Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 64)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
“மாம்” என்னும் சொல்லின் விளக்கம்
மூலம் – இவ்வித்யைக்கு விசேஷித்து விவேத்யாகாரம் நிரபேக்ஷ உபாயத்வம். இதுக்கு அபயுக்தாகாரங்களெல்லாம் “மாம்”, “ஏகம்” என்கிற பதங்களிலே விவக்ஷிதங்கள். “ஏஷ நாராயண: ஸ்ரீமாந்” இத்யாதிகளிலே நிர்திஷ்ட ப்ரகாரனான சரண்யனைச் சொல்லுகிற “மாம்” என்கிற பதத்தாலே திருமந்த்ரத்திலும் த்வயத்திலும் ப்ரகாசிதமான ஸர்வரக்ஷகத்வமும் ஸர்வசேஷித்வமும் ஸ்ரீய:பதித்வமும் நாராயணத்வமும், இவற்றால் ஆக்ருஷ்டமாய்ப் பரத்வ ஸௌலப்யங்களுக்கு உறுப்பாய் வருகிற ஸர்வஜ்ஞத்வ ஸர்வசக்தித்வாதிகளும், பரமகாருணிகத்வ ஸௌசீல்ய வாத்ஸல்யாதிகளும், த்வயத்தில் த்விவசநாந்த பதத்தாலே தோற்றின சுபாச்ரயமாய்ப் பரத்வ ஸௌலப்ய வ்யஞ்ஜகமான பார்த்தஸாரதியினுடைய திவ்யமங்கள விக்ரஹ விசேஷமும் காட்டப்படுகின்றன.
– இந்த ப்ரபத்தின் என்னும் வித்யையின் தனித்தன்மை என்னவென்றால், இது வேறு எதனையும் தனது அங்கமாக எதிர்பார்க்காத உபாயமாக இருத்தலே ஆகும். இத்தகைய தன்மைக்குத் தேவையான மற்ற தன்மைகள் அனைத்தும் “மாம், ஏகம்” ஆகிய சொற்களால் சிறப்பித்துக் கூறப்படுகின்றன. ஹரிவம்சம் (113-62) - ஏஷ நாராயண: ஸ்ரீமாந் – இந்த நாராயணன் – என்றுள்ள பல வாக்கியங்களில் கூறப்பட்ட குணங்களைக் கொண்டவனாக உள்ளவனும், அனைவரும் சரணம் புகலாம்படி உள்ளவனும் ஆகிய அவனையே “மாம்” என்னும் சொல்லானது குறிக்கிறது. இந்தச் சொல்லானது – திருமந்த்ரம் மற்றும் த்வயம் ஆகியவற்றில் வெளிப்படுகின்ற அனைவரையும் காக்கும் தன்மை, அனைத்திற்கும் எஜமானனாக உள்ள தன்மை, மஹாலக்ஷ்மியின் நாயகனாக உள்ள தன்மை, நரர்கள் தங்கும் இடமாக உள்ள தன்மை போன்ற பலவற்றையும் காண்பிக்கிறது; இது மட்டும் அல்லாமல், இவை மூலம் வெளிப்படுகின்ற அவனுடைய குணங்களான உயர்ந்த தன்மை மற்றும் எளிமையான தன்மை ஆகியவற்றுக்கு அடிப்படையாக உள்ள அனைத்தையும் அறிந்த தன்மை மற்றும் அனைத்து சக்தியையும் கொண்ட தன்மை முதலானவற்றையும் காண்பிக்கிறது; மேலும், “மாம்” என்னும் சொல்லானது மிகுந்த கருணை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் பாகுபாடு இன்றி அனைவருடனும் ஒரே போன்று பழகும் தன்மை, வாத்ஸல்யம் போன்றவற்றையும் உணர்த்துகிறது; மேலும், த்வயத்தில் உள்ள “சரணௌ” என்னும் சொல்லால் கூறப்படுவதான எளிதாக அண்டவல்லதாகவும், அனைத்து மங்களங்களையும் அளிப்பதாகவும், பரத்வம் – ஸௌலப்யம் முதலானவற்றை வெளிப்படுத்துவதாகவும் உள்ள பார்த்தசாரதியின் திவ்யமங்கள திருமேனியின் சிறப்பும் “மாம்” என்னும் சொல்லால் உணர்த்தப்படுகிறது.