Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 81)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
ப்ரபத்திக்கு அங்கமாக உள்ளவற்றை அல்லாமல் வேறு எதனையும் அங்கமாக எதிர்பாராமை என்பதை “ஏக” சப்தம் கூறுகிறது
மூலம் – இங்கு ப்ரபத்த்யத்யாதிகளிற் சொன்ன ஆநுகூல்ய ஸங்கல்பாதி பரிகரங்களொழிய வேறு நியமங்கள் வேண்டா. ஆகிஞ்சந்யைகதநரான “த்ரௌபதீ, தமயந்தீ, ராக்ஷஸீ, விபீஷண, க்ஷத்ரபந்து, முசுகுந்த, கஜேந்த்ர, பாண்டவ, தேவ, ஸுமுக, த்ரிசங்கு, சுநச்சேப, கிராத, காக, கபோதாதிகள்” சரணாகதராகிறபோது, அப்போதைய ஆநுகூல்யாதிகளையொழிய வேறோர் இதிகர்த்தவ்யதையைச் சொல்லக் கண்டிலோம். க்ஷணகால ஸாத்யமாய் நிரபேக்ஷமான ப்ரபத்தி மாத்ரத்தாலே கடுக அவ்வோ சரணாகதர்க்கு அவ்வோ அபேக்ஷித ஸித்தியும் கண்டோம். இப்படி மோக்ஷார்த்த ப்ரபத்தியிலும் இவன் கோரின காலத்திலே பலஸித்திக்குக் குறைவில்லை. இது, “மா சுச:” என்கிற வாக்யத்திற்கும் தாத்பர்யம். “பரித்யஜ்ய” என்கிறவிடத்திலே பரிகராந்தர நைரபேக்ஷ்யம் சொன்ன பொருளிலே “ஏக” சப்தத்தில் இந்த யோஜநை த்ருடீகரணார்த்தமாகக் கடவது. இதுக்கு அர்த்தாந்தரம் விவக்ஷிதமாகவுமாம். “ஏக” சப்தத்துக்கு இது பொருளானால், “பரித்யஜ்ய” என்கிறவிதுக்கு அங்கு சொன்ன அர்த்தாந்தரங்களைக் கொள்ளவும்.
– ப்ரபத்தியைக் குறித்து உரைத்த அங்கங்களாகிய “பகவானுக்கு விருப்பமானவற்றை மட்டுமே செய்தல்” என்பது போன்றவை அல்லாமல் வேறு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. த்ரௌபதீ, தமயந்தீ (உண்மையான நளனைக் கண்டறிவதற்காக, லோகபாலகர்களைச் சரணம் அடைந்தாள்), ராக்ஷஸீ (சீதையிடம் சரணம் புகுந்த த்ரிஜடை), விபீஷணன், க்ஷத்ரபந்து (முனிவரிடம் சரணம் புகுந்தவன்), முசுகுந்தன் (க்ருஷ்ணனிடம் சரணம் புகுந்தவன்), கஜேந்த்ரன் (நாராயணனிடம் சரணம் புகுந்தவன்), பாண்டவர்கள், தேவர்கள் (விஷ்ணுவிடம் சரணம் புகுந்தவர்கள்), ஸுமுகன் (கருடன் மூலமாகப் பகவானிடம் சரணம் புகுந்தவன்), த்ரிசங்கு (விச்வாமித்ரரிடம் சரணம் புகுந்தவன்), சுநச்சேபன் (இந்த்ரனிடமும் உபேந்த்ரனிடமும் சரணம் புகுந்தவன்), கிராதன் (புறாவிடம் அடைக்கலம் புகுந்த வேடன்), காகம் (இராமனிடம் சரணம் புகுந்தவன்), கபோதாதிகள் (சிபிச்சக்ரவர்த்தியிடம் சரணம் புகுந்த புறா என்பது போன்றவை) ஆகிய பலரும் சரணம் புகுந்தபோது, அடைக்கலம் அளித்தவருக்கு “விருப்பமானவற்றை மட்டுமே செய்தல்” என்பதை மட்டும் காணலாம் அல்லாமல், வேறு எந்தவிதமான “இதனைச் செய்யவேண்டும்” என்னும் விதிகளை அல்ல. எந்தவிதமான அங்கங்களையும் எதிர்பாராமல் ஒரு நொடியில் செய்யப்படுகின்ற ப்ரபத்தியானது, சரணம் புகுந்தவர்களுக்கு, அவர்கள் விரும்பிய பலனை அளிப்பதை நாம் காணலாம். இதே போன்று மோக்ஷத்தை விரும்பி செய்யப்படும் ப்ரபத்தியிலும், ப்ரபந்நன் விருப்பப்பட்ட காலத்தில் அவனுக்குப் பலன் கிட்டுவதில் எந்தத் தடையும் இல்லை. இதுவே “மா சுச: - வருத்தம் கொள்ளாதே” என்னும் சொற்றொடரின் கருத்தாகும். “பரித்யஜ்ய” என்பதற்கு “ப்ரபத்திக்கு ஏதும் அவசியம் இல்லை” என்பதைப் பொருளாகக் கொண்டால், “ஏக” என்பது இந்தக் கருத்தை மிகவும் உறுதியாக உரைப்பதாக உள்ளது என்றாகும். அல்லது “ஏக” என்பது உபாயமும் உபேயமும் ஒன்றே ஆகும் என்பதைக் கூறுவதாகவும் கொள்ளலாம். மாறாக “ஏக” என்பதற்கு “ப்ரபத்திக்கு ஏதும் அவசியம் இல்லை” என்பதைப் பொருளாகக் கொண்டால், “பரித்யஜ்ய” என்பது முன்பே கூறிய பொருளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.