Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 70)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
“ஏக” என்பது ஜீவாத்மாவிற்கு சுதந்திரத்தை விலக்குகிறது என்று கூறுதல்
மூலம் – இங்ஙனன்றிக்கே “முக்ய அந்ய கேவலேஷு ஏகம்” என்கிறபடியே பஹ்வர்த்தமான ஏகசப்தம் இங்கு கேவல பர்யாயமாய் “மாமேவ யே ப்ரபத்யந்தே”, “தமேவ சரணம் கச்ச” இத்யாதிகளிற்படியே அவதாரணார்த்தமாய் சரண்யகுண பௌஷ்கல்யத்தாலே ஸ்வஸ்வாதந்த்ர்யாதிகளை நிவர்த்திப்பிக்கிறதென்றும் சொல்லுவர்கள். எங்ஙனேயென்னில் ஸ்வரக்ஷைக்கு உபயுக்தங்களான வசீகரணங்களை சாஸ்த்ர நியுக்தனான தான் அநுஷ்டிக்கையாலே ரக்ஷையிலே தனக்கும் கர்த்ருத்வம் தோற்றி, ஸித்தோபாயபூதனான சரண்யனோடொக்கத் தன்னையும் உபாயமாக எண்ணப்புக, இப்படிப் ப்ரஸக்தமான உபாய த்வித்வத்தைக் கழிக்கிறது ஏகசப்தம். அது கழிந்தபடி என்னென்னில், “கர்த்தா சாஸ்த்ரார்த்தவத்த்வாத்” என்கிறபடியே ஜீவனுக்குக் கர்த்ருத்வம் ப்ராமாணிகமேயாகிலும் இது பராதீநமுமாய் அல்பவிஷயமுமாய்ப் ப்ரதிஹதி யோக்யமுமாயிருக்கும். ஆகையால் இவன் தான் உபாயாநுஷ்டாநம் பண்ணிற்றும், “வரத தவ கலு ப்ரஸாதாத்ருதே | சரணாமிதி வசோ அபி மே நோதியாத்” என்று சொல்லுகிறபடியே அவன் கடாக்ஷமடியாக வருகையால் அவனாலே ப்ரேரிதனாய், அவன் ஸஹகரியாதபோது நீட்ட முடக்கமாட்டாதே அவன் கொடுத்த கரண களேபரங்களைக் கொண்டு அவன் காட்டின உபாயத்தை அவன் துணை செய்ய அநுஷ்டித்து அவன் கொடுக்கப் புகுகிற பலத்துக்குச் சாதகம் போலே அண்ணாந்திருக்கிற இவனை ஸ்வாதீந ஸர்வ விஷய அப்ரதிஹத கர்த்ருத்வமுடையவனோடே துல்யமாக இரண்டாம் ஸித்தோபாயமாக எண்ணுக்கை, விவேகியான முமுக்ஷுவுக்கு உசிதமன்றென்று ஏகசப்தத்தாலே சொல்லிற்றாயிற்று.
– இவ்விதம் பொருள் கொள்ளாமல், முக்ய அந்ய கேவலேஷு ஏகம் – “ஏகம்” என்னும் சொல்லானது முக்கியம், வேறு மற்றும் “அது மட்டுமே” என்னும் பொருள் தருவதாகும் – என்பதற்கு ஏற்ப பல பொருள்களைக் கூறுவதான “ஏக” என்னும் சொல்லானது இங்கு “அது மட்டுமே” என்னும் பொருள் தருவதாகச் சிலர் கூறுவார்கள். அதாவது, கீதை (7-14) - மாமேவ யே ப்ரபத்யந்தே – என்னை மட்டுமே சரணம் புகுந்து – என்றும், கீதை (18-62) - தமேவ சரணம் கச்ச – அவனை மட்டுமே சரணம் புகுந்து – என்றும் கூறுவதற்கு ஏற்ப சரணம் புகத் தக்கவனுடைய குணங்களின் நிறைவை வெளிப்படுத்தும்விதமாகவும், தனக்கு சுதந்திரமாக செயலாற்றும் சக்தி உள்ளது என்னும் எண்ணத்தை விலக்குவதற்காகவும் இவ்விதம் கூறப்படுகிறது. இது எப்படி (அதாவது “ஏகம்” என்பது எவ்விதம் ஜீவனின் சுதந்திரத்தன்மையை விலக்குகிறது என்பதை விளக்குகிறார்)? ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ளும்விதமாக, பகவானை வசீகரிக்கும் செயல்களைச் சாஸ்த்ரங்களில் கூறப்பட்டவிதங்களில் இயற்றுகிறான்; அப்போது அவன் தனது மனதில், தன்னைக் காக்கும் செயல்களில், ஸித்தோபாயமாக உள்ள பகவானைப் போன்றே தனக்கும் சம பங்கு உள்ளதாக எண்ணக்கூடும். இத்தகைய எண்ணத்தை “ஏக” என்னும் தனிச்சொல்லானது, பகவான் மட்டுமே ஒரே உபாயம் என்று உணர்த்தி, இரண்டாவது உபாயம் உள்ளது என்று எண்ணுவதைத் தடுக்கிறது (அதாவது பகவான் ஓர் உபாயம், தானே தனக்கு உபாயம் என்று இரண்டு உபாயங்கள்). எப்படித் தடுக்கிறது? ப்ரஹ்மஸூத்ரம் (2-3-33) - கர்த்தா சாஸ்த்ரார்த்தவத்த்வாத் – ஜீவாத்மாவிற்கு செயல் புரிதல் உள்ளது, இல்லையேல் சாஸ்த்ரங்கள் வீணாகும் - என்பதற்கு ஏற்ப, ஜீவாத்மாவிற்கு உள்ள செயலாற்றும் தன்மைக்குக் தகுந்த ப்ரமாணங்கள் உள்ளன; ஆனால் இத்தகைய செயலாற்றுதல் என்பது பகவானுக்கு உட்பட்டதாகவும், அற்பமானதாகவும், எளிதாகத் தடுக்கப்படக்கூடியதாகவும் உள்ளது. ஆகவே இவன் உபாயத்தைக் கைக்கொண்டாலும், அந்த நிலையானது ஸ்ரீவரதராஜஸ்தவம் (88) - வரத தவ கலு ப்ரஸாதாத்ருதே சரணாமிதி வசோ அபி மே நோதியாத் – வரதனே! உன்னுடைய கருணை இல்லையென்றால், “நீயே எனக்கு அடைக்கலம் ஆவாய்” என்னும் சொல் கூட எனது வாக்கில் வராது – என்பதற்கு ஏற்ப, பகவானுடைய திருவுள்ளத்தால்தான் உண்டாகிறது. பகவான் துணை செய்யவில்லையென்றால், சேதநனால் தனது கால்களையும் கைகளையும் நீட்டவும் மடக்கவும் கூட இயலாது. ஆகவே அவன் அளித்த சரீரம் மற்றும் இந்த்ரியங்களைக் கொண்டு, அவன் காண்பித்த உபாயத்தை, அவனுடைய துணை மூலம் கைக்கொண்டு, அவன் அளிக்கவுள்ள பலனை “மழை மேகத்தை நோக்கி வாயைத் திறந்து காத்திருக்கும் சாதகப்பறவை” போன்று எதிர்பார்த்து சேதநன் நிற்கிறான். ஆகவே சுதந்திரமானவனும், அனைத்து விஷயங்களிலும் எந்தவிதமான இடையூறும் இல்லாத ஸங்கல்பம் கொண்டவனும் ஆகிய ஸர்வேச்வரனுடன் இணைந்து, தன்னையும் ஒரு உபாயமாக எண்ணுதலானது, முமுக்ஷுவிற்குப் பொருந்தாது என்பதையே “ஏக” என்பது கூறுகிறது.