Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 62)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
க்ருஷ்ணனின் அவதார ரஹஸ்யம்
மூலம் – இவ்விரண்டு பதத்திலும் ஸர்வரக்ஷகனான ஸர்வசேஷி ரக்ஷணத்துக்கு அவஸரம் பார்த்து நிற்கிற நிலையும் தோற்றுகிறது. இப்படி அவஸர ப்ரதீக்ஷனான ஈச்வரன், “ரக்ஷாபேக்ஷாம் ப்ரதீக்ஷதே” என்கிறபடியே, “என்றோ நம்மை இவர்கள் அபேக்ஷிப்பது?” என்கிற அபிப்ராயத்தாலே அபிமுகனாய் நிற்கிற நிலை, “மாம்” என்கிற பதத்திலே ஸூசிதம். “என்று நாம் இவர்களை அழுக்குக் கழற்றின ஆபரணத்தைப்போலே அங்கீகரிப்பது” என்கிற அபிப்ராயத்தாலே, ஸத்வரனாய்த் தன் பேறாகப் பலம் குடுக்க நிற்கிற நிலை “அஹம்” என்கிற பதத்திலே காட்டப்படுகிறது.
– இப்படியாக “மாம், அஹம்” என்னும் இரண்டு சொற்கள் மூலமும், அனைத்தையும் காப்பவனும், அனைத்திற்கும் எஜமானனும் ஆகிய பகவான், ப்ரபந்நனைக் காப்பாற்றுவதற்கான நேரத்தை எதிர்பார்த்தபடி நிற்கின்ற நிலையானது வெளிப்படுகிறது. இவ்விதம் சரியான நேரத்தை எதிர்பார்த்தபடி உள்ள ஈச்வரன், லக்ஷ்மீ தந்த்ரம் (17-78) - ரக்ஷாபேக்ஷாம் ப்ரதீக்ஷதே – காக்கவேண்டும் என்னும் விண்ணப்பத்தை எதிர்பார்க்கிறான் – என்பதற்கு ஏற்ப, “இவர்கள் நம்மை என்று விண்ணப்பிப்பார்கள்?” என்று ஆவலுடன் நிற்கின்ற நிலையானது “மாம்” என்னும் சொல் மூலம் சூசகமாக வெளிப்படுகிறது. “அழுக்கு நீக்கப்பட்ட ஆபரணம் போன்று (ப்ரக்ருதியிலிருந்து விடுபட்ட இந்த ஜீவாத்மா) என்று இவர்களை நாம் ஏற்றுக்கொள்வது?” என்று எண்ணியபடி, நமக்கான பலனை விரைவாக அளித்தலே தனது பயன் என்று ஈச்வரன் நிற்கும் நிலையை “அஹம்” என்னும் சொல் காண்பிக்கிறது.