Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 79)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
ப்ரபத்திக்கு அங்கமாக உள்ளவற்றை அல்லாமல் வேறு எதனையும் அங்கமாக எதிர்பாராமை என்பதை “ஏக” சப்தம் கூறுகிறது
மூலம் – இப்படியே பரிபூர்ணனான தன்னைப் ப்ரபத்தி பண்ணும்போது ஆநுகூல்ய ஸங்கல்பாதிகளையொழிய வேறொரு பரிகரத்தை இதிலே வித்யாந்தரத்திற்போலே சொருகிக் கொண்டு, அதுவும் ப்ரஸாதமான உபாயகோடியிலே நிற்கிறதென்னும் நினைவைக் கழிக்கைக்காக, ஏக சப்தமென்றும் சொல்லுவர்கள். “ஆஜ்ஞாநுஜ்ஞைகளாலே அநுஷ்டிக்கும் கர்த்தவ்யாந்தரங்களுமெல்லாம் ப்ரபத்திக்குத் துணையல்ல. இப் ப்ரபத்தியாலே வசீக்ருதனாய்ப் பலம் தரவிருக்கிற நானொருவனுமே இக்ஷணிகோபாயத்துக்குப் ப்ரதிபூவாய் நின்றேன். இப் ப்ரபத்தி பலத்தைப் பற்ற வேறொரு தேவை செய்யவேண்டா. அத்தேவையைத் துணையாகக் கொண்டு உன்னை நான் ரக்ஷிக்கப் புகுகிறேனல்லேன்” என்று தாத்பர்யம். இத்தால் ஆநுகூல்ய ஸங்கல்பாதி விசிஷ்ட ப்ரபத்தியொழியப் ப்ரபத்தி பரிகரம் என்று பேரிட்டுத் தனக்கு வேறொரு ஸஹகாரி காரணத்தைக் கூட்ட வேண்டாவென்று சொல்லிற்றாயிற்று. “யேந கேநாபி ப்ரகாரேண த்வயவக்தா த்வம்” என்றும், “ப்ரபத்தி வாசைவ நிரீக்ஷிதும் வ்ருணே” என்றும் சொல்லுகிறபடியே, பூர்ண ப்ரபத்திக்கு அபேக்ஷிதமான தெளிவு இல்லாவிடிலும், யதாகதஞ்சிதநுஷ்டாநத்தாலே கார்யம் செய்கிற இவ்வுபாயத்துக்கு வேறொரு பரிகரத்தைத் தேடப் ப்ரஸங்கமில்லையிறே.
– அனைத்துவிதங்களிலும் பரிபூர்ணமாக உள்ள அவனிடம் ப்ரபத்தி செய்யும்போது, அவனுக்கு விருப்பமானவற்றைச் செய்தல் மற்றும் விருப்பம் அல்லாதவற்றைத் தவிர்த்தல் ஆகிய இரண்டு மட்டுமே அவசியம் ஆகும்; ஆகவே வித்யைகளுக்கு மற்ற அங்கங்கள் தேவைப்படுவது போன்று, அவனை மகிழ்விப்பதற்காக ப்ரபத்தியில் மற்ற அங்கங்கள் எதனையும் சேர்த்தல் கூடாது; இவற்றை உணர்த்துவதே “ஏக” என்பதாகும் என்று சிலர் கூறுவர். இங்கு பகவானுடைய திருவுள்ளமானது, “என்னுடைய ஆணைகளாக உள்ளவை அல்லது என்னால் ஏற்கப்படுபவை என்றுள்ள எந்த ஒரு கர்மமும் ப்ரபத்திக்கு அங்கமாக இருப்பதில்லை. ப்ரபத்தியால் வசீகரிக்கப்பட்டு பலன் அளிக்கக்கூடிய நான் மட்டுமே இத்தகைய ப்ரபத்திக்கு ஜாமீனாக உள்ளேன். ப்ரபத்தியின் பலனைப் பெறுவதற்கு வேறு எந்தவொரு தேவையும் இல்லை. அப்படிப்பட்ட எந்த ஒரு துணையையும் கொண்டு நான் உன்னைக் காப்பதில்லை”, என்பதே ஆகும். ஆகவே இதன் மூலம், பகவானுக்கு விருப்பமானவற்றை மட்டுமே செய்தல் என்பது போன்ற சிறப்பானவை தவிர “ப்ரபத்திக்கான அங்கம்” என்று எந்த ஒன்றும் ப்ரபத்திக்குத் துணையாகச் சேர்க்க வேண்டியதில்லை என்று கூறப்பட்டது. சரணாகதி கத்யம் - யேந கேநாபி ப்ரகாரேண த்வயவக்தா த்வம் – ஏதோ ஒருவிதத்தில் த்வயமந்த்ரத்தைக் கூறியபடி உள்ள நீ – என்றும், வரதராஜ ஸ்தவம் (92) - ப்ரபத்தி வாசைவ நிரீக்ஷிதும் வ்ருணே – ப்ரபத்தியைக் கூறும் சொல்லால் உன்னைக் காண – என்றும் கூறுவதற்கு ஏற்ப, பரிபூர்ணமான ப்ரபத்திக்குத் தேவையான தெளிவு ஒருவனிடம் இல்லையென்றாலும், தன்னால் இயன்ற அளவில் ப்ரபத்தியைக் கைக்கொண்டாலே போதுமானது. ஆகவே ப்ரபத்திக்கு வேறு எந்த அங்கத்தின் துணையையும் தேடவேண்டிய அவசியம் இல்லை என்று கருத்து.