Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 69)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
“ஏக” என்பது உபாயமும் பலனும் ஒன்றே ஆகும் என்று கூறுதல்
மூலம் – “மாம்” என்கிற பதத்திலே ஏகவசநத்தாலே ஏகத்வம் தோற்றா நிற்கப் பின்பும் ஏகசப்தம், “தன்னைத் தந்த கற்பகம்” என்கிறபடியே ப்ராப்யனானவன் தானே ப்ராபகனானபடியாலே, உபாய பலைக்யத்தைச் சொல்லுகிறதென்றும் யோஜிப்பார்கள். இதுக்கு “மாம் ஏகம் ஏவ சரணம்” என்கிற ஸமாந ப்ரகரண வாக்யமும் அநுகுணம். ஏவகாரம் உண்டாயிருக்க, ஏகசப்தம் கிடந்தால் இதுக்கு அவதாரணமொழிய வேறே பொருள் கொள்ளுகை உசிதமிறே.
– “மாம்” என்னும் சொல்லின் மூலமே “ஒருவனை” என்னும் கருத்து வெளிப்படுகிறது; இவ்விதம் உள்ளபோது “ஏகம் – ஒருவனை” என்று இந்தக் கருத்தையே மீண்டும் ஒருமுறை தனியாக ஏன் கூறவேண்டும் என்ற கேள்வி எழலாம். இதற்கு ஒரு சிலர், “திருவாய்மொழி (2-7-1) - தன்னைத் தந்த கற்பகம் – என்பதற்கு ஏற்ப அடையப்பட வேண்டிய இலக்காக உள்ள அவனே, அந்த இலக்கை அடைய வைக்கும் உபாயமாகவும் உள்ளான் என்பதால், உபாயமும் பலனும் ஒன்றே என்பதை வெளிப்படுத்தவே ஆகும்”, என்று கூறுகிறார்கள். இந்தக் கருத்தானது, ஸ்ரீமத்பாகவதம் (11-12-14) – மாம் ஏகம் ஏவ சரணம் – என் ஒருவனை மட்டுமே சரணம் புகுவாயாக – என்று இதே போன்று வெளிப்படுத்தும் வரியுடன் ஒத்திருப்பதாகும். அந்த வரியில் “ஒருவனை” என்பது முன்பே உள்ளபோது, தனியாக மீண்டும் ஒருமுறை அதே சொல்லானது இடம் பெற்றால், அது வேறு ஒரு கருத்தை உணர்த்தவே ஆகும் என்று கொள்ளலாம் (அதாவது உபாயமும், பலனும் ஒருவனே என்று உணர்த்தவே ஆகும்).