Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 71)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
“ஏக” என்பது ப்ரபத்தியை ஸித்தோபாயமாக உள்ள ஸர்வேச்வரன் போன்ற உபாயம் என்று எண்ணுதலைத் தள்ளுகிறது
மூலம் – இக்கட்டளையிலே ஸாத்யோபாயமான ப்ரபத்தியையும் ஸித்தோபாயத்தோடு ஒரு கோவையாக எண்ணாமைக்காக ஏக சப்தம் என்றும் சொல்லுவர்கள். அது எங்ஙனேயென்னில், இப் ப்ரபத்தியும் பக்தியோகம் போலே ப்ரஸாதநமாக விதிக்கப்படிருந்ததேயாகிலும், ஸஹஜ காருண்யாதி விசிஷ்டனான ஸர்வேச்வரனுடைய காலுஷ்ய சமாநமாத்ரார்த்தமாய் ஸாக்ஷாத் பலத்துக்கு ஸஹஜ ஸாமர்த்ய காருண்ய விசிஷ்டனான இவன் நினைவே காரணமாம்படியாய், அவன் தானே அத்யந்த அகிஞ்சநனான ப்ரபந்நனுக்கு பரஸ்வீகாரத்தாலே பக்தியோகாதிகளான குருதரோபாயங்களின் நேரே நின்று இவ்வாநுகூல்ய ஸங்கல்பாதி யுக்த ப்ரபத்திமாத்ர வ்யாஜ ஸாபேக்ஷனாய் வேறொன்றால் அபேக்ஷையில்லாமையால் நிரபேக்ஷோபாயத்வமே இந் ந்யாஸ வித்யைக்கு வேத்யாகாரமாகக் கொண்டு “த்வமேவோபாயபூதோ மே பவ” என்று அபேக்ஷணீயனாயிருக்க, “என் உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே” என்றும், “இசைவித்து என்னை உன் தாளிணைக்கீழ் இருத்தும் அம்மானே” என்றும் சொல்லுகிறபடியே, உபாயபூதனான அவன் செய்விக்கச் செய்கிற வ்யாஜமாத்ரத்தை அவனோடு ஒக்க உபாயமாக எண்ணுகை உசிதமன்றென்று ஏக சப்தத்துக்குத் தாத்பர்யம்.
– இதே போன்று சேதநனால் இயற்றப்படுகின்ற ப்ரபத்தியை, ஸித்தோபாயமாக உள்ள பகவானுக்குச் சமமாக எண்ணக்கூடாது என்பதைத் தள்ளுவதற்காகவே “ஏக” என்ற சொல் உள்ளதாகவும் கூறுவார்கள். ப்ரபத்தியானது பக்தியோகம் போன்று பகவானின் அனுக்ரஹத்திற்கு உபாயமாக உள்ளது என்றே விதிக்கப்பட்டுள்ளது; ஆனாலும், இயல்பாகவே கருணையைக் கொண்ட ஸர்வேச்வரனுக்கு, ஏதோ ஒரு காரணத்தால் சேதநன் மீது ஏற்படக்கூடிய சீற்றத்தை நீக்கும் அளவுடன் ப்ரபத்தியானது நின்று விடுகிறது. ஆனால் இறுதியான பலனுக்கான காரணம், இயல்பாகவே கருணையைக் கொண்ட ஸர்வேச்வரனுடைய ஸங்கல்பமே ஆகும். மற்ற உபாயங்களைக் கைக்கொள்ள சக்தியின்றி, ப்ரபத்தியை மட்டுமே கைக்கொள்ளும் ஒருவனுடைய அனைத்துவிதமான பொறுப்புகளையும் தானே ஏற்றுக்கொள்ளும் ஸர்வேச்வரன், பக்தியோகம் உள்ளிட்ட உபாயங்களின் இடத்தில் தானே நிற்கிறான். ஆநுகூல்ய ஸங்கல்பம் போன்ற குறிப்பிட்ட அங்கங்களை மட்டுமே கொண்ட இந்த ப்ரபத்தியை ஒரு காரணமாக மட்டுமே வைத்துக் கொண்டு, அவன் பலன் தருகிறான். இவ்விதம் வேறு எதனையும் எதிர்பாராமல் தனித்தன்மையுடன் உள்ள இந்த ப்ரபத்திக்கு, அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (37-31) - த்வமேவோபாயபூதோ மே பவ – நீ மட்டுமே எனது உபாயமாக இருத்தல்வேண்டும் – என்பதற்கு ஏற்ப, அவன் மட்டுமே நம்மால் ப்ரார்த்திக்கப்பட வேண்டியவனாய் உள்ளான். ஆகவே திருவாய்மொழி (5-8-9) - என் உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே – என்றும், திருவாய்மொழி (8-8-3) - இசைவித்து என்னை உன் தாளிணைக்கீழ் இருத்தும் அம்மானே – என்றும் கூறுவதற்கு ஏற்ப, உபாயமாக உள்ள அவன் நம்மை ப்ரபத்தி செய்யவேண்டும் என்று எண்ணுவதன் மூலமே நாம் ப்ரபத்தி செய்கிறோம் என்பதால், ப்ரபத்தியை அவனுக்குச் சமமான உபாயமாக கருதுதல் உசிதம் அல்ல என்பதை “ஏக” என்னும் சொல் உணர்த்துவதாகக் கருத்து.