Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 89)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
சரண என்னும் சொல்லின் பொருள்
மூலம் – இங்குற்ற சரண சப்தத்துக்கும், த்வயாதிகாரத்திற் சொன்ன பொருளை அநுஸந்தித்துக் கொள்வது. இந்த சரணவரணம் அர்ஜுநனைக் குறித்து உபதேசிக்கப்பட்டதே யாகிலும், “அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய” என்கிறபடியே ஸர்வ விஷயமென்னுமிடம் ச்வேதாச்வதர ச்ருதி ப்ரஸித்தம். “க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம்”, “சரண்யம் சரணம் ச த்வாம்”, “யோகோ யோகவிதாம் நேதா”, “அம்ருதம் ஸாதநம் ஸாத்யம்” இத்யாதிகளிலும் ஸங்கோசமில்லாமையாலே ஸர்வ விஷயத்வம் விவக்ஷிதம். இப்படி இவன் சரணமாக வரணீயனாம்போதைக்குத் தான் அநந்யசரணனாகையே வேண்டுவது.
– சரமச்லோகத்தில் உள்ள “சரண” என்னும் சொல்லிற்கு, த்வய அதிகாரத்தில் கூறப்பட்ட பொருளையே எடுத்துக் கொள்ளலாம். இங்குள்ள சரண என்னும் சொல்லானது அர்ஜுனனைக் குறித்து உபதேசிக்கப்பட்டபோதிலும், சரணாகதி கத்யத்தில் - அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய – தன்னை அடைந்தவர்களிடம் எந்தவிதமான சிறப்பையும் ஆராயாமல் அனைத்து லோகங்களுக்கும் அடைக்கலமாக உள்ளவன் – என்பதற்கு ஏற்ப அனைவருக்கும் இங்குள்ள “சரண” என்ற சொல்லானது பொருந்தும் என்பதை ச்வேதாஸ்வதர ச்ருதி மூலம் அறியலாம். மேலும் மஹாபாரதம் வனபர்வம் (71-123) - க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம் – க்ருஷ்ணனையே எப்போதும் உள்ள தர்மமாகக் கொண்டு – என்றும், இராமாயணம் யுத்தகாண்டம் (120-18) - சரண்யம் சரணம் ச த்வாம் – சரணம் அடைந்தவர்களைக் காப்பவனாக நீயே உள்ளாய் – என்றும், ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமம் (18, 19) - யோகோ யோகவிதாம் நேதா – மோக்ஷத்தின் உபாயமாகவும், பக்தியோகத்தில் நிற்பவர்களுக்குப் பலனை அளிப்பவனாகவும் உள்ளவன் – என்றும், ஸ்ரீவிஷ்ணுதர்மம் (72-4) - அம்ருதம் ஸாதநம் ஸாத்யம் – அவனையே அழியாத உபாயமாகவும் பலனாகவும் கொண்டு – என்றும் கூறுவதற்கு ஏற்ப “சரண” என்னும் சொல்லிற்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே பொருள் உள்ளது என்னும் எல்லை எல்லாத காரணத்தால், அனைவருக்குமே பொருந்தும் என்றாகிறது. அவனைச் சரணம் என்று அடையும்போது, வேறு எதனையும் சரணம் என்று புகாமல் இருத்தலே அவசியமாகிறது.