Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 73)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
ப்ரபத்திக் குறித்து மிகைப்படுத்தப்பட்ட வாதங்களுக்கான மறுப்பு
மூலம் - அதிப்ரஸங்காதி தோஷங்களுமுண்டு. அது எங்ஙனேயென்னில் ஸம்பந்த ஜ்ஞாந மாத்ரமென்றாலும், ஸித்தோபாய ப்ரதிபத்தி மாத்ரமென்றாலும் இது வாக்யமாத்ர ஜந்யமாகில் விதி விஷயமாகமாட்டாது. அவிதேய ஜ்ஞாநத்தாலே மோக்ஷமென்பார்க்கு உபாஸநாதி விதி விரோதம் பாஷ்யாதி ஸித்தம், தத்வ ஜ்ஞாநமுடையவனுக்குப் பின்பு கர்த்தவ்யமான ஜ்ஞாநாந்தரமாகில் ப்ரபத்தியினுடைய விதி லக்ஷண அநுஷ்டாந வாக்யங்கள் சொல்லுகிறபடியே இதின் ஸ்வரூபம் அங்கீகரிக்க வேணும், ஸித்தோபாய ஸ்வீகாரமென்ற பாசுரத்துக்கும் ஸித்தோபாயத்தை அறிந்து அது தனக்குக் கார்யகரமாம்படி பண்ணுகிற விதி ப்ராப்த ப்ரார்த்தநா பூர்வக பரந்யாஸ ரூப அதிகாரி க்ருத்யத்திலேயிறே தாத்பர்யம்.
– மேலும் இது போன்று உரைத்தல் என்பது மிகவும் மிகைப்படுத்தி உரைத்தல் என்னும் தவறையும் ஏற்படுத்தும். எப்படி? ப்ரபத்தி என்பது - “அடிமையாகிய ஜீவாத்மா மற்றும் எஜமானனாகிய பரமாத்மா ஆகியவர்களுக்கு இடையே உள்ள ஸம்பந்தம் குறித்த ஞானம் மட்டுமே ஆகும்” மற்றும் “ஸர்வேச்வரன் ஸித்தோபாயமாக உள்ளான் என்னும் ஞானம் மட்டுமே ஆகும்” என்றால், இத்தகைய ஞானமானது நேரடியாகவே அறியப்படும் என்பதால், “இதனை அறிவாயாக” என்று கூறும் விதிவாக்கியங்கள் அவசியம் அற்றதாகும். மோக்ஷம் என்பது சாஸ்த்ரங்களில் விதிக்கப்படாத ஞானம் மூலமே கிட்டும் என்று கூறினால், இத்தகைய கருத்துக்கள் உபாஸனை விதிகளுக்கு விரோதம் என்று ஸ்ரீபாஷ்யம் முதலானவற்றில் கூறப்பட்டது. உண்மையைக் குறித்த ஞானம் கொண்ட ஒருவன், அதனைத் தொடர்ந்து ப்ரபத்தி என்னும் ஞானம் பெறவேண்டும் என்று கூறினால், இத்தகைய ஞானத்தின் ஸ்வரூபத்தை “தகுந்த விதிகள் (சரணம் வ்ரஜ என்பது போன்றவை, இதன் தன்மைகள், இதனைக் கைக்கொள்ளும் முறைகள் (திருமந்த்ரம், த்வயம் ஆகியவற்றைக் கூறியபடியே இருத்தல்)” முதலானவற்றை உரைக்கும் வாக்கியங்கள் மூலமே ஏற்கவேண்டும். “ப்ரபத்தி என்பது ஸித்தோபாயத்தை ஏற்பது மட்டுமே ஆகும்” என்று கூறினால், முதலில் ஸித்தோபாயத்தை அறியவேண்டும், அதனைத் தொடர்ந்து அவனுக்குள்ள தகுதி காரணமாக தனது பாரங்களை ஒப்படைக்கவேண்டும் (பரந்யாஸம்), இத்தகைய ஒப்படைத்தல் என்பது தகுந்த விதிகளில் கூறப்பட்ட ப்ரார்த்தனையின் பின்னரே நடக்கவேண்டும்.