Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 85)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

ப்ரபத்தியே அனைத்து உபாயங்களாக இருத்தல்

மூலம் – “ஸர்வ” சப்த ப்ரதிஸம்பந்தியான “ஏக” சப்தம், ஸித்தோபாய ப்ராதாந்யத்தாலே, சரண்யனை விசேஷித்துக் கொண்டு நின்றாலும், “ந்யாஸேநைவ” என்கிறபடியே ப்ரபத்தியொன்றுமே ஸர்வதர்மாந்தர ஸ்தாநத்திலும் விதிக்கப்படுகிறதென்று லபிக்கும். இத்தால், த்ரிவர்கார்த்தங்களும் இப் பகவத் ப்ரபத்தி பண்ணலாம் என்றதாயிற்று. அப்போது, “த்வயாபி ப்ராப்தம் ஐச்வர்யம் யதஸ்தம் தோஷயாம்யஹம்”, “நாஹமாராதயாமி த்வாம் தவ பத்தோயமஞ்ஜலி:”, “ஸ த்வம் ப்ரஹர வா மா வா மயி வஜ்ரம் புரந்தர | நாஹம் உத்ஸ்ருஜ்ய கோவிந்தம் அந்யமாராதயாமி போ:” இத்யாதிகளிற்படியே, நித்ய நைமித்திகங்களில் விசேஷணமாய்ப் புகுமளவேயொழிய மற்றும் ஸர்வாவஸ்தையிலும் தேவதாந்தர ஸ்பர்சமற்றிருக்கை உசிதம். மோக்ஷத்துக்கு உபாயாந்தரார்த்தங்களாய் உபாய விரோதிகளைக் கழிக்க வேண்டுவார்க்கும் இப் ப்ரபத்தி பண்ணலாம். ப்ராப்தி விரோதியைக் கழிக்க வேண்டுவார்க்கும் இப் ப்ரபத்தி தானே அமையுமென்று ப்ரபத்தியினுடைய ஸகல அபிமத ஸாதநத்வம் இங்கே சொல்லிற்றாயிற்று. இதில் ப்ரபத்தி உபாய விரோதியைக் கழிக்கும் கட்டளையை, ஸ்ரீகீதாபாஷ்யத்தில் த்விதீய யோஜநையிலே அருளிச்செய்தார். ப்ராப்தி விரோதியைக் கழிக்கும் கட்டளையை, கத்யத்திலே அருளிச்செய்தார். இவை இரண்டிடத்திலும் ஒன்றை அநாதரித்து ஒன்றை அருளிச்செய்தபடியன்று. இரண்டு இடமும் ஸர்வாபிமத ஸாதநமான இவ்வுபாயத்தின் ப்ரபாவத்துக்கு உதாஹரண பரம்.

“ஸர்வ – அனைத்தும்” என்பதன் எதிர்மறையாக உள்ள “ஏக = ஒன்று மட்டுமே” என்பது, ஸித்தோபாயமாக உள்ளவனும் அனைவரும் சரணம் புகத்தக்கவனும் ஆகிய ஸர்வேச்வரனையே சிறப்பாகக் கூறியபடி உள்ளது; ஆனாலும், “ந்யாஸேந ஏவ = ப்ரபத்தியால் மட்டுமே” என்பதற்கும் ஏற்ப அனைத்து தர்மங்களின் இடத்தி, ப்ரபத்தி மட்டுமே விதிக்கப்படுகிறது என்பதை உணர்த்துவதாகவே உள்ளது. ஆகவே தர்மம், அர்த்தம், காமம் ஆகிய முதல் மூன்று புருஷார்த்தங்களை விரும்புபவர்கள் கூட, அவற்றை அடைவதற்காகப் பகவானிடம் ப்ரபத்தி செய்யலாம் என்றாகிறது. இவ்விதம் உள்ளபோது, ஸ்ரீவிஷ்ணுபுராணம் (2-14) - த்வயாபி ப்ராப்தம் ஐச்வர்யம் யதஸ்தம் தோஷயாம்யஹம் – இந்த்ரனே! நீ இந்த ஐச்வர்யத்தை யார் மூலம் பெற்றாயோ அந்த பகவானை நானும் மகிழ்விக்கிறேன் – என்றும், ஸ்ரீவிஷ்ணுதர்மம் (2-8) - நாஹமாராதயாமி த்வாம் தவ பத்தோயமஞ்ஜலி: - நான் உன்னை ஆராதிக்கமாட்டேன், உனக்கு ஒரு கும்பிடு இடுகிறேன் – என்றும், ஸ்ரீவிஷ்ணுதர்மம் (2-24) - ஸ த்வம் ப்ரஹர வா மா வா மயி வஜ்ரம் புரந்தர | நாஹம் உத்ஸ்ருஜ்ய கோவிந்தம் அந்யமாராதயாமி போ: - இந்த்ரனே! நீ என்னை உனது வஜ்ராயுதம் கொண்டு அடித்தாலும் அடிக்காவிட்டாலும், நான் கோவிந்தனை அல்லாமல் வேறு யாரையும் ஆராதிக்கமாட்டேன் – என்றும் உள்ள வரிகளுக்கு ஏற்ப, நித்ய நைமித்திக கர்மங்கள் அல்லாமல், மற்ற அனைத்து நிலைகளிலும் வேறு தெய்வத்தின் தொடர்பு அற்று இருத்தலே உசிதமாகும். மோக்ஷத்தைப் பெறுவதற்காக மற்ற உபாயங்களை (பக்தியோகம் போன்றவை) நாடுபவர்களுக்கும், தங்களுடைய அத்தகைய செயல்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் இருப்பதற்காக ப்ரபத்தியைச் செய்யலாம். பகவானை அடையவிடாமல் தடுக்கும் தடைகளாக உள்ள பாபங்கள் போன்றவை கழிவதற்கும் ப்ரபத்தியைக் கைக்கொள்ளலாம். இப்படியாக ப்ரபத்தியானது அனைத்துவிதமான விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொடுக்கும் தன்மை கொண்டது என்பதை சரமச்லோகம் கூறுகிறது. இவற்றில் ப்ரபத்தியானது உபாயங்களைக் கைக்கொள்ளவிடாமல் தடுக்கின்ற பாபங்கள் முதலானவற்றை விலக்குகிறது என்பதை எம்பெருமானார் தனது ஸ்ரீகீதாபாஷ்யத்தில், சரமச்லோகத்திற்கான இரண்டாவது விளக்கத்தில் அருளிச்செய்தார். ப்ரபத்தியானது பகவானை அடையவிடாமல் தடுக்கின்ற பாபங்கள் முதலானவற்றை விலக்குகிறது என்பதை எம்பெருமானார் சரணாகதி கத்யத்தில் அருளிச்செய்தார். இந்த இரண்டு இடங்களில், ஒரு இடத்தில் மற்றொரு இடத்தில் கூறப்பட்ட விஷயத்தைத் தள்ளியபடி அருளிச்செய்தார் என்று கூறக்கூடாது. இந்த இரண்டு இடங்களிலுமே, ப்ரபத்தி உபாயமானது அனைத்துவிதமான விருப்பங்களையும் நிறைவேற்றும் தன்மை கொண்டது என்று அதன் ப்ரபாவத்தை விளக்கும் உதாரணங்களாகவே உள்ளன.