Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 72)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
ப்ரபத்திக் குறித்து மிகைப்படுத்தப்பட்ட வாதங்களுக்கான மறுப்பு
மூலம் – இப்படி ஸித்தோபாயத்தைப் பற்ற, ஸாத்யோபாயம் வ்யாஜமாத்ரமாய், இது ப்ரதாநமன்றிக்கே நிற்கிற நிலையைப் பற்ற ஸம்பந்த ஜ்ஞாநமாத்ரம், ஸித்தோபாய ப்ரதிபத்திமாத்ரம், அநிவாரண மாத்ரம், அநுமதி மாத்ரம், அசித்வ வ்யாவ்ருத்தி மாத்ரம், சைதந்ய க்ருத்யம், சித்த ஸமாதாநம், அதிகாரி விசேஷணம் என்று இப்புடைகளிலே அதிவாதம் பண்ணினார்கள். இவ் அந்யபரோக்தியை கொண்டு இவைதாமே அர்த்தமென்று அறுதியிடவொண்ணாது. இவையெல்லாம் “சரணம் வ்ரஜ” என்கிற விதிக்கு விருத்தங்களாம்.
– இப்படியாக ஸித்தோபாயமாக உள்ள ஸர்வேச்வரனைப் பற்றுவதற்கு ஸாத்யோபாயம் என்பது ஒரு சிறிய காரணமாக (ஒரு சிறிய வாய்ப்பாக) உள்ளது. ஆனாலும் ஒரு சிலர் இந்தச் சிறிய காரணத்தையும், அவசியம் இல்லாமல் பெரிதாக ஊதியபடி உள்ளனர். அவர்கள் ப்ரபத்தி என்பது - “அடிமையாகிய ஜீவாத்மா மற்றும் எஜமானனாகிய பரமாத்மா ஆகியவர்களுக்கு இடையே உள்ள ஸம்பந்தம் குறித்த ஞானம் மட்டுமே ஆகும்”, “ஸர்வேச்வரன் ஸித்தோபாயமாக உள்ளான் என்னும் ஞானம் மட்டுமே ஆகும்”, “அவனுடைய கருணையைத் தடுக்காமல் இருத்தல்”, “அவனுடைய செயல்களுக்கு அனுமதி அளித்தல் மட்டுமே ஆகும்”, “அசித்தைக் காட்டிலும் வேறுபட்டவன் என்னும் எண்ணம் மட்டுமே ஆகும்”, “சேதநர்களுக்கே உரிய செய்கை”, “சித்தத்தின் அமைதியான நிலை”, “அதிகாரியின் சிறப்பு” என்று பலவாக உரைக்கிறார்கள். இப்படியாக வேறு பல கருத்துக்களை மனதில் கொண்டபடி உரைக்கப்பட்ட இவை அனைத்தும் ப்ரபத்தியின் பொருள் என்று உறுதியாகக் கூறமுடியாது. இவை அனைத்தும் “சரணம் வ்ரஜ” என்னும் விதிமுறைக்கு முரண்பாடுகளே ஆகும்.