்று. இவ்விடம் “சிஷ்யஸ்தே அஹம் சாதி மாம்” என்கிற அபிமுகனாக நின்றவனைக் குறித்து விதிக்கிறதாகையாலே மத்யமனாயிற்று. இவ் ஆநுகூல்ய ஸங்கல்பாதி அங்காந்தரங்களும் இங்கே ஸூசிதமானபடியை த்வயத்திற்போலே உசிதபதங்களிலே கண்டு கொள்வது.

சரமச்லோகத்தில் உள்ள “வ்ரஜ” என்ற சொல்லும், த்வய அதிகாரத்தில் “ப்ரபத்யே” என்பதை விளக்கும்போது உரைக்கப்பட்டதான, “அனைத்து அங்கங்களுடன் கூடியபடி ஆத்மாவைச் சமர்ப்பித்தல்”, என்பதையே குறிக்கிறது. ஆனால் த்வய மந்த்ரத்தில் உள்ள “ப்ரபத்யே” என்பது சரணம் அடைபவனுடைய சிந்தனை என்பதால், அங்கு தன்மை இடத்தில் கூறப்பட்டது. ஆனால் சரமச்லோகத்தில் உள்ள “சரண” என்னும் சொல்லானது, கீதை (2-7) - சிஷ்யஸ்தே அஹம் சாதி மாம் – உனது சிஷ்யனாகிய எனக்கு எது சிறந்ததோ – என்று க்ருஷ்ணன் முன்பாக விருப்பத்துடன் நின்றவனைக் குறித்து விதிப்பதாக உள்ளதால், இந்தச் சொல்லானது முன்னிலை இடத்தில் கூறப்பட்டது. பகவானுக்கு விருப்பமானதை மட்டுமே செய்தல் முதலான அங்கங்கள் சரமச்லோகத்தில் மறைமுகமாக கூறப்பட்டதை, த்வய மந்த்ரத்தைப் போன்றே தகுந்த சொற்களில் அறியலாம்.