Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 78)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
ப்ரபத்தி தவிர வேறு எந்த உபாயத்திலும் ஈடுபடுதல் கூடாது என்பதை “ஏக” என்பது உணர்த்துகிறது
மூலம் – அபேக்ஷித பலத்துக்கு உபாயமாக விதித்த ஸாதநாந்தரங்களை இடையிட வேண்டாதபடி ப்ரபத்திக்கு அநந்தரம் பரஸ்வீகாரம் பண்ணின சரண்யன் தனித்து நிற்கும் நிலையைப் பற்ற ஏக சப்தம் என்றும் சொல்லுவர்கள். அது எங்ஙனேயென்னில், ப்ரபத்தியும் பண்ணி அநந்தரம் அதடியாக உபாஸநாதிகளும் அநுஷ்டித்தால் பலோபாயமாகக் கடவனான சரண்யன், அகிஞ்சநனாய் விளம்ப க்ஷமனல்லாத இவன்றிறத்தில் ப்ரபத்திக்கும் தனக்கும் நடுவே நிற்பதொரு சுமை சுமத்தாதே, இவன் சுமையைத் தன் குணங்களின் மேலே ஏறிட்டு, “சரண்யன் த்வாம் ப்ரபந்நா யே த்யாந யோக விவர்ஜிதா: தே அபி ம்ருத்யுபதிக்ரம்ய யாந்தி தத்வைஷ்ணவம் பதம்”, “ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்றும் சொல்லுகிறபடியே, குணவிசிஷ்டனான தானே, நிரபேக்ஷ பலப்ரதனாய் நிற்கும் நிலையை அநுஸந்தித்துக் கொண்டு, சரணமாக அடையென்று இங்கு சொல்லிற்றாயிற்று.
– சேதநன் ஒருவன் விரும்பிய பலனைப் பெறுவதற்கு ஸாதனமாக விதிக்கப்பட்ட மற்ற உபாயங்கள் எதனையும் எதிர்பார்க்க வேண்டாதவிதத்தில், ப்ரபத்திக்குப் பின்னர், அந்தச் சேதநனுடைய அனைத்து பொறுப்புகளையும் தானே ஏற்றுக்கொண்டவனும், அந்தச் சேதநன் சரணம் புகுந்தவனும் ஆகிய ஸர்வேச்வரன் தனித்து நிற்கும் நிலையையே “ஏக” என்னும் சொல் உணர்த்துவதாகச் சிலர் உரைப்பர். எப்படி என்றால், மற்ற உபாயங்கள் எதனையும் கைக்கொள்ளும் சக்தியின்றி, விரைவாகப் பலனைப் பெறுவதற்காக ப்ரபத்தியைக் கைக்கொண்ட சேதநன் விஷயத்தில் ஸர்வேச்வரன், தனக்கும் ப்ரபத்திக்கும் இடையே அந்தச் சேதநனுக்கு வேறு ஒரு உபாயம் என்னும் சுமையை அளிக்காமல், அந்தச் சுமையைத் தன் மீது ஏற்றுக் கொண்டு, ப்ரஹ்மபுராணம் - சரண்யன் த்வாம் ப்ரபந்நா யே த்யாந யோக விவர்ஜிதா: தே அபி ம்ருத்யுபதிக்ரம்ய யாந்தி தத் வைஷ்ணவம் பதம் – யார் பக்தியோகத்தைக் கைக்கொள்ள சக்தியற்றவர்களாக உன்னையே உபாயம் என்று அடைகிறார்களோ அவர்கள், ஸம்ஸாரத்தைக் கடந்து, உன்னுடைய இடமாகிய ஸ்ரீவைகுண்டத்தை அடைகிறார்கள் – என்றும், திருவாய்மொழி (5-7-10) - ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் – என்றும் கூறுவதற்கு ஏற்ப, அனைத்து குணங்களிலும் சிறப்புற்று இருக்கும் தானே, அந்த மற்ற உபாயங்களின் இடத்தில் நின்று, அவற்றுக்கான பலனை அளிக்கிறான் என்பதையே “ஏக” என்பது உணர்த்துவதாகக் கொண்டு, “சரணம் அடைவாயாக” என்று கூறப்பட்டதாகக் கருத்து.