Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 67)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“மாம்” என்னும் சொல்லின் விளக்கம்

மூலம் – இப்படி இக்காருண்யத்தினுடைய வாசியைக் கண்ட பூர்வர்கள், “ஸோஹம் தே தேவதேவேச நார்ச்சநாதௌ ஸ்துதௌ ந ச | ஸாமர்த்யவாந் க்ருபாமாத்ர மநோவ்ருத்தி: ப்ரஸீத மே” என்றும், “நின்னருளே புரிந்திருந்தேன்” என்றும், “துணியேன் இனி நின்னருளல்லது எனக்கு” என்றும், “உனதருளே பார்ப்பன் அடியேனே” என்றும், “திருமாமகளைப் பெற்றும் என்னெஞ்சகங் கோயில் கொண்ட பேரருளாளன்” என்றும், “உன் திருவருளாலன்றிக் காப்பதரிது” என்றும், “நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும்” என்றும், “ஆவா என்று அருள் செய்து” என்றும், “க்ருபயா கேவலம் ஆத்மஸாத்குரு” என்றும், “கரீச தேஷாமபி தாவகீ தயா ததாத்வக்ருத்ஸைவ து மே பலம் மதம்” என்றும், இப் ப்ரகாரங்களிலே இக் க்ருபாகுணத்தைத் தஞ்சமாக அநுஸந்தித்து ஸம்பந்தத்தையும் குணாந்தரங்களையும் காருண்யத்துக்குச் சொல்லிற்றுச் செய்வனவாக்கித் தாங்கள் காருண்யைகாந்திகளாய்ப் போந்தார்கள். பிராட்டியும் குணாந்தரங்களிருக்க, “வதார்ஹமபி காகுத்ஸ்த: க்ருபயா பர்யபாலயத்” என்று அருளிச்செய்தாள். கத்யத்திலும் “மதீயயைய தயயா” என்கையாலே, இக் க்ருபையின் ப்ராதாந்யம் விலக்ஷிதம்.

– இப்படியாகப் பகவானின் காருண்யத்திற்கு உள்ள மேன்மையான வேறுபாட்டை அறிந்த பூர்வாசார்யர்கள், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-7-70) - ஸோஹம் தே தேவதேவேச நார்ச்சநாதௌ ஸ்துதௌ ந ச | ஸாமர்த்யவாந் க்ருபாமாத்ர மநோவ்ருத்தி: ப்ரஸீத மே – தேவர்களின் தேவனே! நான் உன்னை அர்ச்சனை செய்வதற்கோ அல்லது துதிப்பதற்கோ சக்தி அற்றவன் ஆவேன். ஆகவே நீ கருணையை மட்டுமே உனது சிந்தனையில் நிறுத்தி எனக்கு அருளவேண்டும் – என்றும், பெரியாழ்வார் திருமொழி (5-4-1) - நின்னருளே புரிந்திருந்தேன் – என்றும், பெரியதிருமொழி (11-8-8) - துணியேன் இனி நின்னருளல்லது எனக்கு – என்றும், பெருமாள் திருமொழி (5-4) - உனதருளே பார்ப்பன் அடியேனே – என்றும், பெரியதிருமொழி (9-5-10) - திருமாமகளைப் பெற்றும் என்னெஞ்சகங் கோயில் கொண்ட பேரருளாளன் – என்றும், திருவிருத்தம் (62) - உன் திருவருளாலன்றிக் காப்பதரிது – என்றும், திருவாய்மொழி (9-2-1) - நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் – என்றும், திருவாய்மொழி (5-1-9) - ஆவா என்று அருள் செய்து – என்றும், ஸ்தோத்ரரத்னம் (48) - க்ருபயா கேவலம் ஆத்மஸாத்குரு – உன்னுடைய க்ருபை மூலம் மட்டுமே கொண்டு, எனது முயற்சி ஏதும் இன்றி – என்றும், வரதராஜஸ்தவம் (94) - கரீச தேஷாமபி தாவகீ தயா ததாத்வக்ருத்ஸைவ து மே பலம் மதம் – வரதனே! உனது தயை என்பதே எனக்கு ஏற்ற வலிமை அளிக்கும் என்பது உறுதி – என்றும் பல இடங்களில் இந்தக் கருணை என்னும் குணத்தையே தாங்கள் தஞ்சம் புகுவதற்கு ஏற்றதாக எண்ணினர். ஆகவே அவனுடன் உள்ள ஸம்பந்தம் மற்றும் மற்ற குணங்கள் ஆகியவற்றை, அவனைத் தாங்கள் கூறியதைச் செய்யவைக்கும் என்று சிந்தித்து, அவனுடைய கருணை என்னும் குணத்தில் மட்டுமே நிலைநின்றார்கள். பெரியபிராட்டியும், அவனிடம் பல குணங்கள் உள்ளபோதிலும், இராமாயணம் ஸுந்தரகாண்டம் (38-34) - வதார்ஹமபி காகுத்ஸ்த: க்ருபயா பர்யபாலயத் – சரணம் புகுந்த காகமானது அழிக்கப்படவேண்டியவன் என்றபோதிலும் தனது கருணையால் காப்பாற்றினான் – என்றே அனுமனிடம் கூறினாள். சரணாகதி கத்யத்திலும் - மதீயயைய தயயா – (ஸ்ரீரங்கநாதன் உரைப்பது) எனது கருணையால் மட்டுமே – என்று அருளிச்செய்தான். ஆகவே அவனுடைய க்ருபையின் முதன்மை என்பது தெளிவாகிறது.