Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 86)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
ப்ரபத்தியே அனைத்து உபாயங்களாக இருத்தல்
மூலம் – ப்ரணவம் மந்த்ராந்தரத்தில் ப்ரவேசித்து நின்றும், ஸ்வதந்த்ரமாயும் நிற்குமாப்போலே, இப் ப்ரபத்தி அதிகாரி விசேஷத்தில் பக்த்யங்கமுமாய், அதிகார்யந்தரத்திலே ஸ்வதந்த்ரமுமாயிருக்கை வசந பலத்தாலே ஸித்தம். இப்படி நியதாதிகாரமாக பக்தி ப்ரபத்திகள் விகல்பித்து நிற்கிற நிலை, “பக்த்யா பரமயா வாபி ப்ரபத்த்யா வா மஹாமதே” இத்யாதிகளிலே ப்ரஸித்தம். ஆகையால், “ஸம்யக் ஜ்ஞாநேந வா மோக்ஷம் பங்காயாம் மரணேந வா | ப்ரணாமத்வாபி ஸுக்ருதாத் பக்த்யா வா லபதே நர:” இத்யாதிகளிலே ஸாக்ஷாதுபாயத்தோடே கூடப் பரம்பரோபாயங்களை எடுத்ததுவும் அவற்றினுடைய ப்ராசஸ்த்ய அதிசயம் தோற்றுகைக்காகவத்தனை.
– ப்ரணவமானது மற்றொரு மந்த்ரத்தில் புகுந்து, அந்த மந்த்ரத்தில் பகுதியாகவே நிற்கிறது (அதாவது “நமோ நாராயணாய” என்பதில் “ஓம்” என்னும் ப்ரணவம் புகுந்து, அதன் பகுதியாக நிற்கிறது); ஆனாலும் அத்தகைய ப்ரணவமானது தனியான ஒரு மந்த்ரமாகவும் உள்ளது. இது போன்றே ப்ரபத்தியானது, தகுந்த அதிகாரிகளுக்கு பக்தி உபாயமாகவும், பக்தி அதிகாரி அல்லாத மற்றவர்களுக்கு தனியான உபாயமாகவும் உள்ளது; இதனை பல ப்ரமாணங்களால் அறியலாம். இப்படியாக பக்தி மற்றும் ப்ரபத்தி ஆகியவை, அந்தந்த அதிகாரிகளுக்கு ஏற்றபடி, தனித்தனி உபாயமாக உள்ளன என்பதை பக்த்யா பரமயா வாபி ப்ரபத்த்யா வா மஹாமதே – சிறந்த புத்தி கொண்டவனே! நான் பக்தியாலோ அல்லது ப்ரபத்தியாலோ அடையத்தக்கவன் – என்பது போன்றவற்றால் அறியலாம். ஆகவே, ஸம்யக் ஜ்ஞாநேந வா மோக்ஷம் பங்காயாம் மரணேந வா | ப்ரணாமத்வாபி ஸுக்ருதாத் பக்த்யா வா லபதே நர: - ஒருவன் சிறந்த ஞானத்தாலோ, அல்லது கங்கையில் விழுந்து மரணம் அடைவதாலோ, அல்லது சரியான வணக்கத்தாலோ, அல்லது பக்தியோகத்தாலோ மோக்ஷம் அடைகிறான் – என்பது போன்ற வாக்கியங்களில், மோக்ஷத்திற்கான நேரடியான உபாயத்துடன் சேர்த்து, மோக்ஷத்திற்கான உபாயத்தின் அங்கங்களாக உள்ளவையும் கூறப்பட்டுள்ளன. இது ஏனென்றால், இத்தகைய மறைமுகமான உபாயங்களின் பெருமைகளை உரைப்பதற்காகவே ஆகும்.