Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 66)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“மாம்” என்னும் சொல்லின் விளக்கம்

மூலம் – உக்தமான சரண்ய குணங்களில், ஆச்ரித ஸம்ரக்ஷணத்துக்குப் ப்ரதாந தமங்கள் “ஸர்வஜ்ஞ: அபி ஹி விச்வேச: ஸதா காருணிக: அபி ஸந்” என்று பகவச்சாஸ்த்ரத்திலும், “த்வத் ஜ்ஞாந சக்தி கருணாஸு ஸதீஷு” என்கிற அபியுக்த வாக்யத்திலும் ஸங்க்ரஹிக்கப்பட்டன. இவை மூன்றிலும், ஜ்ஞாந சக்திகள் நிக்ரஹ அநுக்ரஹ ஸாதாரணங்கள். ஸ்வாமித்வமும், லீலோபகரண மாக்குகைக்கும் போகோபகரண மாக்குகைக்கும் பொதுவாகையாலே, ஜ்ஞாந சக்திகளை ரக்ஷணைகாந்தங்களாக நியமிக்கமாட்டாது. காருண்யமும் இதின் சுவடுகளான ஸௌசீல்ய வாத்ஸல்யாதிகளும் அநுக்ரஹத்துக்கு ஏகாந்தங்கள்.

– அனைவரும் சரணம் புகத்தக்கவிதத்தில் உள்ளதாகக் கூறப்பட்ட குணங்களில், தன்னை அடைந்தவர்களைக் காப்பதற்கு மிகவும் அவசியமான குணங்களாக உள்ளவை பகவத் சாஸ்த்ரமாகிய லக்ஷ்மீ தந்த்ரத்தில் (17-78) - ஸர்வஜ்ஞ: அபி ஹி விச்வேச: ஸதா காருணிக: அபி ஸந் – அனைத்தையும் நியமிக்கும் அவன், அனைத்தையும் அறிந்தவனாகவும், கருணை நிறைந்தவனாகவும் – என்றும், சான்றோர் அருளிச்செய்த அதிமாநுஷஸ்தவத்தில் (61) - த்வத் ஜ்ஞாந சக்தி கருணாஸு ஸதீஷு – உனது ஞானம், சக்தி, கருணை போன்றவை உள்ளபோது – என்றும் சுருக்கமாகக் கூறப்பட்டன. இந்த மூன்று குணங்களில் ஞானம் மற்றும் சக்தி ஆகியவையே தண்டிப்பதற்கும், அனுக்ரஹம் செய்வதற்கும் அவசியமானவை ஆகும். இவனுடைய எஜமானத்தன்மை என்பது ஜீவாத்மா மூலமாக ஸம்ஸாரத்தில் லீலைகளை அனுபவிக்கவும், அந்த ஜீவாத்மா மோக்ஷம் அடைந்த பின்னர் அவன் மூலமாக இன்பத்தை அனுபவிக்கவும் அவசியமாக உள்ளது. ஆகவே இத்தகைய எஜமானத்தன்மையானது பகவானுடைய ஞானம் மற்றும் சக்தி ஆகிய குணங்கள், காக்கும் செயலில் மட்டுமே ஈடுபடும்படியாகக் கட்டுப்படுத்த இயலாது. ஆனால் காருண்யமும், அதன் மூலம் வெளிப்படுவதான ஸௌசீல்யம் மற்றும் வாத்ஸல்யம் ஆகியவை அனுக்ரஹம் செய்வதற்காக மட்டுமே உள்ளன.