Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 75)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

ப்ரபத்திக் குறித்து மிகைப்படுத்தப்பட்ட வாதங்களுக்கான மறுப்பு

மூலம் – அநுமதி மாத்ரமென்றால் அது உபாஸகனுக்கும் துல்யம். அசித்வ்யாவ்ருத்தி மாத்ரம் ப்ரதிகூல தசையிலும் உண்டாகையாலே இவ்வளவே ரக்ஷணீயதைக்கு உறுப்பாகாது. சைதந்ய க்ருத்யமென்றால் உபாஸநாதிகளும் மற்றுமுள்ள சேதந வ்ருத்திகளுமெல்லாம் சைதந்ய க்ருத்யமாகையாலே, இதுக்கு ஒரு வாசி சொல்லிற்றாகாது. சேதநனுக்குத்தானே வருமதென்று விவக்ஷிக்கில், உபதேசாதிகள் வேண்டாதொழியும். பல அநுபயுக்த சித்த ஸமாதாநமாத்ரம் என்னில், தந்தம் ருச்யநுரூபமாகப் ப்ரதிபுருஷம் வேறுபடும். “வ்ரஜ” என்று விதேயமாய்ப் பலதத்காமாநாதிகளன்றிக்கே இருக்கிற இத்தை, அதிகாரி விசேஷணமென்னவொண்ணாது.

– ப்ரபத்தி என்பது பகவான் தன்னுடைய கருணை இவன் மீது காண்பிக்க இவன் அனுமதி அளித்தல் மட்டுமே ஆகும் என்று கூறினால், அது உபாஸகன் போன்ற நிலையே ஆகும் (இங்கு நாம் ப்ரபந்நன் குறித்து உரைக்கிறோம்). ப்ரபத்தி என்பது அசித்தைக் காட்டிலும் வேறுபட்ட நிலையாக அறிதலே ஆகும் என்றால், அத்தகைய நிலையானது பகவானுக்கு விருப்பம் இல்லாத செயல்களைச் செய்தாலும் காணப்படும்; இது நிச்சயமாக காப்பாற்றுதலுக்குக் காரணமாக அமையாது. ப்ரபத்தி என்பது சேதநங்களின் செயல்படுதல் என்பது மட்டுமே ஆகும் என்று கூறினால், உபாஸனத்திற்கும் சேதநர்களுடைய மற்ற செயல்களுக்கும் (நடத்தல், படித்தல் போன்றவை) எந்தவிதமான வேறுபாடும் இல்லை என்றாகிவிடும்; ஆனால், ப்ரபத்தி என்பது ஒருவனுக்கு தானாகவே வந்து சேர்கிறது என்று கூறினால், ப்ரபத்தியைக் குறித்த உபதேசங்கள் அவசியம் இல்லை என்றாகிவிடும். ப்ரபத்தி என்பது பலனைக் குறித்து எண்ணாமல் உள்ள மனச்சாந்தியே ஆகும் என்றால், அவரவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப இது மாறுபடும். ப்ரபத்தி சென்பது எந்த ஒரு செயலும் அல்ல, அதிகாரியின் ஒரு சிறப்புத்தன்மை மட்டுமே ஆகும் என்று கூறினால், “வ்ரஜ” என்று கூறுவது பொருத்தம் அற்றதாகும்; காரணம், இந்தச் சொல்லானது ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்யவேண்டும் என்பதையும், பலனைக் குறித்து ஏதும் கூறாமலும் உள்ளது.