Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 61)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

க்ருஷ்ணனின் அவதார ரஹஸ்யம்

மூலம் – இங்கு “மாம்”, “அஹம்” என்கிற பதங்களுக்கு அடைவே அவதார ரஹஸ்யத்திலும், புருஷோத்தமத்வ ப்ரதிபாதந ப்ரகரணத்திலும் சொல்லுகிறபடியே, ஸௌலப்யத்திலும் ஸ்வாதந்த்ர்யத்திலும் ப்ராதாந்யேந நோக்கு. அவதாரஸ்ய ஸத்யத்வம் அஜஹத் ஸ்வ ஸ்வபாவத்வ சுத்தஸத்வ மயத்வம் ச ஸ்வ இச்சா மாத்ர நிதாநதா தர்ம க்லாநௌ ஸமுதய: ஸாது ஸம்ரக்ஷணார்ததா இதி ஜந்ம ரஹஸ்யம் யோ வேத்தி ந அஸ்ய புநர்பவ: இவ் அவதார ரஹஸ்ய ஞானம் ஸத்வாரக ப்ரபத்தி நிஷ்டனுக்கு உபாயபூரகம், ஸ்வதந்த்ர ப்ரபத்தி நிஷ்டனுக்கு ஸ்வதந்த்ரனுடைய ஸௌலப்யத்தைக் காட்டும். இப் ப்ரகரணங்கள் இரண்டிலும் ஸித்தமான ஸௌலப்யமும் ஸ்வாதந்த்ர்யமும் ஒன்றுக்கொன்று துணையாயிருக்கும். (1) ஸ்வதந்த்ரஸ்ய அபி ந ஏவ ஸ்யாத் ஆச்ரயோ துர்லபஸ்ய து அஸ்வதந்த்ராத் பலம் ந ஸ்யாத் ஸுலபாத் ஆச்ரிதாத் அபி (2) அஸ்வதந்த்ரே ந கைங்கர்யம் ஸித்யேத் ஸ்வைர ப்ரஸங்கத: துர்லபே ஸாத்யம் அபி ஏதத் ந ஹ்ருதயம் லோகநீதித: ஆகையாலே கேவலஸுலபமான த்ருணாதிகளைப் போலன்றிக்கே ச்லாத்யனுமாய், துர்லபமான மேருவைப் போலுமன்றிக்கே ஸுலபன்ய்மாய்ப் பரனுமான சரண்யன் ஆச்ரயணீயனுமாய்ப் ப்ராப்யனுமாகிறான்.

– சரமச்லோகத்தில் உள்ள “மாம்” என்னும் சொல்லானது ஸ்ரீமத்பகவத்கீதையில் க்ருஷ்ணன் தனது அவதார ரஹஸ்யத்தை வெளியிடும் இடத்தில் (இது கீதையில் 4-4 தொடங்கி 4-9 முடிய உள்ள ச்லோகங்கள்) உணர்த்தப்படும் ஸௌலப்யத்தைக் காட்டுவதாகும்; “அஹம்” என்னும் சொல்லானது ஸ்ரீமத்பகவத்கீதையின் புருஷோத்தம அத்யாயத்தில் வெளிப்படுகின்ற சுதந்திரமானவன் என்னும் தன்மையைக் காட்டுவதாகும். அவதாரஸ்ய ஸத்யத்வம் அஜஹத் ஸ்வ ஸ்வபாவத்வ சுத்தஸத்வ மயத்வம் ச ஸ்வ இச்சா மாத்ர நிதாநதா தர்ம க்லாநௌ ஸமுதய: ஸாது ஸம்ரக்ஷணார்ததா இதி ஜந்ம ரஹஸ்யம் யோ வேத்தி ந அஸ்ய புநர்பவ: - ஸர்வேச்வரனுடைய அவதாரத்தின் ஸத்யமான தன்மை, அவதாரங்களில் தனது இயல்பை விடாத தன்மை, சுத்தமான ஸத்வத்தை மட்டுமே கொண்ட தன்மை, தனது ஸங்கல்பத்தை மட்டுமே அனைத்திற்கும் காரணமாகக் கொண்ட தன்மை, தர்மத்திற்கு இழிவு ஏற்படும்போது அவதரிக்கும் தன்மை, ஸாதுக்களை ரக்ஷித்தலையே தனது பயனாகக் கொண்டுள்ள தன்மை என்பதான க்ருஷ்ணனுடைய அவதார ரஹஸ்யத்தை அறியும் ஒருவனுக்கு மறுபிறவி இல்லை. இவ்விதமாக உள்ள அவதார ரஹஸ்யம் குறித்த ஞானமானது - ப்ரபத்தியை அங்கமாகக் கொண்டு பக்தியில் நிலைநிற்பவனுக்கு, அவனுடைய உபாயத்தை பூர்த்தி செய்ய உதவும்; ப்ரபத்தியையே நேரடியான உபாயமாகக் கொண்டவனுக்கு, பகவானுடைய ஸௌலப்யத்தை உணர்த்தும். இங்கு இந்த விஷயத்தில் பகவானுடைய சுதந்திரத்தன்மையும், ஸௌலப்யமும் ஒன்றுக்கொன்று துணை செய்தபடியே இருக்கும். (1) ஸ்வதந்த்ரஸ்ய அபி ந ஏவ ஸ்யாத் ஆச்ரயோ துர்லபஸ்ய து அஸ்வதந்த்ராத் பலம் ந ஸ்யாத் ஸுலபாத் ஆச்ரிதாத் அபி – சுதந்திரமாக ஒருவன் இருந்தாலும் அவன் தன்னை அண்டுவதற்கு மிகவும் கடினமானவனாக இருந்தால், அவனை அடைதல் நிகழாது. அடைவதற்கு எளியவனாக இருந்து, சுதந்திரமானவனாக இல்லையென்றால், அவனிடமிருந்து எந்தப் பயனும் உண்டாகாது. (2) அஸ்வதந்த்ரே ந கைங்கர்யம் ஸித்யேத் ஸ்வைர ப்ரஸங்கத: துர்லபே ஸாத்யம் அபி ஏதத் ந ஹ்ருதயம் லோகநீதித: - சுதந்திரமாக இல்லாத ஒருவனிடம் நாம் நமது விருப்பத்தின்படி கைங்கர்யம் செய்ய இயலும் என்பதால், நேர்மையான கைங்கர்யம் ஏற்படாது. அண்டுவதற்குக் கடினமாக இருக்கும் ஒருவனிடம் கைங்கர்யம் செய்யமுடியும் என்றாலும், அது கட்டாயத்தின் அடிப்படையில் செய்வதால் செய்பவனுக்கு மனநிறைவை அளிக்காது. ஆகவே மிகவும் எளிமையாக உள்ள புல் போன்று அல்லாமல் சிறந்தவனாகவும், அடைவதற்கு இயலாத மேருமலை போன்று அல்லாமல் அடைவதற்கு எளியவனாகவும், உயர்ந்தவனாகவும், சரணம் புகத்தக்கவனாகவும் உள்ள அவனே அண்டி நிற்பதற்கான பயனாகவும் உள்ளான்.