Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 76)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
ப்ரபத்திக் குறித்து மிகைப்படுத்தப்பட்ட வாதங்களுக்கான மறுப்பு
மூலம் – கர்த்தவ்யமாக விதிக்கிற ப்ரபத்தி தனக்கே இப்படி ஏதேனுமொரு கண்ணழிவு பண்ணில், உபாஸநாதிகளையும் இப்படிக் கண்ணழிக்கலாம். இப்போது இம்முகங்களாலே உபாஸநாதிகளிற்காட்டில் ப்ரபத்திக்கு வ்யாவ்ருத்தி சொல்ல நினைத்தது தலைக்கட்டாது. ஸ்வவிஷய ஸ்வீகார விசிஷ்டமாய்க் கொண்டு பலப்ரதமாகா நிற்கச் செய்தே, இஸ் ஸித்தோபாயம் ஸ்வீகாரத்தாலும் நிரபேக்ஷமென்று புத்தி பண்ணவேண்டுமென்னில், இது த்ருஷ்டிவிதிபோலே ஆரோபிதமாதல், ஸ்வவசந விருத்தமாதல் ஆம்.
– செய்யவேண்டும் என்று விதிக்கப்படும் ப்ரபத்தியைக் குறித்தே இத்தனை குற்றங்கள் கூறலாம்படி உள்ளபோது, உபாஸனம் முதலானவற்றைக் குறித்தும் குற்றங்களைக் கூறலாம். இவ்விதம் குற்றங்களைக் கூற நேர்ந்தால், இரண்டிற்கும் குற்றம் உள்ளது என்பது பொதுவாக உள்ளபோது, உபாஸனத்தைக் காட்டிலும் ப்ரபத்தி வேறுபட்டது என்று உரைக்கமுடியாது. ஸித்தோபாயமான பகவான் ஒருவனைக் காப்பாற்றுவதைத் தனது பொறுப்பாக ஏற்றுக்கொண்டு, அவனுக்குரிய பலன்களை அளிக்கிறான் என்னும்போது, இத்தகைய “பகவானின் ஏற்றுக் கொள்ளுதல்” என்பது அவசியம் அற்றது என்று சிலர் உரைக்கிறார்கள்; இவ்விதம் கொண்டால், ப்ரபத்தி என்பது இல்லாத ஒன்றைக் குறித்து த்யானிப்பது போன்று ஆகிவிடும்; இதன் விளைவாக, “பகவானின் ஏற்றுக் கொள்ளுதல்” என்பது அவசியம் அற்றது என்னும் எண்ணமானது, “சரணம் வ்ரஜ” என்று பகவான் கூறும் வாக்குகளுக்கு முரணாகிவிடும்.