Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 84)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

பகவானே அனைத்து பலன்களுக்கும் ஸாதனம் என்பதை “ஏக” சப்தம் உணர்த்துகிறது

மூலம் – இத்தாலே என் சொல்லிற்றாயிற்று என்னில், “யத்யேந காமகாமேந ந ஸாத்யம் ஸாதநாந்தரை: | முமுக்ஷுணா யத் ஸாங்க்யேந யோகேந ந ச பக்தித: || ப்ராப்யதே பரமம் தாம யதோ நாவர்த்ததே யதி: | தேந தேநாப்யதே தத்தத் ந்யாஸேநைவ மஹாமுநே || பரமாத்மா ச தேநைவ ஸாத்யதே புருஷோத்தம:” என்கிற கட்டளையிலே தனக்கு அபிமதங்களாயிருப்பதேனும் ஒரு பலங்களைப் பற்ற அவற்றுக்கு அநுகுணமாகத் தனித்தனியே சாஸ்த்ரங்களாலே விதிக்கப்பட்ட உபாயங்களில் ஜ்ஞாந அபாவத்தாலேயாதல், ஜ்ஞாநமுண்டாயிருக்க சக்த்யபாவத்தாலேயாதல், இவையிரண்டும் உண்டாயிருக்க விளம்பாக்ஷமத்வத்தாலேயாதல் சோகித்த அதிகாரியைப் பற்ற, “அவ்வுபாயங்களொன்றிலும் நீ அலையவேண்டா. அவை தனித்தனியே தரும் பலங்களுக்கெல்லாம் ப்ரபத்தி வசீக்ருதனான நான் ஒருவனுமே அமையும்” என்று சொல்லிற்றாயிற்று. “பல ஔஷதங்கள் தரவல்ல ஆரோக்யத்தை எல்லாம் இஸ் ஸித்தௌஷதம் ஒன்றுமே தரவற்றாகையாலே, நீ ஔஷதாந்தரங்களுக்கு அலமராதே, இந்த ஔஷதமொன்றையுமே உபஜீவிக்கவமையும்; இது உனக்கு அந்த ஔஷதங்களாலே கழிக்கப்படும் வ்யாதிகள் எல்லாவற்றையும் கழிக்கும்; உனக்குப் பின்பு ஸர்வபோகங்களையும் புஜிக்கலாம், நீ ஆரோக்யத்தையும் போகங்களையும் இழக்கிறோமென்று வெறுக்கவேண்டா” என்று சொல்லுமாப்போலேயிருக்கிறது இச் சரமச்லோகம்.

– இதன் மூலம் கூறப்படுவது என்னவென்றால், அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (37, 25 – 27) - யத்யேந காமகாமேந ந ஸாத்யம் ஸாதநாந்தரை: முமுக்ஷுணா யத் ஸாங்க்யேந யோகேந ந ச பக்தி: ப்ராப்யதே பரமம் தாம யதோ நாவர்த்ததே யதி: தேந தேநாப்யதே தத்தத் ந்யாஸேநைவ மஹாமுநே பரமாத்மா ச தேநைவ ஸாத்யதே புருஷோத்தம: - பயனில் விருப்பம் கொண்ட பலராலும், எந்தெந்த பலன்கள் மற்ற உபாயங்களால் அடைய இயலாதோ, முமுக்ஷுவால் மோக்ஷம் என்னும் பலன் கர்மயோகம், ஞானயோகம் மற்றும் பக்தியோகம் ஆகியவற்றால் அடைய இயலாதோ அப்படிப்பட்ட பலவிதமான பலன்களும் ப்ரபத்தியால் அடையப்படுகின்றன. அப்படிப்பட்ட ப்ரபத்தி மூலமே புருஷோத்தமனாகிய பரமாத்மாவும் அடையப்படுகிறான். எங்கு சென்றால் மீண்டும் திரும்புவது என்பது இல்லையோ, அந்த இடமே முமுக்ஷுக்களால் விரும்பப்படும் இடமாகும் – என்பதற்கு ஏற்ப ஒருவன் தனக்கு விருப்பமான ஏதேனும் ஒரு பலனை அடைவதற்கு சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட விதிமுறைகள் என்ன என்னும் ஞானம் இல்லாத காரணத்தாலோ, அல்லது அந்த விதிமுறைகளைக் குறித்த ஞானம் உள்ளபோதிலும் அதற்கான சக்தி இன்றி இருப்பதாலோ, அல்லது இந்த இரண்டும் உள்ளபோதிலும் (ஞானம் மற்றும் சக்தி) அந்தப் பலனைப் பெறுவதில் உள்ள காலதாமதத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாத காரணத்தாலோ சோகத்தில் இருக்கக்கூடும். இப்படிப்பட்ட சோகத்தில் உள்ள அவனிடம் சரம ச்லோகமானது, “நீ அது போன்று உபாயங்களைத் தேடி அலையவேண்டாம். ப்ரபத்தி மூலம் வசப்படக்கூடிய நானே, அந்த உபாயங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே தருகின்ற அனைத்து பலன்களையும் தரவல்ல உபாயம் ஆவேன்”, என்று கூறுவதாக உள்ளது. அதாவது, “பல மருந்துகள் சேர்ந்து அளிக்கவல்ல ஆரோக்யத்தை இந்த உயர்ந்த மருந்து ஒன்று மட்டுமே அளிக்கவல்லது என்பதால், நீ மற்ற மருந்துகளை அடைய முயலவேண்டாம். இந்த ஒரு மருந்து மட்டுமே போதுமானதாகும். மற்ற மருந்துகள் அனைத்தும் சேர்ந்து நீக்குகின்ற வ்யாதிகள் அனைத்தையும், இந்த ஒரு மருந்து மட்டுமே விலக்கும். அதன் பின்னர் நீ அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கலாம். ஆகவே நீ ஆரோக்யம் மற்றும் இன்பங்கள் ஆகியவற்றை இழந்தோமே என்று சோகம் அடையவேண்டாம்”, என்று கூறுவதாகவே சரம ச்லோகம் அமைந்துள்ளது.